Friday 20 April 2012

அண்ணா பல்கலைக்கழகம்: இரண்டு தற்கொலைகளும் சில கேள்விகளும்

தற்கொலை செய்துகொண்ட இரண்டு அண்ணா பல்கலைகழக மாணவர்களும் தமிழ் வழியில் பயின்றவர்கள் என தெரியவருகிறது. இருவரும் அதிக பாடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்... அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

அண்ணா பலகலைகழகத்திற்குள் படிக்க இடம் பிடித்திருக்கிறார்கள் என்றால் +2வில் நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களாகவே அவர்கள் இருந்திருக்க வேண்டும். அத்தகைய மாணவர்களால் முதல் ஆண்டு பாடங்களிலேயே தேர்ச்சி பெற முடியவில்லை எனில் அது கல்வி முறை பற்றி பல சந்தேகங்களை எழுப்புகிறது.

அவர்களுக்கு பாடங்கள் தமிழ் வழியில் நடத்தப்படுகின்றனவா அல்லது ஆங்கில வழியில் படித்து தேர்வை மட்டும் தமிழ் வழியில் எழுத வேண்டுமா. அப்படி இருந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பாடங்கள் எப்படி புரிந்திருக்கும்.

தமிழ் வழிக் கல்வியை காலாவதியாக்கிட அதன் மேல் மாணவர்களுக்கு ஈர்ப்பு வராமல் இருக்க வேறு ஏதேனும் திட்டமிட்ட சதி நடக்கிறதா. இரண்டு தமிழ் வழி மாணவர்களின் தற்கொலைகள் இப்படி பல கேள்விகளை என்னுள் எழுப்புகிறது.

என் எண்ணம் தவறாகவே இருப்பின் மிகவும் சந்தோஷம். உயர் கல்வியில் தமிழ் வழிக் கல்வியை முழுதாய் அமல்படுத்த விரும்பவில்லை எனில் அரசியலுக்காக அதை வைத்து மாணவர்களின் உயிரோடும், அவர்களின் எதிர்காலத்தோடும் அதன் மூலம் அவர்களையே நம்பியிருக்கும் குடும்பங்களையும் பாழாக்காமல் இருக்கலாம். உயர் கல்வியில் தமிழ் வழிக் கல்வியை தேர்ந்தெடுக்கும் பல மாணவர்கள் அவர்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரியாக் இருப்பவர்கள் என்ற சமூக கண்ணொட்டத்தில் பார்த்தால் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல் சரிவர கிடக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அரசு பள்ளிகளிலேயே தமிழ் வழிக் கல்வியை செம்மை படுத்துவதை விட்டுவிட்டு இந்த வருடம் மேலும் 30 அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அமல் படுத்தியிருக்கும் இந்த அரசின் செயல் இத்தகைய சந்தேகங்களை மேலும் வலுவாக்குகிறது.

பி.கு: இவர்கள் இருவரும் தமிழ் வழியில் +2 படித்தவர்கள். தமிழ் வழியில் உயர் கல்வியும் படித்தார்களா என்று என்னால் உறுதி செய்ய முடியவில்லை. முயன்று கொண்டிருக்கிறேன்.