Thursday 10 January 2013

என்றுதானே சொன்னார்கள் - சாம்ராஜ்


சாம்ராஜ் – இவரை எனக்கு எப்படி தெரியும். இவரை ஒரு மனிதராக அவரது திறமைகளை பற்றி வியந்து ப்ரியா என்ற எனது நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார். இப்படிதான் இவர் எனக்கு அறிமுகம். இவரது எழுத்துக்களை ப்ற்றி ப்ரகாஷ் என்ற மற்றுமொரு நண்பர் அடிக்கடி பேசி வந்தார். ஒரு பெண் மற்றொரு ஆணின் திறமைகளை பற்றி நம்மிடம் அதிகம் புகழும் போது அவனை எப்படி மட்டம் தட்டுவது என ஒரு சராசரி ஆணுள் எழும் காழ்ப்புணர்ச்சியும், அவர் மேல் ஏற்பட்டிருந்த ஒரு இனம் புரியாத ஈடுபாடும் ஏற்படுத்திய ஆர்வத்தில் சாம்ராஜின் கவிதை தொகுப்பை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.

“என்றுதானே சொன்னார்கள்கவிதைத் தொகுப்பின் தலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு கவிதையின் தலைப்பும் வித்யாசமாய் இருக்கிறது. கவிதைகளுக்கும் மற்ற வரி வடிவ கலைக்கும் ஒரு மிகப் பெரிய வித்யாசம் உண்டு. கவிதைகள் எல்லா இட்த்திலும் நம்மை சிந்திக்க வைத்து ஒரு சபாஷ் போட வைக்கவேண்டும். தலைப்புகளே யோசிக்க வைக்கின்றன. பாடப்படும் பொருள் ஒவ்வொரு கவிதையிலும் ஆச்சர்யப்படுத்துகிறது.

கவிதையின் கரு – நாயகன் – மைய்யம் இதுவரை யாரும் தொடாத விஷயங்கள். இதெல்லாம் எப்படி இவர் கண்ணில் பட்டன என்பதும், அவற்றை அவர் பார்க்கின்ற விதமும் என்னை மிகவும் வியக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு “ஒரு கால்பந்தின் முழுமைஎன்ற கவிதையில் ஒரு பாழாகிப் போய் குப்பையில் கிடக்கும் ஒரு கால்பந்தை கருவாக வைத்து எழுதியிருக்கிறார். அதில்

கைவிடப்பட்ட ஷூக்களோடு
காமமுண்டு

வயதான குஷ்டரோகிக்குப் பிச்சையிடுவதாய்
காற்று எப்பொழுதேனும்
அதை உருட்டி விளையாடுவதுமுண்டு

என்ற இந்த இரண்டு வரிகள் பாழாகிப் போய் குப்பையில் கிடக்கும் அந்த கால்பந்தின் மனநிலையை சாம்ராஜ் எப்படி பார்க்கிறார் என்பதை புரியவைக்கும்.

அவரது சமூக கோவங்கள் உள்ளது உள்ளபடி கூறும் பாங்கு அனைத்தும் எனக்கு அவரது கவிதைகளின் மீதான காதலை கூட்டியது. ஒரே மூச்சில் அவரது 40 சொச்ச கவிதைகளையும் படித்து முடித்தேன். இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரை ஒவ்வொரு கவிதைகளையும் குறைந்தது 2 முறையாவது படித்துவிட்டேன். கவிதைகள் என்றாலே அலங்கார வார்த்தைகள் என்ற ஒரு விதி சில காலமாக உடைக்கப்பட்டு வருகிறது. அலங்கார பொய் ஜோடனைகளுக்கு பதிலாக நிர்வாண உண்மைகளால் கவிதைகள் இயற்றப்படுகின்றன. தேவையில்லாத வார்த்தைகள் இல்லை. இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விஷயத்தை விளக்குகின்றன. சாம்ராஜின் கவிதைகள் அனைத்தும் இந்த ரகம். “கறை நல்லதுஎன்ற ஒரு கவிதையில்

கூடுதலாக
நூறு ரூபாய் கேட்டதற்கு
பளிங்குத் தரையில் ரத்தம் சிந்தினாள்

இந்த வரிகள் எனக்கு வலி, சமுதாய நிலமை, வன்முறை என பல விஷயங்களை சொல்கிறது. வேறு சிலருக்கு வேறு விதமாக புரியும் இதுவும் ஒரு கவிஞனின் வெற்றி. படிப்பவரின் மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப அவனது வரிகளின் கருத்து மாறி தோற்றமளிக்க வேண்டும். அதை சாம்ராஜின் கவிதைகளில் நான் பார்க்கிறேன்.

கோமாளிகளே கூட வருகிறார்கள்என்ற ஒரு கவிதையில் சீட்டு கட்டு விளையாட்டை பற்றி அவர் பாணியில் எழுதியிருக்கிறார். அதில் அவர் வேறு ஏதாவது சேதி சொல்லியிருக்கிறாரா என இதுவரை 5 முறை படித்துவிட்டேன்.

கவிழ்ந்து கிடக்கையில் பேதங்கள் இல்லை
சீட்டுகளிடையே.

இந்த கடைசி வரி பல விஷயம் சொல்கிறது.

என்னை பல இடங்களில் இழுத்து நிறுத்தி பாராட்டை பெற்ற பின்னரே அடுத்ததுக்கு போக விடுகிறார் சாம்ராஜ். ஒரே ஒரு உதாரணம் அந்த வகையில் “Canon Fm 10 கேமராக்கள் கிடைப்பதில்லைஎன்ற கவிதையில்

நான் மாத்திரமே
மற்றொன்றையும் அறிவேன்
நல்ல பகலில் எடுக்கப்பட்ட
புகைப்படங்களே அவை.

என்ற வரிகள் என்னை wow! சொல்ல வைத்த பல வரிகளில் ஒன்று. இந்த கவிதையில் தலைப்பே என்னை யோசிக்க வைத்தது.

சிந்திக்க வைத்தவர் “அவள் நைட்டி அணிந்ததில்லை  என்ற கவிதையில் என்னை கண்கலங்க வைத்துவிட்டார். மிகச் சிறந்த கவிதையாக “நாத்தள்ளத் தொங்கும் புளியமரங்கள்என்று எனக்கு படுகிறது. மீண்டும் மீண்டும் அதை படித்துக்கொண்டிருக்கிறேன் கட்டபொம்மனை நினைத்துக்கொண்டே. இப்படி சொல்லிகொண்டு போனால தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளை பற்றியும் சொல்லலாம். ஆகவே இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.

சில குறைகள். அவற்றை குறைகள் என்று சொல்வதைவிட என் அறிவிற்கு எட்டாதவை எனத்தான் கூறவேண்டும். கவிதைகளில் பல இடங்களில் வட்டார விஷயங்கள், வழக்குகள் சில எனக்கு புரியவில்லை. சாம்ராஜ் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல சிறந்த படிப்பாளியுமென கேள்விபட்டிருக்கிறேன். அதை இங்கு காணவும் முடிந்த்து. அவர் படித்தவைகளில் இருந்து சம்பவங்கள் பாத்திரங்கள்(Characters) சில அவரது கவிதைகளில் வருகின்றன. அவற்றை பற்றி அறியாததால் சில இடங்களில் என் புரிதல்கள் தடைபட்டன.

கவிதை படிக்கும் ஆசையை தூண்டும் ஒரு கவிதை தொகுப்பு இது. படித்து முடித்துவிட்டு வேறு யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கிய்துதான், ஆனால் படித்து முடித்தவுடன் என் கலெக்‌ஷனில் இருக்க வேண்டிய ஒரு கவிதை தொகுப்பு என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன். சாம்ராஜின்மீது எனக்கிருந்து காரணமறியா உறுத்தல் மாறி மதிப்பு கூடியது என்ற உண்மையையும் என்னால் மறுக்க முடியவில்லை.


சாம்ராஜ் மதுரைக்காராம். தற்போது கேரள வாசம் என கேள்விப்பட்டேன்.

தொகுப்பின் பெயர் : என்றுதானே சொன்னார்கள்
கவிஞர் : சாம்ராஜ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், சென்னை
விலை : ரூ. 40

Monday 7 January 2013

பயணத் தூக்கம்

”Can I Share This Seat” என ஒரு யுவதி பேருந்தில் என் அருகில் அமர என்னிடம் அனுமதி பெற்று உட்கார்ந்தது இதுதான் முதல் முறை. முன் படிக்கட்டிற்கு அடுத்த இருவர் அமரும் இருக்கை என்பதால் மார்கழி குளிர் காற்று பேருந்தின் வேகத்துக்கு உள்ளே அடித்து அவளை ரொம்பவும் இம்சை படுத்தியது. அவளின் துப்பட்டாவை இழுத்தி போர்த்தி போராடிக் கொண்டிருந்தாள். வழக்கமாக இளம் பெண்களுக்கு எல்லைதாண்டி போய் உதவுவதில்லை என்றாலும் இருமுறை அந்த குளிரிலும் அவள் தூங்கி அந்தப் பக்கம் விழப் பார்க்க சரியென எழுந்து அவளை ஜன்னல் பக்கம் உட்கார வைத்துவிட்டு நான் அவள் இருக்கைக்கு மாறி அமர்ந்தேன். அடுத்த கனம் நல்லா இழுத்து போர்த்திகிட்டு ஒரு புழு சுருண்டு படுத்திருப்பதை போல தூங்கிப் போனாள். இதை பார்த்துகொண்டே திரும்பினால் சரியாக ஓட்டுனரின் இருக்கைக்கு பின் சீட்டு ஓரத்தில் ஒருத்தர் நல்லா தூங்கி விழுந்தார். இருவர் சீட்டில் இருந்தவரின் மடிமீது விழாத குறைதான். என் நினைவுகள் ஓட்டமெடுக்க ஆரம்பித்த்து. பயணத்தில் உறக்கம் இதை ஒட்டிய சுவாரஸ்யங்கள் என் நினைவில் ஓட ஆரம்பித்தது.

எனது பயணங்கள் பேருந்தில்தான் இருக்கும். எப்போதாவது காரிலும் வெகு சில சமயங்களில் இரயில்களிலும் இருக்கும். பேருந்து பயணங்களின்போதுதான் நான் பல சுவாரஸ்யமான தூக்கங்களை கண்டிருக்கிறேன். பேருந்தில் ஏறியவுடன் டிக்கெட் வாங்குகிறார்களோ இல்லையோ ஜன்னலோர இருக்கையை பிடித்து நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுவர் சிலர். அருகிலேயோ அல்லது பின் சீட்டிலேயோ அமர்ந்திருக்கும் நமக்குதான் மனசு திக் திக் என்றிருக்கும். அதுவும் அந்த கம்பி ஏதோ தலையணை போல அதில் வசதியாக தலை வைத்து உறங்க ஆரம்பித்துவிடுவார்கள். பாதி தலை வெளியே இருக்கும் பதற்றத்துடன் நான் அவர்களை எழுப்பி விட்டால் ஏதோ அவர்கள் சொத்தை நான் என்னவோ அபகரித்தவன் போல என்னை அப்படி முறைப்பார்கள். அதில் அவர் சரக்கடித்திருந்தால் சண்டைக்கே வந்துவிடுவார். இதில் இன்னொரு ரகம் இருக்கிறார்கள். கம்பி பத்தாது என்று கம்பியில் கையை லாவகமாக தலையணையாக்கி அதில் தலை வைத்து உறங்குவார்கள். கை முக்கால்வீசி எதிரில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை சைகை செய்வது போல இருக்கும். அங்கிருந்து டிரைவர் கத்துவார். அவரது குரலில் இருக்கும் பதற்றை பொறுத்து ஓட்டுனர் வந்து அந்த பயணியை எழுப்பி விட்டு போவார். இவர்களுக்கு அந்த ஜன்னல் கண்ணாடியை மூடிவிட்டு துங்குவதும் பிடிக்காது. இந்த வகையில் ஒருவர் சூப்பராக தூங்கினார். காலை வெளியே நீட்டிக்கொண்டு உறங்கினார். என்னவோ வீட்டில் தூங்குவது போல நினைப்பு போல. திமிர் முறிக்கிறேன் பேர்வழி என காலை வெளியே நல்லா நீட்ட, ஓட்டுனர் முதல் பேருந்தில் அனைவரும் கதறியே விட்டனர். அந்த பயணியை அடிக்காத குறைதான். அவரை எழுப்பி திரும்பி படுக்க வைத்தனர்.

சமீபத்தில் ஒரு பயணத்தில் ஒரு தாய் இரு பிள்ளைகளுடன் பேருந்தில் ஏறினார். டிக்கெட் எடுத்துவிட்டு சிறிய மகளை பெரிய மகனிடம் ஒப்புவிட்டு அவர் தூங்கிப் போனார். 5 அல்லது 6 வயதிருக்கும் அந்த மகன் திறந்திருக்கும் ஜன்னல் விழியே எட்டி எட்டி பார்த்துகொண்டு வந்தான். அந்த மகளோ ஓடுகின்ற பேருந்தை பொருட்படுத்தாமல் இருக்கையில் ஏறி நின்றுகொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். எதை பற்றியும் கவலையில்லாமல் அந்த தாய் உறங்கிப் போனாள். முதலில் என்ன பொறுப்பற்றத்தனம் என கோவம் வந்தது அவள் மீது.. ஆனால் அவ்வப்போது அவள் விழித்து அந்த பிள்ளைகளை கொஞ்சுவதை பார்க்கையில் அவளது பாசம் புரிந்தது. அம்மா வீட்டுக்கு போகிறாள் போலும். இரவு விழித்திருந்திருப்பாளாய் இருக்கும். கணவனின் காம இம்சையாயிருக்கலாம் அல்லது ஊருக்கு போவதால் வேலை ஏதாவது முடிக்க வேண்டியதாய் இருந்திருக்கலாம். அந்த அசதியில் தூங்குகிறாள் என நினைக்கையில் அவள் மேல் இருந்த அந்த வருத்தம் மறைந்தது. இருக்கையில் நின்றுகொண்டே பயணித்த அந்த மகளுக்கு நேர் பின் இருக்கையில் அமர்ந்து அவள் பேருந்து ஆட்ட்த்தில் கீழே விழுந்துவிடாமல் அவளுடன் விளையாடிக் கொண்டு கழிந்த்து அந்த மீதிப் பயணம்.

பயணத்தில் தூங்குபவர்களில் இந்த குடிகார்ர்கள் தனி ரகம். சில நேரங்களில் எரிச்சலைடைய வைத்துவிடுவார்கள். நல்ல குடியில் தூங்கி தூங்கி நம் மீது விழுவார்கள். இதில் சிலர் இடம் வந்தும் இறங்க மறுப்பார்கள். இதில் வெட்டி பந்தா வேறு. ஆனால் எத்தனை போதையாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் என்றவுடன் ஒழுங்காக எழுந்து இறங்கிவிடுவார்கள். ஆனால் குடித்துவிட்டு தூங்குவது போலீஸ்கார்ர் என்றால் என்ன செய்வது. அப்படி ஒரு போலீஸ்கார்ர் இற்ங்க வேண்டிய இடம் வந்தும் போதையில் தூங்க,  உடன் வந்த சக போலீசார் அவரை எழுப்ப முயன்று தோற்றுப் போய் அவர்கள் மட்டும் இறங்கி போய்விட்டார்கள். அவர் பேருந்து நிறுத்தம் சென்று இறங்கினாரா அல்லது என்ன செய்தார் என தெரியவில்லை அன்று. குடித்துவிட்டு ஏறுபவர்களால் உட்கார்ந்து தூங்க முடியாது. ஆகையால் சிலர் பேருந்து ஓட அரம்பித்தவுடன் நடக்கும் பாதையில் துண்டை விரித்து படுத்தே விடுவர், ஏதோ வீட்டில் தூங்குவது போல் தூங்கிக்கொண்டு வருவர் பயணம் முழுதும். இதில் தூக்கத்தை சாக்காக வைத்து பெண்களிடம் சில்மிஷம் செய்து வசைவாங்குபவர்களும் உண்டு.

இந்த குடிகார்ர்கள் ஒருவித வேடிக்கை என்றால் பயணத்தில் தூங்கிவிட்டு இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டவர்கள் ஆற்ற முடியாத கோவத்தில் பாவமாக தெரிவார்கள். அதுவும் இரவு நேரத்தில் நன்றாய் தூங்கிவிட்டு பல தூரம் தாண்டி தூக்கம் கலைந்து எழுந்து பார்த்து பதறுவார்கள். ஒரு முறை வீட்டுப் பெண்களோடு வந்திருந்த ஒருவர் இப்படி தூங்கி இட்த்தை தவறவிட்டு பின் என்ன செய்வது என தெரியாமல் தவித்ததை பார்க்க பாவமாய் இருந்தது. அடுத்த பேருந்து நிறுத்த்த்தில் இறங்கினார்கள். என்ன செய்தார்கள் என தெரியவில்லை. வழியில் இறங்க வேண்டியவர்கள் பக்கத்தில் இருப்பவரிடம் சொல்லலாம். அவர்கள் கண் அயர்ந்தாலும் பக்கத்தில் இருப்பவர் எழுப்பி விட வாய்ப்பு உண்டு. நடத்துனர் இப்படி இரவு பயணத்தில் பயணிகளை இடம் வந்ததும் எழுப்பி விடும் அளவிற்கு கூட மெனக்கெடவில்லை என்பது வருத்தமே. இது அவரின் வேலைகள் லிஸ்டில் இருக்கா இல்லையா என்ற வினா என்னுள் எழுந்தது.

நெடுந்தூரப் பயணங்களில் இருக்கையில் இடமில்லையெனில் உடனடியாக படிகட்டுகளில் அமர்ந்து பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணிக்கையில் அசதி மிகுதியாலும் முகத்தில் அறையும் காற்றின் இதத்தாலும் தூக்கம் வருவது இயல்பான ஒன்று. அவர்களுக்கு ஏதும் தெரியாது. அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் நமக்குதான் மனது பதபதைக்கும். அடிக்கடி அவர்களின் தூக்கம் கலைத்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

பயணத்தில் தூக்கம் என்பது உழைத்துவிட்டு பின் பயணிப்பவர்களுக்கு தானாய் வந்துவிடும். நின்றுகொண்டே தூங்குபவர்கள் பலர். தூங்கி அருகில் அமர்ந்திருப்பவர்கள் மீதெல்லாம் விழுந்து பல களேபரங்கள் நடந்திருக்கிறது. இடம் காலியாகியிருந்தால் இருக்கையில் படுத்து நிம்மதியாய் தூங்குபவர்கள் சிலர் உண்டு. சிலர் இதில் இன்னமும் கொடுமையாக ஒரு சீட்டில் தலை உடலை வைத்து எதிர் பக்க இரண்டு பேர் இருக்கையில் காலை நீட்டி தூங்குவர். இதில் குறுக்கே நடக்கும் வழியை அடைத்துக்கொண்டு தூங்குவர். நடு வழியில் இறங்குபவர்கள், ஏறுபவர்கள், நடத்துனர் எல்லோரும் அவரை தாண்டிதான் போகனும். இப்படி ஒருமுறை ஒருவர் படுத்திருக்கையில் அவரை தாண்டுகையில் ஒருவர் தடுக்கி விழுந்து பிரச்சனையானது சுவாரஸ்யமான கதை. பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தூங்கி தூங்கி தோளில் சாய்ந்து விழுபவர்கள் அடுத்த ரகம். அசதியில் தூங்கும் அவர்களை அடிக்கடி எழுப்பவும் பாவமாகவும் இருக்கும். அப்படியே விட்டுவிட்டால் அவர்களின் தலை மற்றும் தோளின் சுமை முழுவதையும் நம்மீது சாய்த்து தூங்கிவிடுவார்கள். ஒரு அளவுக்கு மேல் நமக்கு வலிக்க அரம்பித்துவிடும்.

இந்த பெண்கள் தூங்குவதை பார்ப்பதிலும் அதிக சுவாரஸ்யம் உண்டு. ஒரு ஆணாக இயற்கையிலேயே ஒரு பெண் உறங்குவதை ரசிக்கும் ரகம் நான். இந்த இளம் பெண்கள் – கல்லூரி அல்லது வேலைக்கு புதிதாக சேர்ந்தவர்கள் பயணிக்கையில் அவர்கள் தோழிகளுக்குள் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தோ அல்லது படுத்தோ தூங்கிகொண்டு பயணிப்பதை பார்க்கையில் நாய்க்குட்டிகள் ஒன்றின்மீது ஒன்று படுத்துகொண்டு உறங்குவதுதான் எனது நினைவிற்கு வரும். இவர்களிடம் ஆச்சர்யமாய் பார்ப்பது, பயணம் முடியும் தருவாயில் எழுந்து தலைவாரி பவுடர் பூசி ப்ரெஷ்ஷாக இறங்குவார்கள். இதில் ஒரு சிலர் பத்திரமாக எடுத்து வைத்த பூவையும் தலையில் சூடிக்கொள்வார்கள்.

கூட்ட நெரிசலில் ஏறும் மழலைகளை மடியில் தூக்கி அமர வைத்தால் உடனே அவர்கள் தூங்கிவிடுவார்கள். அந்த சுகம் அலாதியானது. ஏனென்றால் என் மகள் எங்கு பயணித்தாலும் என் மடியில் அமர்ந்துதான் பயணிக்க வேண்டும் என அடம்பிடிப்பாள். தனியாக இருக்கை வேண்டும் அவளுக்கு ஆனால் என் மடியில்தான் அமர்ந்திருப்பாள். நகர்ந்து அடுத்தவருக்கு இடம் தரலாம் என்றால் அழுவாள். எந்த மழலையை மடியில் சுமந்தாலும் அவள் நினைவுதான் வரும். இந்த மழலைகள் எப்போதும் அணைத்திருக்கும் என கையில் எச்சிலாபிஷேகம் செய்திவிட்டுத்தான் இறங்குவார்கள். இதில் ஒரு முறை ஒரு குழந்தை முச்சா போய் என் நிலையை தர்ம சஙகடமாக்கிவிட்ட்து.

ஓட்டுனர்களுக்கும் தூங்கும் பயணிகளுக்கும் ஆகாது. அவர்கள் அருகில் உட்கார்ந்து தூங்கினால் ஒரு சிலர் திட்டவே செய்வர். ஏனென்ன்றால் அந்த தூக்கம் அவர்களையும் தொற்றிக்கொள்ளுமாம். சில சமயம் தூங்கும் நட்த்துனர்களையே எழுந்து போய் பின் இருக்கையில் அமரச் சொல்லுவர். ஒரு இரவுப் பயணத்தில் பேருந்து ஆட ஆரம்பிக்க என்னவென்று பார்த்தால் ஓட்டுனருக்கு தூக்கம் சொக்குது. பயமுறுத்திவிட்டார். சரியென எழுந்து சென்று பேனட் மீதமர்ந்து அந்த பயனம் முழுதும் அவருடன் பேசிக்கொண்டே வந்தேன். உளுந்தூர்பேட்டையில் சாலையோரம் நடக்கும் விபச்சாரம் பற்றி விவரமாகவும், மோட்டார் தொழிலில் இருப்பவர்கள் அத்தனை பேருக்கும் எப்படி வேற்று பெண் தொடர்பு ஏற்படுகிறது என்பதை பற்றியெல்லாம் ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். மற்றொரு நாள் ஒரு ஏசி பேருந்தில் பயணிக்கையில் ஒரு பயணியின் குரட்டை சத்த்த்திற்கு பேருந்தை நிறுத்திவிட்டு யாரென்று பார்க்க சொன்னார் ஓட்டுனர். என்னவென்று விசாரித்தால் அதற்கு முந்தைய தினம் ஒரு குளிர்சாதன பேருந்தில் பயணித்த ஒரு பயணி பயணத்தின் போதே தூக்கத்திலேயே இறந்துவிட்டாராம். அதை சரியாக கவனிக்கவில்லையென நடத்துனர் ஓட்டுனர் மீது வழக்காம்.  

இப்ப்டியாக இன்னும் பல கதைகள் உண்டு. நான் பயணத்தில் வழக்கமாக தூங்க மாட்டேன். ஆனால் அசதியில் தூங்கினால் கால்களையெல்லாம் நீட்டிவிட்டுக்கொண்டு பரப்பிக்கொண்டும் தூங்கும் ரகம்தான். என்னால் சக பயணிகள் என்னவெல்லாம் கஷ்டம் அனுபவித்தார்களோ. நான் எத்தனை பேருக்கு காட்சி பொருளாய் ஆகியிருக்கிறேனோ.

Friday 4 January 2013

இன்று - ஜனவரி/04/2013

அரசாங்க ஊழியர்கள் அதிகமாக கூடும் இடங்களில் உட்கார்ந்து கவனித்தாலே பல உண்மைகள் கசியும்.. அரசு அலுவலகங்களுக்கு அருகில் இருக்கும் உணவகங்கள், டீ ஸ்டால்களில் இது சகஜம்.. இன்று நான் கவனித்த உரையாடல் மாநகராட்சி போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பேச்சை கேட்டு நான் அறிந்தவை..

புதிதாக 1500 அல்லது 800 பேர் பணியில் சேர்த்திருக்கிறார்கள்

விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்படலாம்

யாரோ வெகு சில போக்குவரத்து கழக தலைமை அலுவலக ஊழியர்கள்/அறிந்தவர்கள் பயணிப்பதற்காக மட்டுமே சில புது ரூட்டுகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் நிறைய ரூட்டுகள் ரத்து செய்யப்பட்டு மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாக்கப்படுகின்றனர். இது பீக் ஹவரிலும் நடக்கிறது. 

இவை தவிர இன்று அறிந்த வேறு சில விவரங்கள்.

வடபழனி 100அடி சாலை விரிவாக்கத்திறகாக கட்டிடங்கள் இடிக்கப்படுவதை எதிர்த்து ஸ்டே வாங்கியிருக்கிறதாம் சிவன் போவில் நிர்வாகம். வடபழனி சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் சிவன் கோவிலுக்கு சொந்தமான கட்டிடங்கள் மட்டுமே இன்னமும் இடுக்கப்படாமல் இருப்பதாக செய்தி. 

நேற்று நடந்த ஆபரேஷன் ஆம்லாவால் என்ன பயன் என தெரியவில்லை. வழக்கம் போல drunken driving சிக்கியது போன்ற விஷயங்களதான் நடந்தேறியிருக்கும். நேற்று யாரையும் எங்கும் எந்த போலீசும் சந்தேகக் கண்களோடு பார்க்கவில்லை. நான் பார்த்த இடங்களிலெல்லாம் போலீசார் வழக்கம் போல உட்கார்ந்து கும்பலாக பேசிக்கொண்டுதானிருந்தனர். வடபழனி கோவிலில் மட்டும் அவ்வப்போது ஒன்றிரண்டு பைகளை சோதனை செய்தனர். 

கிண்டி பேருந்து நிலையத்திற்குள்/அருகில் ஷேர் ஆட்டோக்களை அனுமதிப்பதில் திடீரென்று கெடுபிடி காட்டுகின்றனர் போக்குவரத்து போலீசார். இதனால் பயணிகள் பல இன்னல்களுக்கு பீக் ஹவரில் ஆளாகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தாலேயே ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் பயணிகள். அதை சரி செய்யாமல் இருக்கும் மற்ற வசதிகளையும் ஏன் இவர்கள் தடுக்கிறார்கள் என புரியவில்லை. 

வெகு நாட்களுக்கு பிறகு வடபழனி நம்ம வீடு வசந்த பவனில் இன்று மதியம் உணவருந்தினேன். உருளைக்கிழங்கு சரியாக வேகவில்லை என்பதை சப்ளையரிடமும் சூப்பர்வைசரிடம் கூறினேன். நான் சொல்லும்போது மதியம் மணி 3.00. இதுவரை யாருமே சொல்லவில்லையே சார் என்றார் ஆச்சர்யமாக சூப்பர்வைசர். உருளைக்கிழங்கை எடுத்து கையால் நசித்து காண்பித்து நம்பவைத்தேன் அவரிடம். பிறகு தனியாக சப்ளையர் வந்து ஆமாம் சார் வேகவில்லைதான் என்றார். அப்போது அவர் கூறிய தகவல் வசந்த பவன் ஹோட்டலகளுக்கெல்லாம் குழம்பு, பொறியல், மசாலா, துவையல், அவியல், கூட்டு, கடையல், தோசை மாவு போன்றவை கிண்டியில் தனியாக ஒரே கூடத்தில் செய்யப்பட்டு அனைத்து இடங்களுக்கும் சப்ளை செய்யப்படுகிறதாம். சாதம் வடிப்பது, அப்பளம் வறுப்பது, தோசை வார்ப்பது போன்றவைதான் அவ்விடத்தில் நடக்கிறதாம். அப்படியானால் இன்று எல்லா வசந்த பவன் கடைகளிலும் உருளைக்கிழங்கு வேகாமல்தான் இருந்திருக்கவேண்டும். கண்டிப்பாக நாலை கம்ப்ளெயிண்ட் வரும் சார். சரி செய்வார்கள் என்றார். இது எனக்கு புதிய செய்தி.

எஸ்.ராமகிருஷ்ணனின் “பயணங்களும், தீராப் ப்ரவசங்களும்”  உரை சங்கம்4 நிகச்வில் இன்று. தலைப்பு அருமைதான். எனக்கு என்னவோ பலர் அவரை பற்றி உருவாக்கிவைத்திருந்த ஆகோ ஓகோ பிம்பம் நியாயப்படுத்தப்படவில்லை அவரது உரையில். விஷயங்கள் நன்றாய்தான் இருந்தது. சுவை அத்தனை இல்லை. நேரம் பற்றாக்குறையால் அப்படி எனக்கு தோன்றியதா என தெரியவில்லை. என் இலக்கிய அறிவும் கிரகிக்கும் தன்மையும் கம்மிதான்.

PETA அமைப்பு மாமிச உணவு உட்கொள்வதை எதிர்க்கிறதா. இப்படி ஒரு கேள்வி இன்று சங்கம்4 நிகழ்வில்  தியடோர்.பாஸ்கரனால் என் மனதில் ஆழமாக பதிய வைக்கப்பட்டது.

எனக்கு தோன்றிய கனவு. வெகு நாட்களுக்கு பிறகு விழித்த பின்னும் நினைவில் நின்ற கனவு. காடோ அல்லது வனவிலங்கு சரணாலயமோ தெரியவில்லை. தடைகளையும் ஆழமான கால்வாயையும் தாண்டி என்னை தாக்க வந்த கரடி திடீரென்று உறைந்து போய் சிலையாகிறது. அதை தொடர்ந்து ஏதென்று தெரியாத சிறு விலங்கு கூட்டம் ஒன்று என்னை துரத்துகிறது. அருகில் வருகையில்தான் கவனிக்கிறேன் அது குரங்கு கூட்டம். நான் என் கேமிராவை எடுத்து அவற்றை படம் பிடிக்க ஆரம்பித்தவுடன் அவை சாந்தமாகி விலகிச் செல்கின்றன. அவற்றிற்கு நான் தீங்கிழைக்க மாட்டேன் என அவை உணர்ந்ததாய் நான் உணர்ந்தேன். பாதுகாப்பு வாய்க்கலை தாண்டி ஒரு புலி பாய்கிறது. பல மக்கள் பயந்து ஓடுகிறார்கள். ஒரு இளம் பெண் நான் எச்சரிப்பதையும் கொருட்படுத்தாமல் அந்த புலியின் குட்டியை அதன் அருகில் எடுத்து சென்று சேர்க்கிறாள். அந்த புலி ஏதும் செய்யவில்லை. அந்த புலியும் மற்ற மக்கள் ஓடும் திசையிலேயே மக்களோடு சேர்ந்து ஓடி மறைகிறது.