Monday, 20 October 2014

பயணங்கள்-1

வழக்கமான பயணம் என்றே பேருந்து ஏறினேன். 10 மணிக்கு மேல் என்பதாலும் மழையின் காரணமாகவும் பேருந்து காலியாகவே இருந்தது வழியிலேயே ஏறிவிட்டேன். புதுச்சேரி டு சென்னை ஈ.சி.ஆர். மார்க்கம்.

97 ரூபாய் பேருந்து கட்டணம் போக மீதி 10 ரூபாய் கொடுக்க வசதியாய் 100 ரூபாயுடன் 7 ரூபாய் சில்லறையையும் நீட்ட. சிரித்துக் கொண்டே நடத்துனரோ இனி அந்த கஷ்டம் வேண்டாம் சார். டிக்கெட் விலையை 100 ஆக்கிட்டாங்க என்றார். என்னவென்று விசாரித்தால். யாரோ ஒரு பயணி தனக்கு ரூ3.00 மீதி தரவில்லையாம் ஒரு கண்டெக்டர் அதை ரிப்போர்ட் செய்துவிட்டு போகிற போக்கில் இதை கார்ப்பரேஷனுக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம் ஏன் கண்டெக்டருக்கு கொடுக்கனும் கேள்வி கேட்க, புதுச்சேரி போக்குவரத்து துறை கார்ப்பரேஷன்  மேனேஜருக்கு அந்த ஐடியா பிடித்து போக 97ரூ என்ற டிக்கெட் விலை 100ரூ என மாறிவிட்டதாம். மிகவும் நல்லவர் அந்த பயணி. அவரது ஈகோ ஏதோ ஒரு நடத்துனர் தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு தவறு இனி அனைத்து பயணிகளின் தலையிலும் ரூ.3.00 அதிகமாக்கிவிட்டு போய்விட்டார் அந்த நல்லவர். வாழ்க போராளிகள்.

ஏனோ அந்த நடத்துனருக்கு என்னை பிடித்து போய்விட டிகெட் போட்டுவிட்டு வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார். என்ன சார் செய்யறது. இப்படி சட்டம் பேசுகிறோம் என சிலர் அடிக்கடி வந்துவிடுகிறார்கள். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வென்று வெளியே வர 4-6 மணி நேரம் ஆனது என்பதால் பல பேருந்துகள் கோயம்பேடு சிக்னலிலேயே திரும்பி வர ஆரம்பித்தனவாம். வழக்கமாய் பண்டிகை தினங்களில் அப்படி செய்வது வழக்கம்தான். வோல்வோ பேருந்து ஒண்ரு அப்படி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியேவே பயணிகளை இறக்கிவிட்டு திருப்பிக் கொண்டு வர முனைந்த போது வண்டியிலிருந்து ஒரு பயணி மட்டும் இறங்க மறுத்துவிட்டாராம். என்னைய உள்ளேதான் போய் இறக்கிவிட வேண்டும் என அலும்பு செய்தாராம். இதில் தான் ஒரு வக்கீல் என்றும் கோர்ட்டுக்கு போவது தன்ன்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும் வேறு மிரட்டலாம். வேறு வழி இல்லாமல் கிட்டத்தட்ட 4 மணி நேரம் எடுட்து அவரை பேருந்து நிலையத்திற்குள் போய் இறக்கிவிட்டுவிட்டுதான் பேருந்து கிளம்பியதாம். அவர் அது வரையில் பேருந்தில் இருந்தது எந்த வகைன்னே புரியலை.

தீபாவளி ஆரம்பித்துவிட்டது. போலீசும் தங்கள் வேலையை செய்யனுமே. புத்துப்பட்டு செக் போஸ்டில் பேருந்து நிறுத்தப்பட்டு கடத்தப்படும் கோடி ரூபாய் பெருமானமுள்ள பீர் மற்றும் விஸ்கி பாட்டில்களை கண்டுபிடிக்கும் வேலையில் இருந்தனர். ஏதும் சிக்கவில்லையென வருத்தத்துடன் இறங்கி போய் விட்டனர்.

நடத்துனர் தொடர்ந்தார். இப்படித்தான் ஒருத்தர் தியாகி கோட்டாவில்தான் போவார் சென்னைக்கு(இலவச பயணம்) அதுவும் சரியாக புதன்கிழமைகளில்தான் அவரது பயணம் இருக்கும். இப்படி ஒரு முறை செக் செய்யும் போது அவர் மேலே வைத்திருந்த பையில் சரக்கு பாட்டில். சரி மாட்டிவிட வேண்டாமே என விட்டுவிட்டேன். பை யாருடையது என கேட்டுவிட்டு போலீஸ்காரங்களும் பையை மட்டும் எடுத்துகிட்டு இறங்கிவிட்டார்கள். அடுத்த வாரமும் அதே ஆள் ஒரு பையுடன் வண்டியில் ஏறினார். பையில் என்ன இருக்கிறது என திறந்து காட்ட சொன்னேன். பயணிகள் என்ன எடுத்து செல்கிறார்கள் என செக் செய்ய நடத்துனருக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு. என்னிடம் இதை வேறு சொல்லி தன் நிலையை உணர்த்தினார் நடத்துனரே. ஆனால் அந்த ஆள் என்னவென்றால், அதெல்லாம் காட்ட முடியாது. ரொம்ப தொந்திரவு செய்தால் என்னை அசிங்கமாக திட்டினாய் என டெப்போவில் போய் புகார் சொல்லுவேன் என மிரட்டினார். அடுத்த முறை என் வண்டியில் சரக்குடன் ஏறினால் கண்டிப்பாக நானே போலீஸில் மாட்டி விடுவேன் என சொல்லியிருக்கிறேன் என ஆதங்கப் பட்டார்.

பின்னிருக்கையில் இருந்த இரண்டு வயதான பெண்களின் பேச்சு இது. இப்போதெல்லாம் யாருங்க இதையெல்லாம் எடுத்துகிட்டு போறாங்க. இதில் மிச்சமாகிற காசை பற்றியெல்லாம் கவலை படுகிற அளவிற்கா மக்கள் இன்னும் காசின் அருமை தெரிஞ்சி இருக்காங்க. நிறைய காசு இருக்கு இன்று. இதையெல்லாம் யாரும் கண்டுக்கறதேயில்லை இப்போதெல்லாம். ஆனால் கண்டிப்பாக தினம் தினம் காரில் வருபவர்கள்கூட எல்லை தாண்டி சரக்கை எடுத்துக் கொண்டு போய்கிட்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைய பயணம் சுவாரஸ்யமானதில் இதை எழுதிவிட வேண்டும் என ஆசையில் எப்படி ஆரம்பிப்பது என யோசனை. வழக்கமாக திங்கட்கிழமை காலை இறை தேடும் என் பயணம்னு ஆரம்பிக்கலாம்னு யோசனை. யோசனை அங்கேயே நிற்பதில்லையே. இப்படி இறை தேடி சிறிய விடுப்பில் முன்னெல்லாம் வேடவர்கள் சென்றிருப்பர். இப்போதெல்லாம் மீனவர்கள் பெரிய லான்ஞ்சில் ஒரு வாரம் 10 நாள் என கடலுக்கு போகிறார்கள். அவர்கள் போலத்தான் நானும் என்னை போல பலரும் திங்கட்கிழமை ஆனால் இறை தேடி குடும்பத்தை விட்டு போகிறோம். வாரம் ஒரு முறையோ அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை பார்க்க போகிறோம். கரையில்  மீனவர்கள் வாழ்வு பற்றி நிறைய படங்கள் வந்துவிட்டன. அவர்கள் படலில் படும் சிரமங்கள் அந்த வாழ்வு பற்றி அவ்வளவாய் படங்கள் வந்ததாய் தெரியவில்லை. ஒன்று லான்ஞ்ச் சென்றாலே கடத்தலுக்கும் வில்லன்கள் சந்திக்கவுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு கடலிலிலும் ஒரு வாழ்வு இருக்கிறது.

இதை பேசிக்கொண்டிருக்கும் போதே டிரைவருக்கு உடம்பு சரியில்லையாங்க. மீனோட வண்டி பனையூர் கிட்டே இருக்குங்களம். எல்லாம் எக்ஸ்போர்டுக்கு போற மீனுங்க. அதான் அவசரமா போகிறேன். ஆமாம் இப்போவெல்லாம் பெரிய சைஸ் மீனுங்களையெல்லாம் எக்ஸ்போர்டுக்கு அனுப்பிடறீங்க என ஆதங்கப்பட்டார். எனக்கும் முன்னெல்லாம் அடிக்கடி சாப்பிடும் இறால் பஜ்ஜி நியாபகத்திற்கு வந்து தொலைத்தது. இப்போதெல்லாம் எங்கு தேடினாலும் அது கிடைப்பதில்லை. ஒரு இறாலை 3 - 4 துண்டுகளாக்கி பஜ்ஜி போடுவாங்க அம்மா. அதன் சுவை இப்போதெல்லாம் வளர்க்கப்படும் இறால்களில் இருப்பதில்லை. உம்ம்ம்... அசதி கண் அசந்துவிட்டேன். திருவான்மியூர் வந்ததும்தான் எழுந்தேன்.

Saturday, 12 July 2014

ஒரு தோசை காவியம்

தமிழகத்தின் தாய் உணவு இட்லி என்றால் தந்தை உணவு தோசை எனலாம். அந்த அளவு தமிழகத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு தோசை எனலாம். இட்லி போர் அடிக்குது என்பவர்கள் அடுத்தது தோசையைதான் தேடுவார்கள். பிள்ளைகள் சரியாக சாப்பிடவில்லையா தோசை ஊற்றி கொடுத்து உண்ண வைக்கும் வழக்கம் பல வீடுகளில் உண்டு. தோசையில்தான் எத்தனை எத்தனை வகை. அதற்கு உடன் எத்தனை எத்தனை விதமான சட்னிக்கள், சாம்பார்கள், குருமாக்கள், தூள்(பொடி) என தோசை பல ருசிகளில் பல ரசனைகளை கொடுக்கும். இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நெய் தோசையின் வாசனை மூக்கையும் மசால் தோசையின் சுவை நாக்கையும் தனி தனியாக இழுத்துச் செல்கின்றன.

இப்படியாக தோசையை பற்றி நினைத்துக் கொண்டே தோசையை பற்றி எழுதுகிறேன். சின்ன வயதில் சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்த  என்னை சாப்பிட வைக்க அம்மா சுட்டு கொடுத்த பூனை பொம்மை தோசையில் இருந்து என் தோசை நினைவுகள் இன்றும் தொடர்கின்றன. கோதுமை கொள்முதலை அதிகரிக்க சப்பாத்தியை பற்றி என்ன என்னவோ சொல்லி இந்த அரசாங்கங்கள் ப்ரொமோட் செய்யும் வரை கிட்டத்தட்ட தமிழகத்தில் எல்லாருக்கும் தோசைதான் ஸ்பெஷலாக இருந்திருக்கும்.

ஹோட்டல்களுக்கு போய் சாப்பிட ஆரம்பிக்கும் முன் எனக்கு தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு தோசைதான். அது அம்மா சுடும் தோசை. அதுவும் சில நாள் மெலிதாக இருக்கும், சில நாள் மொத்தமாக இருக்கும், சில நாள் கருகி இருக்கும். சில நாள் கல்லில் ஊற்றும் போதே திரட்டிக் கொள்ளும். எப்போதாவது பூனை பொம்மை தோசை வளர்ந்த பிறகும் கிடைத்தது.

சப்பாத்தி சுட்ட பின்னோ அல்லது உருளைக்கிழங்கு பத்தை போட்டு வறுத்த பின்னோ தோசை ஊற்றினால் தோசை மெலிதாக வராது. தோசை கல்லை கழுவுகிறேன் என நன்றாக தேய்த்து கழுவிய பின்னர் 2 அல்லது 3 தோசைகள் திரட்டிக் கொண்டுதான் வரும். ப்ரிட்ஜில் இருந்து தோசை மாவை எடுத்து வைத்து சில்னஸ் போகும் முன்னே அவசர அவசரமாய் தோசை ஊற்றினால் அது தோசையாக இருக்காது. இப்படி தோசை பல விஷயங்களை சூட்சுமங்களை சொல்லி கொடுத்திருக்கிறது.

எப்போதும் செய்யப்படும் தேங்காய் சட்னி மட்டுமல்ல, தக்காளி சட்னி(தொக்கு), வெங்காய சட்னி, பொதினா சட்னி, மல்லாட்ட(கடலை) சட்னி என அனைத்து சட்னிகளும் தோசைக்கு செட் ஆகும். இட்லி சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், உருளை கேரட் மசித்து போட்ட சாம்பார், சாதத்திற்கு போட்டுக் கொள்ளும் சாம்பார் என அனைத்து சாம்பாரும் தோசைக்கு சுவை கூட்டும். துவையல் வகையறாக்களில் தேங்காய் துவையல், பொதினா துவையல், இஞ்சி துவையல் ஆகியவை தேசைக்கு அருமையான காம்பினேஷன் ஆகும். தூள்(பொடி) வகைகளில் இட்லி தூள், பொட்டுக்கடலை தூள், மிளகாய் பூண்டு இன்ஸ்டண்ட் பொடி, சென்னாவரத்(மீன் வகை) தூள் என இந்த லிஸ்ட் அதிகம். தூளுக்கு ரிபண்ட் ஆயில்னாலும் சரி, நல்லெண்ணெய்னாலும் சரி. நெய்யும் சூப்பராக இருக்கும். சிக்கன் குருமா, மட்டன் குருமா, வெஜ் குருமாக்களும் தோசையை புரட்டி சாப்பிட சுவையாக இருக்கும். மீன் கொழம்பு, இரால் குழம்பு, கருவாட்டுக் கொழம்பு, வத்தக் கொழம்பு ஆகியவையும் தோசைக்கு என்றால் அதிகமாய் சுவைக்கும்.

அம்மாவின் தோசைக்கு அடுத்தபடியாக நான் அதிகம் ருசித்து சாப்பிட்டது எங்க தேங்காய்திட்டு ஆயாவின் தோசைதான். அப்போதே அவங்க வீட்டில் பெரிய தோசைக் கல் இருந்தது. அவர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு போகும் போதெல்லாம் ஹோட்டல் தோசைகளை போல பெரிய மொறு மொறு தோசைகள் கிடைக்கும். காம்பினேஷன் மீன் கொழம்பு அல்லது இரால் குழம்பு இருக்கும் கண்டிப்பாக. அந்த தோசைக்காகவே விடுமுறைக்கு அவர்கள் வீட்டிற்கு போவதுண்டு. அவர்களை பார்த்து அம்மாவும் அந்த தோசை கல்லை வாங்கி எங்களுக்கு பெரிய மொறு மொறு தோசை ஊற்றி கொடுக்க ஆரம்பித்தது தனி கதை.

10 வது படிக்கும் போது என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு அம்மா ஏதோ ஊருக்கும் போயிருந்த போதுதான் நான் நானாக தோசை!!! சுட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சுட்ட தோசை எல்லாமே தோசை கல்லின்மீது பாசம் கொண்டு வர மாட்டேன் என சுருட்டிக் கொண்டு தோசை திருப்பியால நாலு போடு போட்ட பின்தான் வந்தன. பசியின் கொடுமையால் அந்த புது வகையான தோசையை சாப்பிட்டேன். அன்று முதல் அம்மா சுட்டு கொடுக்கும் தோசை அமிர்தமாக தெரிந்தது வாழ்க்கை பாடம்!!!

என் நினைவில் இருக்கும் முதல் ஹோட்டல் தோசை விளம்பரம் பார்த்து விஜிபி இல் அன்று மிகவும் பிரபலமான பேமிலி தோசைதான். அவ்வளவு பெரிய தோசை வேறு எங்கும் பார்த்தேயில்லை. அதற்கு பிறகு அடிக்கடி வெளியே போக ஆரம்பித்ததால் ஹோட்டல்களில் தோசைதான் பர்ஸ்ட் ஆர்டர் எப்போதும். கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விதமான தோசைகளை டேஸ்ட் செய்ய ஆரம்பித்தேன். எத்தனை விதவிதமான தோசைகள். ரோஸ்ட், நெய் தோசை, நெய் ரோஸ்ட், மசால் தோசை, பட்டாணி மசால் தோசை என் போய்கொண்டிருந்த வகைகளில் திடீரென்று ரவா தோசை என ஒன்று புதிதாய் வந்தது. கொஞ்ச நாளைக்கு எங்கு போனாலும் பலருக்கு ரவா இட்லியும் ரவா தோசையும் முதல் ஆர்டராக இருந்தது. அப்புறம் ஊத்தாப்பம், ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம் என வீட்டில் மொத்தமாக இருந்தால் வேண்டாம் என சொன்னதை வெளியே ஸ்பெஷலாம் ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தேன். இதில் ஊத்தாப்பத்தின் ஸ்பெஷாலிட்டி தனி. அதற்கு மட்டும் அவியல் அல்லது வரை கறி தொட்டுக்க தருவார்கள். அந்த காம்பினேஷன் தனி சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்து ஊத்தாப்பம் போல இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அப்போதெல்லாம் ஹோட்டல்களிலேயே இட்லிக்கு தனி மாவு தோசைக்கு தனி மாவு ஊத்தாப்பத்திற்கு தனி மாவு என இருக்கும். புது மாவு இட்லிக்கும் லேசாக புளித்த மாவு தோசைக்கும் கொஞ்சம் அதிகம் புளித்த மாவு ஊத்தாப்பம் வகையறாவுக்கும் என வைத்திருப்பார்கள். இட்லி ஊற்றிய பின் கொஞ்சம் மாவை அடுத்த வேளை தோசை மற்றும் ஊத்தாப்பத்திற்கு என எடுத்து வைத்துவிடுவார்கள். இப்போதெல்லாம் ஷேப்தான் மாறுகிறதே தவிர சுவை ஒன்றாய்தான் இருக்கிறது. ஏனென்றால் ஒரே மாவில்தான் இட்லி, தோசை, ஊத்தாப்பம்.

ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்தாலும் அவ்வளவு பெரிய தோசைகள் எப்படி ஊற்றுகிறார்கள் என்பதெல்லாம் பார்த்தில்லை. முதல் முறை பெங்களூருக்கு போன போதுதான் இதை அறிந்தேன். செல்ப் சர்வீஸ் எனப்படும் உயர்ரக கையேந்தி பவன்களில்தான் கண் எதிரிலேயே நாம் கேட்டவுடன் தோசை ஊற்றி கொடுப்பதை பார்த்தேன். அட தோசை கல்லை துடப்பக் கட்டையால் கழுவுகிறாரே என சுத்தம் பற்றிய அக்கரை வந்தது. எல்லா துடப்பக் கட்டைகளும் அசுத்தமானவை அல்ல என்ற லாஜிக்கும் கிட்டத்தட்ட எல்லா ஹோட்டல்களிலும் அப்படித்தான் தோசைக் கல்லை கழுவுவார்கள் என்பதும் அப்போதுதான் எனக்கு தெரிந்தது. அதன் பிறகுதான் தோசை ஊற்றும் போது வரும் இசையை ரசிக்க ஆரம்பித்தேன். அதுவரை தோசையை திருப்பி போடும் போது வரும் சைங்ங்ங்ங் என்ற ஓசைதான் தெரியும். ஹோட்டல்களில் தோசை சுடும் முன் சூடான கல்லில் தண்ணீர் ஊற்றி கழுவும் போது உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என கேட்கும் அந்த எக்ஸ்ட்ரா சத்தம் தோசையின் வட்ட வடிமான அழகு வாசம் சுவையுடன் கூட சேர்ந்து காதுக்கும் இனிமை சேர்க்க ஆரம்பித்தது. காப்பி டபராவுக்கும் தோசைக்கும் உண்டான தொடர்பும் இக்குதான் தெரிந்தது.

இந்த தோசை தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. பெங்களூருவில் மத்திக்கரே பஸ் ஸ்டாண்ட் அருகில் தினமும் மாலையில் நடமாடும் தோசைக் கடை ஒன்று போடுவார்கள். அங்கு தோசைக்காகவே 3 கீ.மீ நடந்து வந்து சாப்பிட ஆரம்பித்தேன் என்றால் என் தோசை மோகம் புரியும். அது வரை வெள்ளை நிறத்தில் மட்டும் தோசையை பார்த்திருந்த நான் பச்சை சிவப்பு மஞ்சள் நிறம் என கலர் கலரான தோசைகளை சாப்பிட்டு ருசிக்க ஆரம்பித்தேன். முடக்கத்தான் கீரை தோசை, கேரட் தோசை, வெந்தய தோசைகள் தான் நினைவில் இருக்கின்றன. அங்குதான் முதன்முதலில் கொண்டை கடலை மசால் தோசை, பன்னீர் மசால் தோசை சாப்பிட்டேன் அவை இரண்டிற்கும் இன்றும் நான் அடிமை.

சென்னை வந்த பின் அறிந்து கொண்ட புதுவித தோசை ரோட்டுக் கடையில் முதலில் சாப்பிட்ட முட்டை தோசை. ஆகா என்ன ஒரு டேஸ்ட். முதல் முறை ருசித்த பின் அடிக்கடி விரும்பி ருசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் செய்து கொடுக்க சொல்லி சாப்பிட ஆரம்பித்தேன். அதுவும் மீன் கொழபிற்கு முட்டை தோசை ஈடு இணையே இல்லை. இதை எழுதும்போது மீன் கொழம்புவின் வாசமும் முட்டை தோசையின் பெப்பர் சுவையும் கலந்து நாக்கில் உரைக்குது. 

மதுரை ஸ்பெஷல் கறி தோசை. ஆகா கிட்டத்தட்ட இதை பற்றி அறிந்த பின் இரண்டு வருட காத்திருத்தலுக்கு பின்னரே மதுரை போக வாய்ப்பு கிடைத்தது. கறி தோசை சாப்பிட்டேன் ஆக வேண்டும் என மழையையையும் ஊருக்கு நேரமாவதையும் பொருட்படுத்தாமல் ருசித்து ரசித்து சாப்பிட்டதை என்றுமே என் தோசை வரலாறு சொல்லும். 

இவை மட்டுமல்லாமல் வடபழனியில் கிடைக்கும் எண்ணெய் தோசையின் சுவை அவ்வப்போது வடபழனி திருசெல்வேலி சைவாள் ஹோட்டல் வரை இழுத்து போகும். கோதுமை தோசை, கேழ்வரகு தோசை, வெஜிடபிள் தோசை என்பதெல்லாம் கோடம்பாக்கம் பிருந்தாவன் ஹோட்டல் காட்டிக் கொடுத்த தோசை சுவைகள்.

இப்படியெல்லாம் வகை வகையாக தோசையை தேடி தேடி சாப்பிட்டுக் கொண்டிருந்த நான் கடந்த மூன்று மாதமாக கூண்டிலடைக்கப் பட்ட குருவி போல பக்கத்தில் இருக்கும் மெஸ்ஸில் கிடைக்கும் சுட்டு வைத்து ஆறிப் போன வரண்ட தோசையை சாப்பிட்டு நொந்து போயிருக்கிறேன்.

இப்படியெல்லாம் அருமை பெருமை வாய்ந்த தோசை என்ற மாபெரும் உணவை ஒரு சிலர் ரைஸ் பீட்சா என புதிதாக பெயர் சூட்டியிருக்கிறார்கள் என கேள்விபட்டதால்தான் இந்த காவியம். வேண்டுமென்றால் மைதா ஊத்தாப்பம் என பீட்சாவுக்கு பெயர் மாற்றம் செய்து பெருமை பட்டுக் கொள்ளட்டும் அவர்கள். தோசைசைசைசைசைங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்…

Saturday, 26 April 2014

அழகு முத்தைய்யனார் கோவில் - வேண்டுதல் சிலைகள்
தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் இருக்கிறது அழகு முத்தைய்யனார் ஆலயம். எல்லா ஐய்யனார் கோவில் போலவும் ஊரை விட்டு வெளியே பசுமையான வயல்களுக்கு நடுவே பெரிய மரங்கள் இருக்கும் தோப்பிற்குள் ஐய்யனார் பொற்கிலை அம்பாள் பூரணி அம்பாள் என தன் இரு தேவியருடன் வீரமாக அமர்ந்திருக்கிறார். பெரிய பெரிய குதிரைகளும் 270 வது வருடாமாக கால் வலியை பொறுத்துக் கொண்டு நின்றுகொண்டே இருக்கின்றன. இது வரை எல்லா ஐய்யனார் கோவில்களிலும் பார்க்கும் காட்சிதான் இங்கு. 

ஆனால் தோப்பிற்குள் நுழையும் போதே என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் கோவிலை சுற்றியும் அங்கும் இங்குமாக ஆயிரக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த சிலைகள். சிறியதும் பெரியதுமாக வரிசை வரிசையாக வித விதமாய் வெவ்வேறு நிறங்களில் பல பல ஆடை அலங்காரங்களில் அத்தனை சிலைகள். ஆச்சர்யம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. இப்படி ஒன்றை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னவென்று விசாரித்தால். ஐய்யனாருக்கு பின்பக்கம் அழகு சித்தர் எனற ஒரு சித்தரின் சந்நிதி இருக்கிறது. இவர் இங்கு இருந்த ஒரு கிணற்றில் ஜல சமாதி அடைந்துவிட்டதாக பூசாரி கூறினார். அந்த கிணறுதான் சந்நிதியாக பூஜிக்கப்படுகிறது. எல்லா சித்தர் கோவிலிலும் இருப்பது போல ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இந்த முன்று கோவில்களையும் சுற்றி வகை வகையான வேண்டுதல் சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த கோவிலின் ஆச்சர்யம் வேண்டுதல் நிறைவேறிய பின்னரே சிலைகள் வைக்கப்படுகின்றனவாம். குழந்தை வேண்டுவோர், திருமணம் நடக்க வேண்டும் என வேண்டுவோர், வீடு கட்ட வேண்டும் என வேண்டுவோர், பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என வேண்டுவோர், கை அல்லது கால் சரியாக வேண்டும் என வேண்டுவோர் என பல வகையான வேண்டுதல்கள் நிறைவேறியதற்கு ஆதாரமாக வகை வகையான சிலைகள் அழகாக காட்சி அளிக்கின்றன. ஐய்யனாரின் கம்பீரமும், சிலைகளின் அழகும், சித்தரின் அருளும் கண்டிப்பாக எவரையும் கவரும் . சித்திரை முதல் தேதி வருடாந்திர திருவிழா இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுமாம். திங்கட்கிழமை பக்தர்கள் கூட்டம் நிறைய இருக்குமாம். சிலைகள் அங்கேயே செய்து அங்கேயே வேண்டுதல் நிறைவேற்றபடுவதற்கு ஆதாரமாக பாதி முடிக்கப்பட்ட சிலைகள் அங்கென்றும் இங்கென்றுமாய் கண்ணில் தென்படுகின்றன. சிலைகளில் யாருக்காக அந்த சிலைகள் வைப்பட்டிருக்கிறது என்பதும் ஊர் பெயருடன் எழுதப்பட்டிருக்கிறது. 

நம் பாரம்பரியம் இத்தகைய வழிபாட்டுத் தளங்களின் வழியேதான் அறிய முடிகிறது என்பதால் இந்த கோவில் அதிக ஈடுபாட்டை தருகிறது. இத்தகைய மற்ற கோவில்களையும் தேடிப் பிடித்து விஷயங்களை அறிய வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.