Monday, 20 October 2014

பயணங்கள்-1

வழக்கமான பயணம் என்றே பேருந்து ஏறினேன். 10 மணிக்கு மேல் என்பதாலும் மழையின் காரணமாகவும் பேருந்து காலியாகவே இருந்தது வழியிலேயே ஏறிவிட்டேன். புதுச்சேரி டு சென்னை ஈ.சி.ஆர். மார்க்கம்.

97 ரூபாய் பேருந்து கட்டணம் போக மீதி 10 ரூபாய் கொடுக்க வசதியாய் 100 ரூபாயுடன் 7 ரூபாய் சில்லறையையும் நீட்ட. சிரித்துக் கொண்டே நடத்துனரோ இனி அந்த கஷ்டம் வேண்டாம் சார். டிக்கெட் விலையை 100 ஆக்கிட்டாங்க என்றார். என்னவென்று விசாரித்தால். யாரோ ஒரு பயணி தனக்கு ரூ3.00 மீதி தரவில்லையாம் ஒரு கண்டெக்டர் அதை ரிப்போர்ட் செய்துவிட்டு போகிற போக்கில் இதை கார்ப்பரேஷனுக்கு கொடுத்தாலும் கொடுக்கலாம் ஏன் கண்டெக்டருக்கு கொடுக்கனும் கேள்வி கேட்க, புதுச்சேரி போக்குவரத்து துறை கார்ப்பரேஷன்  மேனேஜருக்கு அந்த ஐடியா பிடித்து போக 97ரூ என்ற டிக்கெட் விலை 100ரூ என மாறிவிட்டதாம். மிகவும் நல்லவர் அந்த பயணி. அவரது ஈகோ ஏதோ ஒரு நடத்துனர் தெரிந்தோ தெரியாமலோ செய்த ஒரு தவறு இனி அனைத்து பயணிகளின் தலையிலும் ரூ.3.00 அதிகமாக்கிவிட்டு போய்விட்டார் அந்த நல்லவர். வாழ்க போராளிகள்.

ஏனோ அந்த நடத்துனருக்கு என்னை பிடித்து போய்விட டிகெட் போட்டுவிட்டு வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார். என்ன சார் செய்யறது. இப்படி சட்டம் பேசுகிறோம் என சிலர் அடிக்கடி வந்துவிடுகிறார்கள். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள் வென்று வெளியே வர 4-6 மணி நேரம் ஆனது என்பதால் பல பேருந்துகள் கோயம்பேடு சிக்னலிலேயே திரும்பி வர ஆரம்பித்தனவாம். வழக்கமாய் பண்டிகை தினங்களில் அப்படி செய்வது வழக்கம்தான். வோல்வோ பேருந்து ஒண்ரு அப்படி கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியேவே பயணிகளை இறக்கிவிட்டு திருப்பிக் கொண்டு வர முனைந்த போது வண்டியிலிருந்து ஒரு பயணி மட்டும் இறங்க மறுத்துவிட்டாராம். என்னைய உள்ளேதான் போய் இறக்கிவிட வேண்டும் என அலும்பு செய்தாராம். இதில் தான் ஒரு வக்கீல் என்றும் கோர்ட்டுக்கு போவது தன்ன்கு ஒரு பெரிய விஷயம் இல்லை என்றும் வேறு மிரட்டலாம். வேறு வழி இல்லாமல் கிட்டத்தட்ட 4 மணி நேரம் எடுட்து அவரை பேருந்து நிலையத்திற்குள் போய் இறக்கிவிட்டுவிட்டுதான் பேருந்து கிளம்பியதாம். அவர் அது வரையில் பேருந்தில் இருந்தது எந்த வகைன்னே புரியலை.

தீபாவளி ஆரம்பித்துவிட்டது. போலீசும் தங்கள் வேலையை செய்யனுமே. புத்துப்பட்டு செக் போஸ்டில் பேருந்து நிறுத்தப்பட்டு கடத்தப்படும் கோடி ரூபாய் பெருமானமுள்ள பீர் மற்றும் விஸ்கி பாட்டில்களை கண்டுபிடிக்கும் வேலையில் இருந்தனர். ஏதும் சிக்கவில்லையென வருத்தத்துடன் இறங்கி போய் விட்டனர்.

நடத்துனர் தொடர்ந்தார். இப்படித்தான் ஒருத்தர் தியாகி கோட்டாவில்தான் போவார் சென்னைக்கு(இலவச பயணம்) அதுவும் சரியாக புதன்கிழமைகளில்தான் அவரது பயணம் இருக்கும். இப்படி ஒரு முறை செக் செய்யும் போது அவர் மேலே வைத்திருந்த பையில் சரக்கு பாட்டில். சரி மாட்டிவிட வேண்டாமே என விட்டுவிட்டேன். பை யாருடையது என கேட்டுவிட்டு போலீஸ்காரங்களும் பையை மட்டும் எடுத்துகிட்டு இறங்கிவிட்டார்கள். அடுத்த வாரமும் அதே ஆள் ஒரு பையுடன் வண்டியில் ஏறினார். பையில் என்ன இருக்கிறது என திறந்து காட்ட சொன்னேன். பயணிகள் என்ன எடுத்து செல்கிறார்கள் என செக் செய்ய நடத்துனருக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு. என்னிடம் இதை வேறு சொல்லி தன் நிலையை உணர்த்தினார் நடத்துனரே. ஆனால் அந்த ஆள் என்னவென்றால், அதெல்லாம் காட்ட முடியாது. ரொம்ப தொந்திரவு செய்தால் என்னை அசிங்கமாக திட்டினாய் என டெப்போவில் போய் புகார் சொல்லுவேன் என மிரட்டினார். அடுத்த முறை என் வண்டியில் சரக்குடன் ஏறினால் கண்டிப்பாக நானே போலீஸில் மாட்டி விடுவேன் என சொல்லியிருக்கிறேன் என ஆதங்கப் பட்டார்.

பின்னிருக்கையில் இருந்த இரண்டு வயதான பெண்களின் பேச்சு இது. இப்போதெல்லாம் யாருங்க இதையெல்லாம் எடுத்துகிட்டு போறாங்க. இதில் மிச்சமாகிற காசை பற்றியெல்லாம் கவலை படுகிற அளவிற்கா மக்கள் இன்னும் காசின் அருமை தெரிஞ்சி இருக்காங்க. நிறைய காசு இருக்கு இன்று. இதையெல்லாம் யாரும் கண்டுக்கறதேயில்லை இப்போதெல்லாம். ஆனால் கண்டிப்பாக தினம் தினம் காரில் வருபவர்கள்கூட எல்லை தாண்டி சரக்கை எடுத்துக் கொண்டு போய்கிட்டுதான் இருக்கிறார்கள்.

இன்றைய பயணம் சுவாரஸ்யமானதில் இதை எழுதிவிட வேண்டும் என ஆசையில் எப்படி ஆரம்பிப்பது என யோசனை. வழக்கமாக திங்கட்கிழமை காலை இறை தேடும் என் பயணம்னு ஆரம்பிக்கலாம்னு யோசனை. யோசனை அங்கேயே நிற்பதில்லையே. இப்படி இறை தேடி சிறிய விடுப்பில் முன்னெல்லாம் வேடவர்கள் சென்றிருப்பர். இப்போதெல்லாம் மீனவர்கள் பெரிய லான்ஞ்சில் ஒரு வாரம் 10 நாள் என கடலுக்கு போகிறார்கள். அவர்கள் போலத்தான் நானும் என்னை போல பலரும் திங்கட்கிழமை ஆனால் இறை தேடி குடும்பத்தை விட்டு போகிறோம். வாரம் ஒரு முறையோ அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறையோ குடும்பத்தை பார்க்க போகிறோம். கரையில்  மீனவர்கள் வாழ்வு பற்றி நிறைய படங்கள் வந்துவிட்டன. அவர்கள் படலில் படும் சிரமங்கள் அந்த வாழ்வு பற்றி அவ்வளவாய் படங்கள் வந்ததாய் தெரியவில்லை. ஒன்று லான்ஞ்ச் சென்றாலே கடத்தலுக்கும் வில்லன்கள் சந்திக்கவுமே தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு கடலிலிலும் ஒரு வாழ்வு இருக்கிறது.

இதை பேசிக்கொண்டிருக்கும் போதே டிரைவருக்கு உடம்பு சரியில்லையாங்க. மீனோட வண்டி பனையூர் கிட்டே இருக்குங்களம். எல்லாம் எக்ஸ்போர்டுக்கு போற மீனுங்க. அதான் அவசரமா போகிறேன். ஆமாம் இப்போவெல்லாம் பெரிய சைஸ் மீனுங்களையெல்லாம் எக்ஸ்போர்டுக்கு அனுப்பிடறீங்க என ஆதங்கப்பட்டார். எனக்கும் முன்னெல்லாம் அடிக்கடி சாப்பிடும் இறால் பஜ்ஜி நியாபகத்திற்கு வந்து தொலைத்தது. இப்போதெல்லாம் எங்கு தேடினாலும் அது கிடைப்பதில்லை. ஒரு இறாலை 3 - 4 துண்டுகளாக்கி பஜ்ஜி போடுவாங்க அம்மா. அதன் சுவை இப்போதெல்லாம் வளர்க்கப்படும் இறால்களில் இருப்பதில்லை. உம்ம்ம்... அசதி கண் அசந்துவிட்டேன். திருவான்மியூர் வந்ததும்தான் எழுந்தேன்.