Tuesday 24 January 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் வாசிப்பு

நான் நாவல்களையும், புத்தகங்களையும் படிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டது. மீண்டும் எழுத ஆரம்பித்து சுமார் ஒரு வருடம் கழித்து, பலருடைய அறிவுரையை ஏற்றும் என் மனதின் உந்துதலாலேயும் மீண்டும் படிக்க முடிவு  செய்தேன். அதற்கு வகை செய்ய எனது தந்தையின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புத்தகங்களை வெளியே எடுத்து வைத்திருந்தேன். புத்தக கண்காட்சியும் வந்தது. வழக்கமாக புத்தக கண்காட்சியில் வாங்குவது போல நிறைய புத்தகங்களை வாங்கினேன். நானும் ப்ரவீணும்(எனது நண்பர்) சேர்ந்து சுமார் 5000ரூ புத்த்கம் வாங்கியிருக்கிறோம். இவை இல்லாமல் என் மகளுக்கு தனியாக் வாங்கினேன். 

சரி புத்தகங்களை வாங்கி வந்து அடுக்கியாச்சு. படிக்க வேண்டுமே. படிப்பதில் ஆர்வம் பிறக்கும் வரை நாவல்கள் படிக்க முடியாது. ஆகையால் சிறு கதைகளில் ஆரம்பித்தேன். 

ஒரு நாள் முடிவு செய்து ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஆரம்பிக்கிறேன் எனது படிக்கும் பழக்கத்தை. பழைய கதைதான். அந்த காலத்துக் கதைதான். தெளிவாக தொய்வில்லாமல் போகிறது. நான் ஜெயகாந்தனை இதுவரை படித்ததில்லை. கங்கா என்ற நாயகியின்(நாயகனும் அவளே : முக்கிய பாத்திரம் - எனது ஆணாதிக்க புத்தி) பிராமண பெண்ணின் பார்வையில் கதை பயனப்படுகிறது. கிட்டத்தட்ட 6-7 பகுதி வரை கங்காவைப் பற்றியே கதை. வேறு பாத்திரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் எந்த தொய்வும் இல்லாமல். நான் இலைக்கியவாதியில்லை. ஆகவே கதையோடு பயனப்படும்போது நான் அனுபவித்ததை மட்டும்தான் இங்கே குறித்து வைக்கிறேன். எதையும் ஆராயவில்லை. அவள் யார். அவளின் தற்போதைய இந்த நிலைக்கு காரணமான சம்பவம். அதை தாண்டி அவள் இன்று இந்த நிலைக்கு எப்படி வளர்ந்தாள். இதனூடே அவளது தாய் கனகா, அண்ணன், மாமா, மற்றும் அந்த எழுத்தாளர் ஆர்.கே.வி அறிமுகங்கள். கடந்தகாலத்தை நிகழ்காலத்தில் தேடி நிகழ்காலத்தில் கங்கா பிரபுவை கண்டுபிடிக்கும் வரை அவள்மட்டும்தான் கதையில். 

அதன் பின்னரும் அவள் மட்டும்தான் கதை முழுதும். படம் பார்க்கும் பழக்கத்தில் காட்சிகளை ஓட விட்டே நாவலை படிக்கிறேன். எந்த ப்ரேம் எடுத்தாலும் அதில் அவள் இருக்கிறாள். தன் வாழ்க்கையினை சிதைத்தவனை சந்திக்கும் தைரியம் அதன் பின் பிரபுவோடு பழகுவது, அவனது வீட்டுக்கு சென்று பிரபுவின் மனைவி பத்மா மற்றும் மகள் மஞ்சுவுடன் பழகுதல் ஆகியவை அழகாக இருக்கிறது. மஞ்சுவுடன் நெருங்கி பழகுதல் இனிமை. பிரபுவுக்கும் கங்காவுக்குமிடையே ஏற்படும் இந்த நட்பு அல்லது உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அன்றைய காலக் கட்டத்தில் அது எல்லை கடந்த உறவாக பொருந்தா உறவாக இருந்தாலும் அதில் எந்த பிசகலும் இல்லாமல் அத்தகைய ஒரு பெண்ணின் நட்பு எனக்கு கிடைக்காதா என ஏங்க வைக்கிறாள் கங்கா. அந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது பிரபுவின் தவறுகளையும் புலம்பல்களையும் அவள் அனுகும் முறை. கதைதான் என்றாலும் பிரபுவின் மீது பொறாமை ஏற்படுகிறது.

இப்படியாக் இனிதாக போன கதை ஏனோ இறுதியில் திருப்பங்களோடு ஒரு சோகத்தில் கங்கா பிரபுவின் பிரிவில் முடிகிறது. ஆசிரியர் ஏதோ அடுத்த நாவலை துவங்க வேண்டும் என்ற அவசரத்தில் இறுதி பாகங்களை எழுதியது போல நான் உணர்கிறேன். கங்காவை பிரபுவிடமிருந்து பிரித்து அவளை குடிகாரியாகவும் கெட்டவளாகவும் மாற்றி கதையை முடித்திருக்கிறார்.

அந்த காலத்து சென்னை நகரம், பழக்க வழக்கங்கள், பிராமணர்களின் வழக்கங்கள்(பிராமனர்களை தாண்டி எழுத்தாளர் போகாததால் மற்ற ஏதும் தெரியவில்லை), அன்றைய பெண்களின் மனநிலை இப்படி பல விஷயங்கள்  நன்கு அறிந்து கொள்ள முடியுகிறது.

பிரபுவும், கங்காவின் குடும்பமும், இந்த சமூகமும் அவளுக்கு இழைத்த கொடுமையை எண்ணி வருந்துகிறது என் மனம். அப்படி ஒருத்தி என் வாழ்வில் கிடைக்க மாட்டாளா என்ற எண்ணத்தை என்னுள் ஆழமாக ஏற்படுத்துகிறாள் இந்த கங்கா.

நிறைய படிக்க வேண்டும் என்ற எனது ஆவலை சரியாக தூண்டிவிட்டிருக்கிறது இந்த நாவல். இந்த நாவலை ஆரம்பித்து முடிப்பதற்குள் கண்ணதாசனின் வனவாசத்தை ஒரே மூச்சில் ஒரு இரவில் படித்து முடித்தவிட்டு அதற்காக நானே என்னை பார்த்து வியந்து கொண்டேன். அடுத்தது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமா அல்லது மு.வ வின் அகல் விளக்கா என்ற போட்டி மனதிற்குள்... எதை படிக்கப் போகிறேனோ??

7 comments:

  1. Replies
    1. தல எதிர்பார்த்தது நடந்ததில் மிக்க சந்தோஷம்... :)

      Delete
  2. >>சுமார் ஒரு வருடம் கழித்து, பலருடைய அறிவுரையை ஏற்று

    அண்ணே, நான் எவன் பேச்சையும் கேட்க மாட்டேன்னு அன்னைக்கு சொன்னீங்களே? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. அய்யய்யோ, இனிமே இலக்கியம் பற்றி ட்வீட் போடுவாரே அவ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் நான் இலக்கியவாதியெல்லாம் இல்லை தல... ஒரு கதை படித்தேன் அதை பற்றி இங்கே எழுதியிருக்கேன்... இன்று/அடுத்த பதிவு உங்களை பற்றித்தான் எழுதப் போகிறேன்...

      Delete
    2. பேயோனைஎல்லாம் மீள் ட்விட்டுகிறார்.. கவனித்தீர்களா சார்.. ;)

      Delete
  4. <>

    என்னென்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று ஒரு தனிப் பதிவு போட்டால் நாங்கள் ஓசி கேட்டு வாங்கிப் படிக்க உதவியாயிருக்கும்.. :))

    "முக்கிய பாத்திரம் - எனது ஆணாதிக்க புத்தி"
    ++

    இந்நாவலை நான் வாசித்ததில்லை தோழர் .. வாசிக்கும்படி தூண்டுகிறது உங்களது பகிர்வு..

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" நீங்கள் வாசித்து முடித்துவிட்டதாக பட்சி சொல்கிறதே..அதை பற்றியும் பகிர்ந்தாலென்ன? வனவாசம் தங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றென கேள்விப் பட்டிருக்கிறேன்..பல முறை திரும்ப திரும்ப வாசிக்கும் நூலெனவும். அது குறித்தும் விரிவாக பகிருங்களேன்.

    ReplyDelete