Showing posts with label நாவல் வாசிப்பு. Show all posts
Showing posts with label நாவல் வாசிப்பு. Show all posts

Wednesday, 7 March 2012

விளக்கு மட்டுமா சிவப்பு ? - வாசிப்பு

கண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா? அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு?”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.

கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது. வந்த இடத்தில் வஞ்சிக்கப் பட்டு ஒரு உயிரை இழக்கிறது. அதையும் மீறி வாழ எத்தனிக்கையில் அடி மேல் அடி. பணக்காரர் ஒருத்தரின் சூழ்ச்சியால் வசந்தமாய் வரும் காதல் அழிக்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரமான ஜெயா தவறாக விபச்சாரியென குற்றம்சாட்டப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறாள். பின்னர் அதையே தெழிலாக ஏற்றுக்கொண்டு அவள் வாழ்கிறாள். அப்போதும் விதி துரத்தி அவளையும் அவளை சேர்ந்தவர்களையும் அலைக்கழிக்கிறது.

இந்த நாவலில் கதை சொல்லிகளாக இருவர் வருகிறார்கள். ஒன்று வேதநாயகம் என்ற வக்கீல். அவரது கதாபாத்திரமே கண்ணதாசன் தன்னையே மனதில் வைத்து உருவாக்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அத்தனை நல்லவராகவும், புரட்சிகர எண்ணம் கொண்டவராகவும், சமுதாய சீர்கேட்டை எதிர்ப்பவராகவும் இந்த பாத்திரம் எனக்கு கண்ணதாசனாகவே தெரிகிறது கதை முழுதும்.

அடுத்ததாக ஜெயா. கதையின் நாயகி. கிராமத்து பெண்ணாகவும், சென்னைக்கு வந்தபின் அதன் போக்கிற்கு மாறி, காதல் வயப்படும்போது அதற்கே உரிய மனநிலைகளை வெளிப்படுத்தி, பின்னர் வஞ்சிக்கப்படும் போது வருந்தி, உழன்று, மீண்டு தைரியத்தோடு தவறே ஆனாலும் குடும்பத்திற்காக விபச்சாரம் செய்வதும் அருமையான பாத்திர படைப்பு. இதில் அவளுடைய மன சஞ்சலங்களையும் ஊசலாட்டத்தையும் அழகாக சொல்லியிருப்பது கண்ணதாசனின் தனித்திறமை. அங்கே அந்த பெண்ணைதான் பார்க்க முடிகிறது. கண்ணதாசனையோ அவரது கருத்துக்களையோ அல்ல என்பதே அந்த பாத்திரப் படைப்பின் வெற்றி.

அந்த கால கட்டத்தில் சென்னை மேட்டுக்குடியில் நடந்த விஷயங்கள், அதன் தவறுகள், அவர்களில் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள், வஞ்சகங்கள், அவர்களில் நல்லவர்களும் இருந்தனர் என்பனவற்றையெல்லாம் கோர்வையாக அழகாக சொல்லியிருக்கிறார்.

மாணிக்கம்(ஜெயாவின் காதல் கணவர்), ஜெயச்சந்திரன் (ஜெயாவின் அத்தான்), சுலோச்சனா, திருப்பதி, கண்ணன், வேதநாயகத்தின் மனைவி, அவரின் குமாஸ்தா ஆகிய பாத்திரப் படப்புகள் அருமை. அன்றைய வாழ்க்கை முறை, சட்டம் மற்றும் நீதித் துறையில் நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சமுதாய நாவல் படித்த திருப்தி. அகல் விளக்கு மெல்ல நகரத் துவங்கியிருக்கிறது.

Tuesday, 28 February 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - வாசிப்பு

வேலை பலு, உடல்நல குறைபாடு, சில மனக் குழப்பங்களால் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்ற இந்த நாவலை படித்து முடிக்க எனக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

அவரது காலத்து கிராமத்து கதை. எப்போதும் போல் சீரான தடங்கல் இல்லாத நடை. ஆனால் ஏனோ அவருக்கு கிராமத்து வழக்கங்கள் சரிவர தெரியாததாலா என்னவோ காட்சிகள் மனதிற்குள் ஒட்டவில்லை. சற்ற செயற்கை கலந்தே தோன்றுகின்றன. பாத்திரங்களும் அவர்களின் பாஷைகளும் அப்படியே தோன்றுகின்றன.

இந்த சிறு நெருடல்களை தவிர்த்து பார்த்தால் நாவல் அருமையான ஒரு பயணமாக அமைந்தது. முக்கிய பத்திரங்களான ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, ச்பாபதி பிள்ளை ஆகியோரின் பாத்திரங்களும் அவர்கள் வழியே வழக்ககமான கதை சொல்லி வகையில் நாவலை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பாண்டு, கிளியாம்பாள், அக்கம்மாள் அகியோரின் வாயிலாகவும் சில இடங்களில் பேசியிருப்பதுதான் ஆச்சரியம். கிராமத்து அழகை விவரிக்க முயற்சித்து இருக்கிறார். ஏனோ என் மனதில் அந்த பாகம் சரியாக பதிய முறுக்கின்றன எனக்கு.

சபாபதி பிள்ளைக்கும் ஹென்றிக்கும்  இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன. தத்துவார்தமாகவும், நட்புடனும் அங்கே சொல்லப்படும் விஷயங்கள் அருமை. அடுத்ததாக ஹென்றி ஊருக்குள் வந்தது முதல் தான் யார் என்று தேவராஜனிடம் சொல்லும் வரை அவர்கள் இருவருக்குமான காட்சிகள் உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. துரைக்கண்ணு என்ற அந்த பத்திரம் அறிமுகத்தில் இருந்து முடியும் வரை தனது விசித்திரங்களால் வெகுவாய் கவர்கிறது. கிளியாம்பாள், அக்கம்மாள் பாத்திரங்களின் பங்கு பல இடங்களில் இருந்தாலும் பேபி என்ற அந்த பெண் பாத்திரம் நடுவில் வந்து இறுதியில் போவது ஏன் என்று தெரியவில்லை. கதையோடு ஏனோ ஒட்டவில்லை எனக்கு.

பழனியின் முடிவு தெரிந்த பின் சபாபதி பிள்ளையின் மனைவியின் நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் நாவலை படித்து முடித்த பின்னும் நீடிக்கிறது. பாண்டு, தர்மகாத்தா, மணியக்காரர், தேசிகன், மண்ணாங்கட்டி, கிழங்கு விற்கும் பெண் போன்ற மற்ற பாத்திரங்கள் அந்த கிராமத்தின் சூழலை விளக்குகின்றன.

ஹென்றி என்பவன் இத்தனை நல்லவனாக இருக்க முடியுமா. அவன் சொல்வதையெல்லாம் எப்படி தேவராஜனால ஏற்றுக்கொள்ள முடிகிறது. எப்படி எல்லோரும் இத்தனை நல்லவர்களாக் இருக்கிறார்கள். இந்த நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு 40 வருடத்திற்கு முந்திய ஒரு நிகழ்வை தள்ளி நின்று பார்த்த திருப்தி நிறைவாய் இருக்கிறது.

கதை என்னவோ ஒன்றும் இல்லை. ஊரை விட்டு இளைய பிராயத்தில் ஓடிப்போன ஒருவரின் சுவீகார புத்திரன் அவரது தந்தையின் பால் கொண்ட அன்பால் அந்த கிராமத்திற்கே அவரது இறப்பிற்கு பின் வந்து வாழ ஆரம்பிப்பதுதான் கதை.

அடுத்து கண்டிப்பாக மு.வ. வின் அகல் விளக்குதான்...