Thursday, 8 March 2012

மகளிர்தின வாழ்த்தும் கிடைத்த ஞானமும்

இன்று மார்ச் 08ஆம் தேதி. சர்வதேச மகளிர் தினம் இன்று. சரி எப்போதும் போல் இதுவும் ஒரு விழா நாள். ஹோலிப் பண்டிகையைகூட மறந்து எனக்கு தெரிந்த அனைத்து மகளிர்க்கும் வாழ்த்து சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில் காலையிலேயே ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த பெண்கள் என்றால் என் குடும்பத்தாரை தவிர்த்து மற்றைய எல்லோரும் இணையத்தில் பழக்கமானவர்கள்தான். அதில் எத்தனை போலியாக பெண் அடையாளத்தில் இருக்கிறார்களோ. நிஜத்தில் பசங்களே நம்மை மதிப்பதில்லை பெண்கள் எங்கே அப்புறம்.

சரி வழக்கம் போல் நான் குடியிருக்கும் ட்விட்டரில் ஆரம்பித்தேன். என் DP யை மகளிர் தினத்தை குறிக்கும் விதத்தில் மாற்றினேன். பிறகு காலையில் முதல் வேளையாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என கூறினேன். வழக்கம் போல் ட்விட்டரில் பெண்கள் அனைவரும் மொக்கையில் பிஸியாக இருந்ததால் என் வாழ்த்து கொஞ்சம் பேரையே திரும்பி பார்க்க வைத்தது. அதில் சற்று ஏமாற்றமே. அப்புறம் பேஸ்புக் பக்கம் போய் அழகான ஒரு சிறுமியின் படத்தை போட்டு நாலு வரியில் பெண்களை வாழ்த்தி எழுதி மகளிர் தின வாழ்த்தையும் எனது சுவற்றில் தெரிவித்தேன். குடியிருக்கும் ட்விட்டரை விட அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பேஸ்புக்கில் ரெஸ்பான்ஸ் நன்றாய் இருந்தது.

இதில் கிடைத்த அற்ப சந்தோஷத்திலும், ஏன் ஒரு போன் போட்டு வாழ்த்தகூடாதா என் வரும் திட்டுக்கு பயந்தும் என்னிடம் மொபைல் நம்பர் இருந்த ஒவ்வொரு பெண் நண்பர்களாக அழைத்தேன். அங்கே கிடத்தது ஒரு பெரிய பல்பு. அதன் மூலம் பிறந்தது ஒரு ஞானோதயம். 

முதல் இரண்டு தோழிகளும் வாழ்த்து சொன்னதும் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். மூன்றாமவருக்கு நான் வாழ்த்து சொன்னதுதான் தாமதம். என்னடா மாட்டுப் பொங்கல் மாதிரி மகளிர் தின வாழ்த்தா என்றாரே பார்க்கலாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் முழிப்பதை போனாக இருந்தாலும் சரியாக ஊகித்து கொண்ட அந்த தோழி, சொன்ன விளக்கம் என்னை அசிங்க பட வைத்தது. வருடம் முழுதும் அந்த மாட்டை கஷ்டப்படுத்தி வருத்தி வேலை வாங்குவீங்க. அதுக்கு உடம்புக்கு என்ன சப்பிட்டதா எங்காவது வலிக்குதா, பொதியை சுமக்க முடியுமா என்றெல்லாம் பார்க்காமல் அதை துன்புறுத்திவிட்டு, மாட்டுப் பொங்கலன்று மட்டும் அதை குளிப்பாட்டி, அகங்காரம் செய்து, படையல் போட்டு வேண்டியதை உண்ண கொடுத்து சீராட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றாரே பார்க்கலாம். அவர் சொல்லாமலேயே பெண்களை மற்ற நாட்களில் எவ்வாறு நடத்துகிறோம். இந்த மகளிர் தின நாளில் மட்டும் உயர்த்திப் பிடிக்கிறோம் என்ற குற்றச்சாட்டு புரிந்தது. எல்லா வித சிறப்பு நாட்களுக்கும் இது பொருந்தும் என்று அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அந்த தோழி.

சமாதானம் ஏதும் சொல்லத் தோன்றாமல் நானும் மொபைலை துண்டித்துவிட்டேன். வைக்கும்போது ஒரு முடிவும் தெளிவுக்கும் வந்தேன். எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இனிமேல் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் எத்தனை முக்கியமானவள், ஸ்பெஷலானவள் என்பது அவள் உணரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டேன். 

உழவில் மாட்டை பயன்படுத்தும் சூழலோ, வீட்டில் பாலுக்கு பசு மாடு வளர்க்கும் சூழலோ வந்தால் கண்டிப்பாக அந்த மாட்டிற்கு தினமும் திருவிழாவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது என முடிவு செய்தது தனி கதை.

Wednesday, 7 March 2012

விளக்கு மட்டுமா சிவப்பு ? - வாசிப்பு

கண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா? அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு?”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.

கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது. வந்த இடத்தில் வஞ்சிக்கப் பட்டு ஒரு உயிரை இழக்கிறது. அதையும் மீறி வாழ எத்தனிக்கையில் அடி மேல் அடி. பணக்காரர் ஒருத்தரின் சூழ்ச்சியால் வசந்தமாய் வரும் காதல் அழிக்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரமான ஜெயா தவறாக விபச்சாரியென குற்றம்சாட்டப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறாள். பின்னர் அதையே தெழிலாக ஏற்றுக்கொண்டு அவள் வாழ்கிறாள். அப்போதும் விதி துரத்தி அவளையும் அவளை சேர்ந்தவர்களையும் அலைக்கழிக்கிறது.

இந்த நாவலில் கதை சொல்லிகளாக இருவர் வருகிறார்கள். ஒன்று வேதநாயகம் என்ற வக்கீல். அவரது கதாபாத்திரமே கண்ணதாசன் தன்னையே மனதில் வைத்து உருவாக்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அத்தனை நல்லவராகவும், புரட்சிகர எண்ணம் கொண்டவராகவும், சமுதாய சீர்கேட்டை எதிர்ப்பவராகவும் இந்த பாத்திரம் எனக்கு கண்ணதாசனாகவே தெரிகிறது கதை முழுதும்.

அடுத்ததாக ஜெயா. கதையின் நாயகி. கிராமத்து பெண்ணாகவும், சென்னைக்கு வந்தபின் அதன் போக்கிற்கு மாறி, காதல் வயப்படும்போது அதற்கே உரிய மனநிலைகளை வெளிப்படுத்தி, பின்னர் வஞ்சிக்கப்படும் போது வருந்தி, உழன்று, மீண்டு தைரியத்தோடு தவறே ஆனாலும் குடும்பத்திற்காக விபச்சாரம் செய்வதும் அருமையான பாத்திர படைப்பு. இதில் அவளுடைய மன சஞ்சலங்களையும் ஊசலாட்டத்தையும் அழகாக சொல்லியிருப்பது கண்ணதாசனின் தனித்திறமை. அங்கே அந்த பெண்ணைதான் பார்க்க முடிகிறது. கண்ணதாசனையோ அவரது கருத்துக்களையோ அல்ல என்பதே அந்த பாத்திரப் படைப்பின் வெற்றி.

அந்த கால கட்டத்தில் சென்னை மேட்டுக்குடியில் நடந்த விஷயங்கள், அதன் தவறுகள், அவர்களில் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள், வஞ்சகங்கள், அவர்களில் நல்லவர்களும் இருந்தனர் என்பனவற்றையெல்லாம் கோர்வையாக அழகாக சொல்லியிருக்கிறார்.

மாணிக்கம்(ஜெயாவின் காதல் கணவர்), ஜெயச்சந்திரன் (ஜெயாவின் அத்தான்), சுலோச்சனா, திருப்பதி, கண்ணன், வேதநாயகத்தின் மனைவி, அவரின் குமாஸ்தா ஆகிய பாத்திரப் படப்புகள் அருமை. அன்றைய வாழ்க்கை முறை, சட்டம் மற்றும் நீதித் துறையில் நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சமுதாய நாவல் படித்த திருப்தி. அகல் விளக்கு மெல்ல நகரத் துவங்கியிருக்கிறது.

Thursday, 1 March 2012

சாமி சாமி...


வழக்கம் போல அன்று காலை எழுந்து குளித்துவிட்டு, என் மகளை குளிப்பாட்டிவிட்டு அவளுக்கு சட்டை போட்டுவிட்டு நான் கிளம்ப அறைக்கு சென்றிவிட்டேன். என் மகளும் சாமி கும்பிட ஆரம்பித்தாள். நான் சிறு வயது முதல் கடைபிடித்து வந்த ஒரு பழக்கமான சாமி கும்பிடுவதாய் சொல்லி தினமும் காலையில் சாமியிடம் பேசுவதை அவளுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தேன். பேசுகிறேன் என்று சொல்லி என் கோரிக்கைகள், வீட்டில் அம்மாவில் ஆரம்பித்து அனைவரும் நல்லா இருக்க வேண்டும், பரீட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும், வேலை கிடைக்க வேண்டும் போன்ற வேண்டுதல்களை சாமியிடன் வைப்பது என் வழக்கம். அவளும் அதை மிகுந்த சிரத்தையுடன் தினமும் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.  நான் செய்வது போலவே அவளது சின்ன சின்ன கோரிக்கைகளையும் சாமியிடம் சொல்லுவாள். அதில் எங்களால் முடிந்ததை நானும் என் மனைவியும் நிறைவேற்றிவந்தோம். இன்றும் அவள் சாமியிடம் என்ன பேசுகிறாள் என்று காது கொடுத்துக் கொண்டே நான் அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தேன்.

சாமி சாமி அம்மா, அப்பா, தாத்தா, ஆயா, அத்தை, ஹரிஷ், மாமா, பெரிய ஆயா, ரோஸி மிஸ், தேஜு, தெருவில் இருக்கும் குட்டி நாய், பெரிய டெட்டி பியர் எல்லாம் நல்லா இருக்கனும். அப்புறம் சாமி அம்மாவும் அப்பாவும் இப்போவெல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம பர்த்துக்கோ சாமி. அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நேத்து அம்மா என்னை திட்டனாங்கன்னு அப்பா அம்மாவை அடிச்சுட்டார். பாவம் சாமி அம்மா. அவங்க மட்டும் என்ன செய்வாங்க. நான் கண் பார்வை இல்லாததை மறந்து சுவற்றில் மோதிக்கொண்ட்துக்கு அவங்க என்ன செய்வாங்க. ஏதாவது கோவத்தில் என்னை ஏதாவது சொல்லிவிட்டால் அப்பாவிற்கு ரொம்பவே கோவம் வந்துவிடும். அடிக்கடி என்னை வைத்துதான் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கறாங்க சாமி. கோவத்தில் அம்மா உன்னாலதாண்டி நான் திட்டுவாங்கறேன் என் சொல்லும்போதெல்லாம் எனக்கு அழுகையா வருது சாமி. சாமி நான் உன்கிட்ட வந்திடறேன். நீதான் என்னை படைச்சியாமே, அப்பா சொல்லியிருக்கார். அப்போ உனக்கு என்னை பிடிக்கும் இல்லையா. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விளையாட என்னை மாதிரி குறையெல்லாம் இல்லாம ஒரு அழகான குட்டி தம்பி பாப்பா கொடுத்துடு சாமி. நான் உன்கிட்டையே வந்திடறேன்.

இப்படி அவள் சாமிகிட்ட பேசிகிட்டிருக்கும் போது நான் துணுக்குற்றேன். என் மனைவிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அடுப்படியில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவசரமாய் வந்து அறையில் என்னை எட்டிப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த அந்த குழப்பமும் இயலாமையும் என்னை ஏதோ செய்தது. ஏதாவது கேட்டால் அழுதே விடுவாள் போல். மெல்ல அவளை அணைத்து முத்தமிட்டு சாமி அறைக்கு சென்று என் மகளை அனைத்துக்கொண்டேன்.

என் ஸ்பரிசம் பட்டவுடன் என் பக்கம் திரும்பி, அப்பா நான் சாமிகிட்ட சொல்லியிருக்கேன் என்னை அவர்கிட்ட கூட்டிகிட்டு ஒரு அழகான தம்பி பாப்பாவை உனக்கும் அம்மாவுக்கும் கொடுக்க சொல்லியிருக்கேன்.

Tuesday, 28 February 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - வாசிப்பு

வேலை பலு, உடல்நல குறைபாடு, சில மனக் குழப்பங்களால் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்ற இந்த நாவலை படித்து முடிக்க எனக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

அவரது காலத்து கிராமத்து கதை. எப்போதும் போல் சீரான தடங்கல் இல்லாத நடை. ஆனால் ஏனோ அவருக்கு கிராமத்து வழக்கங்கள் சரிவர தெரியாததாலா என்னவோ காட்சிகள் மனதிற்குள் ஒட்டவில்லை. சற்ற செயற்கை கலந்தே தோன்றுகின்றன. பாத்திரங்களும் அவர்களின் பாஷைகளும் அப்படியே தோன்றுகின்றன.

இந்த சிறு நெருடல்களை தவிர்த்து பார்த்தால் நாவல் அருமையான ஒரு பயணமாக அமைந்தது. முக்கிய பத்திரங்களான ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, ச்பாபதி பிள்ளை ஆகியோரின் பாத்திரங்களும் அவர்கள் வழியே வழக்ககமான கதை சொல்லி வகையில் நாவலை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பாண்டு, கிளியாம்பாள், அக்கம்மாள் அகியோரின் வாயிலாகவும் சில இடங்களில் பேசியிருப்பதுதான் ஆச்சரியம். கிராமத்து அழகை விவரிக்க முயற்சித்து இருக்கிறார். ஏனோ என் மனதில் அந்த பாகம் சரியாக பதிய முறுக்கின்றன எனக்கு.

சபாபதி பிள்ளைக்கும் ஹென்றிக்கும்  இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன. தத்துவார்தமாகவும், நட்புடனும் அங்கே சொல்லப்படும் விஷயங்கள் அருமை. அடுத்ததாக ஹென்றி ஊருக்குள் வந்தது முதல் தான் யார் என்று தேவராஜனிடம் சொல்லும் வரை அவர்கள் இருவருக்குமான காட்சிகள் உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. துரைக்கண்ணு என்ற அந்த பத்திரம் அறிமுகத்தில் இருந்து முடியும் வரை தனது விசித்திரங்களால் வெகுவாய் கவர்கிறது. கிளியாம்பாள், அக்கம்மாள் பாத்திரங்களின் பங்கு பல இடங்களில் இருந்தாலும் பேபி என்ற அந்த பெண் பாத்திரம் நடுவில் வந்து இறுதியில் போவது ஏன் என்று தெரியவில்லை. கதையோடு ஏனோ ஒட்டவில்லை எனக்கு.

பழனியின் முடிவு தெரிந்த பின் சபாபதி பிள்ளையின் மனைவியின் நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் நாவலை படித்து முடித்த பின்னும் நீடிக்கிறது. பாண்டு, தர்மகாத்தா, மணியக்காரர், தேசிகன், மண்ணாங்கட்டி, கிழங்கு விற்கும் பெண் போன்ற மற்ற பாத்திரங்கள் அந்த கிராமத்தின் சூழலை விளக்குகின்றன.

ஹென்றி என்பவன் இத்தனை நல்லவனாக இருக்க முடியுமா. அவன் சொல்வதையெல்லாம் எப்படி தேவராஜனால ஏற்றுக்கொள்ள முடிகிறது. எப்படி எல்லோரும் இத்தனை நல்லவர்களாக் இருக்கிறார்கள். இந்த நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு 40 வருடத்திற்கு முந்திய ஒரு நிகழ்வை தள்ளி நின்று பார்த்த திருப்தி நிறைவாய் இருக்கிறது.

கதை என்னவோ ஒன்றும் இல்லை. ஊரை விட்டு இளைய பிராயத்தில் ஓடிப்போன ஒருவரின் சுவீகார புத்திரன் அவரது தந்தையின் பால் கொண்ட அன்பால் அந்த கிராமத்திற்கே அவரது இறப்பிற்கு பின் வந்து வாழ ஆரம்பிப்பதுதான் கதை.

அடுத்து கண்டிப்பாக மு.வ. வின் அகல் விளக்குதான்...

Monday, 20 February 2012

As a Special Case


சனிக்கிழமை காலை. இடம் 100அடி சாலையில் உள்ள வடபழனி கிளை ஹச்.டி.எப்.சி. வங்கி.

“As a special case” இந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்துவிட்டது. எத்தனை customer care அலுவலர் கடைசி வாய்ப்பாக நமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் முன் உதிர்க்கும் அற்புத வார்த்தைகள். இதை ஹச்.டி.எப்.சி. பெண் அலுவலர் அந்த நபரிடம் சொல்லும்போது அவர்களின் உரையாடலை நிறைய கவனித்து என்னவென்று ஊகித்திருந்தேன்.

அந்த நபர் சுமார் 10,00,000 ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தியிருக்கிறார் அந்த வங்கியில். காலாண்டு முடிந்து அவரது வைப்புத் தொகையின் வட்டியை அவரது கணக்கில் சேர்ப்பதற்கு முன் அவரை கலந்தாலோசிக்காமலேயே வருமான வரிக்காக ஒரு தொகையை எடுத்துக் கொண்டுள்ளார்கள் வங்கியில். இதற்கான விளக்கம் கேட்டும் அந்த தொகை தனக்கு மீண்டும் வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் வாதிட்டுக்கொண்டிருந்தார். அந்த பெண்னை பார்த்தால் சற்று பாவமாகத்தான் இருந்தது. ஆனால் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எனக்கு தெரியாமல் எப்படி நீங்கள் எடுத்தீர்கள் என்று அந்த வாடிக்கையாள்ர் கேட்கும்போது அவர் பக்க நியாயம்தான் நிற்கிறது. மேலும் அவர் கூறுகைஇல் வேறு எந்த வங்கியிலும் அவருக்கு இதை போல காலாண்டுக்கு வ்ருமான வரியாக குறைக்கவில்லை என்றும் வாதிட்டார். குறைந்த பட்சம் இப்படி ஒரு புதிய பாலிசி ஹச்.டி.எப்.சி வங்கியில் வந்த பின் அதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா. இதற்கு அந்த அலுவலரின் மௌனம் அவர்கள் அதை செய்யவில்ல என்ற அதிர்ர்சியான உண்மையை எனக்கு சொல்லியது. மற்ற வாடிக்கையாளர்கள் இதை கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த வாடிக்கையாளரும் முடிவு தெரியாமல் எழுந்திருக்கப் போவதில்லை என்பதி பிடிவாதமாக் இருந்தார். யாராவது ஒரு மேலதிகாரியை உடனடியாக தான் சந்திக வேண்டும் என கூறி அமர்ந்துவிட்டார் அவர்.

அவர் கேட்ட ஒரு நச் கேள்வி அந்த பெண்ணை குழப்பி அசைத்தும் பார்த்தது. எனது வைப்பு நிதியில் ஒரு வருடம் முடிவில் இத்தனை ரூபாய் வட்டி வரும் என்பதை கணக்கிட்டு நீங்கள் வருமான வரியாக எனது வட்டியில் எடுத்தும் கொண்டீர்கள். சரி. நான் இந்த நிமிடம் எனது வைப்பு நிதியை கேன்சல் செய்கிறேன் என்றால் எனக்கு வருமானமாக வந்த வட்டியானது வருமான வரிக்கு உட்படாது. அப்படியானால் எனது முழு வட்டியையும் எந்த பிடித்தமும் இல்லாமல் நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று சொன்னார் பாருங்கள் அந்த பெண்ணுக்கு ஏதோ புரிந்த்து. வைப்பு நிதியை கென்சல் செய்கிறேன் என்றவுடன் உடனடியாக அதற்குரிய பார்மை வீம்பில் எடுத்து அவரிடம் நீட்டிவிட்டாள் அந்த பெண். அதன் பிறகு இந்த விளக்கத்தை அந்த வாடிக்கையாளர் கேட்டார். தனது மொபைலை எடுத்துக்கொண்டு அடுத்த cubicle க்கு போய் யாரோடோ ஒரு 10 நிமிடம் பேசிவிட்டு வந்து சொன்ன வார்த்தைதான் “As a Special case we will do it for you sir”.  அதற்குள் நான் வந்த வேலை முடிந்த்தால் அந்த வாடிக்கையாளர் ஏதோ கடிதம் எழுத ஆரம்பிப்பதை பார்த்துக் கொண்டே நான் வெளியேறினேன்.

என்னுள் எழுந்த கேள்விகள் வருமானத் வரித் துறைக்கு அந்த வாடிக்கையாலர் சார்பாக செலுத்தப்பட்ட்தாக சொல்லப்பட அந்த பணம் எப்படி வங்கியால் திருமப் பெற முடியும். அப்படியானால் அவர்கள் அந்த பணத்தை பிடித்தம் செய்த்தோடு இருக்கிறது. வருமான வரித் துறைக்கு கட்டியிருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் மற்றவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் காலாண்டு TDS பணமானது வங்கியிடமேதான் இருக்குமா. அந்த பணத்தை அவர்கள் என்னவேண்டுமானால் செய்யலாம். நமது உரிமைகளை எத்தனை பேர் இத்தனை உறுதியாக கேட்டு பெறுகிறோம். வாடிக்கையாளர்களாகிய நம்மை எப்படி இவர்கள் இத்தனை எளிதாக ஏமாற்ற முடிகிறது.

யாராவது HDFC , அல்லது மற்றைய வங்கியை சேர்ந்தவர்கள் என்ன தவறு நடந்திருக்கும் என் ஊகிக் முடிந்தால் பின்னூட்டத்தில் கூறவும்.

Saturday, 18 February 2012

கம்பீர அழகு

அழகு அது எங்கிருந்தாலும் ரசிப்பவன் நான். அதுவும் அது ஒரு பெண்ணிடமென்றால் இயற்கை நியதிப்படி ஒரு ஆணாக அதை அதிகமாகவே ரசிப்பவன். எதை அழகு என்று கொள்கிறேன். வளைவுகளையா, வண்ணங்களையா, குணத்தையா என்று பலமுறை என்னை நானே கேட்டு குழப்பிக்கொண்டிருக்கிறேன்.

வடபழனி முருகனுடன் ஒரு சின்ன சண்டையை முடித்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கையில் அந்த பெண்னை பார்த்தேன். ஒரு 30-35 வயது இருக்கும். கோவிலுக்கு போகிறார் என்று நினைக்கிறேன். புடவை கட்டியிருந்த அவரது கழுத்து முழுதும் தீப்புண் வடுக்கள். அதையும் தாண்டி அவரை ரசிக்க வைத்துவிட்டு போனார் அந்த நடுத்தர வயது பெண். அவர் வெளிப்படுத்திய கம்பீரம் அவரை மிகவும் அழகாக காண்பித்தது மட்டும் இல்லாமல் என் நினைவுகளில் தங்கிவிட்ட சில பெண்களை பற்றி நினைவு படுத்திவிட்டுப் போனது.

என் தோழி அறிமுகப்படுத்திய ஒரு பெண் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். நான் அறிந்த வெகு சில அழகிகளில் அவளும் ஒருத்தி. ஒரு தீ விபத்தில் அவளது உடல் முழுதும் வெந்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். ஒரு பக்கத்து முகத்தில் ஆரம்பித்து அவளது சுடிதாருக்கு மேல் தெரிந்த கழுத்து பகுதி முழுதும் அந்த தீக் காயம். அதை பற்றியெல்லாம் கவலையேபடாமல் சிரித்த முகம் மாறாமல் அவள் பேசிய விதம். அவளது வாழ்க்கையில் அவளது துன்பங்களை தள்ளி வைத்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை ஆரத்தழுவிக்கொண்டு அழகாக சிரிக்கத் தெரிந்த அவள் எனக்கு அத்தனை அழகாகத் தெரிந்தாள். என்னுள் அந்த ஒரு சில நிமிட சந்திப்பில் நிலைத்து நின்றுவிட்டாள். நான் என்னுள் அழகு என்பதற்கு வகுத்த இலக்கனத்திற்கு அவள் எல்லையாகிப் போனாள்.

இப்படி நிறைய பெண்கள் தோற்றத்தால் அல்லாமல் பிற விஷயங்களால் எனக்கு அழகாகத் தோன்றுகிறார்கள். அதுதான் உண்மையான அழகாகவும் எனக்கு தோன்றுகிறது. அப்படி இல்லையேல் நேற்று ஐஸ்வர்யா ராயும் இன்று அமலா பாலும் அழகு என்று போய் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Tuesday, 7 February 2012

ஒரு தமிழனின் இட்லி ஏக்கம்



இட்லி... ஒவ்வொரு தமிழனின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. எந்த மதமாக/சாதியாக இருந்தாலும், சைவமோ, அசைவமோ, தமிழகத்தின் எந்த பகுதியை சார்ந்தவராக் இருந்தாலும் இட்லி என்பது அனைத்து தமிழனின் அன்றாட உணவில் அங்கம் வகிக்கிறது.

ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முதலில் ஊட்டப்படும் உணவு இட்லியாகத்தான் இருக்கும். உடல்நிலை சரியில்லையா இட்லியும், இடியாப்பமும்தான் முதல் உணவு. பிள்ளை பெற்றவுடன் தாய்க்கு முதல் உணவு இட்லிதான். இப்படி நீக்கமற நிறைந்து இருக்கிறது இட்லி தமிழனின் வாழ்வில். சிறு வயதில் தினமும் காலை இட்லிதான் உணவு என்பதால் வெறுத்து போய் பின்னர் இட்லியை கண்டாலே சாப்பிட மறுக்கும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர்.

இட்லி என்பது - ஊற வைக்கப்பட்ட அரிசி, உளுந்து, வெந்தையம் இவற்றை அரைத்து, சேர்த்து சிறிது நேரம் புளித்த பின் இட்லி தட்டில் ஊற்றி ஆவியில்(பேய் இல்லை) நீராவியில் வேக வைத்து தயாரிப்பது. இதற்கு பல வகையான சட்னி தொட்டுக்கலாம். தேங்காய் சட்னி, வேர்கடலை சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, பொதினா சட்னி, சாம்பார், குருமா, இட்லி பொடி, பொட்டுக்கடலை தூள், சக்கரை, நெய் + சக்கரை, தயிர் + சக்கரை என் பல வகையான தொட்டுக்கைகள் இருக்கின்றன. இது சைவ பிரியர்களுக்கு. அசைவ பிரியர்களுக்கு ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி குருமா, மீன் குழம்ப்பு, கருவாட்டு குழம்பு என பல தொட்டுக்கைகள் உண்டு.

இப்போதைக்கு விஷயத்துக்கு வருவோம். இப்படி தமிழனின் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட இட்லியின் தற்போதைய விலைப்பட்டியல் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் வந்த பதிவே இது.

காலையில் அவசரமாய் அலுவலகம் போகனும்னா அந்த ஹோட்டலில் போய் ரெண்டு இட்லி சாப்டு போயிடலாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். சாய்ங்காலம் அலுவலகம் விட்டு வருகின்ற வழியில் அசதியாய் இருந்தா அந்த கபேயில் போய் ஒரு ப்ளேட் இட்லி சாப்டு போகலாம் என்ற நிலை இருந்தது. இதெல்லாம் இப்போ நிறையவே மாறிவிட்டது.

இரண்டு இட்லியின் விலை தறுமாறாக ஏறிக் கிடக்கிறது. சிறிய ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை இதே நிலைதான். என்னதான் கணக்கு போட்டாலும் ஒரு சுவையான இட்லி 3 வகை சட்னியோடு 1ரூபாய்க்குள்தான் விலை வரும். இந்த இட்லி ஒவ்வொரு ஹோட்டலிலும் என்னவெல்லாம் விலைக்கு விற்கப் படுகிறது. ஒரு கையேந்தி பவனில் 2இட்லியின் விலை 5ரூபாயில் ஆரம்பிக்கிறது இந்த விலைப்பட்டியல். இதில் இருந்து ஏறுமுகமாக ஹோட்டலின் நிலைக்கும் பாப்புலாரிட்டிக்கும் ஏற்ப மாறுபடுகிறது. 1 இட்லி 3ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய், 10ரூபாய், 13ரூபாய், 15ரூபாய் என் வேறுபடுகிறது.

என்ன ஹோட்டலின் வசதிகள்தான் மாறுகின்றன. 2இட்லிக்கு 4 வகை சட்னி, சாம்பார், இதுதான் வித்யாசம். ஆனால் விலை மட்டும் வீட்டில் ஆகும் அடக்க விலைக்கு சுமார் 15 மடங்கு வரை அதிகம். இதில் இட்லிக்கு என்று கடை நடத்தும் சில இடங்களில் இட்லி தூளுக்கு தனியாக காசு வாங்குகிறார்கள்.

இதையெல்லாம்விட கொடுமையானது ஒன்று உண்டு. இட்லி என்றாலே மல்லிகப் பூ போன்று லேசாக இருக்கும். சில கடைகளின் இட்லியானது அத்தனை கல் போன்று இருக்கிறது. அதன் விலையையும் தன்மையையும் பார்த்து எரிச்சலில் சில நேரம் நேராக எடுத்து சென்று கல்லாவில் இருப்பவரை அதாலேயே அடித்து காயப் படுத்த வேண்டும் என்று தோன்றும்.

இதற்கு என்னதான் வழி என்று தெரியவில்லை. எல்லோரின் உணவான இட்லியின் விலையை எல்லா இடத்திலும் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஏற்றுகொள்ளும் அளவிலாவது வைத்திருக்க என்னதான் வழி. இது அவசரத்திற்கு இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு ஓடும் சராசரி தமிழனின் ஏக்கம்...

பி. கு: இட்லியில் வழக்காமாக கிடைக்கும் இட்லி மட்டும் இல்லாமல், மதுரை மல்லி இட்லி ( இதுதான் இப்போது குஷ்பு இட்லி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), மினி இட்லி, சாம்பார் இட்லி, ரவா இட்லி என இட்லியிலும் பல வகை வந்து நமது பர்சை காலி செய்கின்றன.