Tuesday, 28 February 2012

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் - வாசிப்பு

வேலை பலு, உடல்நல குறைபாடு, சில மனக் குழப்பங்களால் ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் என்ற இந்த நாவலை படித்து முடிக்க எனக்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

அவரது காலத்து கிராமத்து கதை. எப்போதும் போல் சீரான தடங்கல் இல்லாத நடை. ஆனால் ஏனோ அவருக்கு கிராமத்து வழக்கங்கள் சரிவர தெரியாததாலா என்னவோ காட்சிகள் மனதிற்குள் ஒட்டவில்லை. சற்ற செயற்கை கலந்தே தோன்றுகின்றன. பாத்திரங்களும் அவர்களின் பாஷைகளும் அப்படியே தோன்றுகின்றன.

இந்த சிறு நெருடல்களை தவிர்த்து பார்த்தால் நாவல் அருமையான ஒரு பயணமாக அமைந்தது. முக்கிய பத்திரங்களான ஹென்றி, தேவராஜன், துரைக்கண்ணு, ச்பாபதி பிள்ளை ஆகியோரின் பாத்திரங்களும் அவர்கள் வழியே வழக்ககமான கதை சொல்லி வகையில் நாவலை நகர்த்தி சென்றிருப்பது அருமை. பாண்டு, கிளியாம்பாள், அக்கம்மாள் அகியோரின் வாயிலாகவும் சில இடங்களில் பேசியிருப்பதுதான் ஆச்சரியம். கிராமத்து அழகை விவரிக்க முயற்சித்து இருக்கிறார். ஏனோ என் மனதில் அந்த பாகம் சரியாக பதிய முறுக்கின்றன எனக்கு.

சபாபதி பிள்ளைக்கும் ஹென்றிக்கும்  இடையிலான உரையாடல்கள் என்னை மிகவும் கவர்கின்றன. தத்துவார்தமாகவும், நட்புடனும் அங்கே சொல்லப்படும் விஷயங்கள் அருமை. அடுத்ததாக ஹென்றி ஊருக்குள் வந்தது முதல் தான் யார் என்று தேவராஜனிடம் சொல்லும் வரை அவர்கள் இருவருக்குமான காட்சிகள் உரையாடல்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. துரைக்கண்ணு என்ற அந்த பத்திரம் அறிமுகத்தில் இருந்து முடியும் வரை தனது விசித்திரங்களால் வெகுவாய் கவர்கிறது. கிளியாம்பாள், அக்கம்மாள் பாத்திரங்களின் பங்கு பல இடங்களில் இருந்தாலும் பேபி என்ற அந்த பெண் பாத்திரம் நடுவில் வந்து இறுதியில் போவது ஏன் என்று தெரியவில்லை. கதையோடு ஏனோ ஒட்டவில்லை எனக்கு.

பழனியின் முடிவு தெரிந்த பின் சபாபதி பிள்ளையின் மனைவியின் நிலை என்னவாகியிருக்கும் என்ற எண்ணம் நாவலை படித்து முடித்த பின்னும் நீடிக்கிறது. பாண்டு, தர்மகாத்தா, மணியக்காரர், தேசிகன், மண்ணாங்கட்டி, கிழங்கு விற்கும் பெண் போன்ற மற்ற பாத்திரங்கள் அந்த கிராமத்தின் சூழலை விளக்குகின்றன.

ஹென்றி என்பவன் இத்தனை நல்லவனாக இருக்க முடியுமா. அவன் சொல்வதையெல்லாம் எப்படி தேவராஜனால ஏற்றுக்கொள்ள முடிகிறது. எப்படி எல்லோரும் இத்தனை நல்லவர்களாக் இருக்கிறார்கள். இந்த நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு 40 வருடத்திற்கு முந்திய ஒரு நிகழ்வை தள்ளி நின்று பார்த்த திருப்தி நிறைவாய் இருக்கிறது.

கதை என்னவோ ஒன்றும் இல்லை. ஊரை விட்டு இளைய பிராயத்தில் ஓடிப்போன ஒருவரின் சுவீகார புத்திரன் அவரது தந்தையின் பால் கொண்ட அன்பால் அந்த கிராமத்திற்கே அவரது இறப்பிற்கு பின் வந்து வாழ ஆரம்பிப்பதுதான் கதை.

அடுத்து கண்டிப்பாக மு.வ. வின் அகல் விளக்குதான்...

Monday, 20 February 2012

As a Special Case


சனிக்கிழமை காலை. இடம் 100அடி சாலையில் உள்ள வடபழனி கிளை ஹச்.டி.எப்.சி. வங்கி.

“As a special case” இந்த வார்த்தைகள் என் மனதில் பதிந்துவிட்டது. எத்தனை customer care அலுவலர் கடைசி வாய்ப்பாக நமது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் முன் உதிர்க்கும் அற்புத வார்த்தைகள். இதை ஹச்.டி.எப்.சி. பெண் அலுவலர் அந்த நபரிடம் சொல்லும்போது அவர்களின் உரையாடலை நிறைய கவனித்து என்னவென்று ஊகித்திருந்தேன்.

அந்த நபர் சுமார் 10,00,000 ரூபாய் பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தியிருக்கிறார் அந்த வங்கியில். காலாண்டு முடிந்து அவரது வைப்புத் தொகையின் வட்டியை அவரது கணக்கில் சேர்ப்பதற்கு முன் அவரை கலந்தாலோசிக்காமலேயே வருமான வரிக்காக ஒரு தொகையை எடுத்துக் கொண்டுள்ளார்கள் வங்கியில். இதற்கான விளக்கம் கேட்டும் அந்த தொகை தனக்கு மீண்டும் வேண்டும் என்றும் அந்த வாடிக்கையாளர் வாதிட்டுக்கொண்டிருந்தார். அந்த பெண்னை பார்த்தால் சற்று பாவமாகத்தான் இருந்தது. ஆனால் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை எனக்கு தெரியாமல் எப்படி நீங்கள் எடுத்தீர்கள் என்று அந்த வாடிக்கையாள்ர் கேட்கும்போது அவர் பக்க நியாயம்தான் நிற்கிறது. மேலும் அவர் கூறுகைஇல் வேறு எந்த வங்கியிலும் அவருக்கு இதை போல காலாண்டுக்கு வ்ருமான வரியாக குறைக்கவில்லை என்றும் வாதிட்டார். குறைந்த பட்சம் இப்படி ஒரு புதிய பாலிசி ஹச்.டி.எப்.சி வங்கியில் வந்த பின் அதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் அல்லவா. இதற்கு அந்த அலுவலரின் மௌனம் அவர்கள் அதை செய்யவில்ல என்ற அதிர்ர்சியான உண்மையை எனக்கு சொல்லியது. மற்ற வாடிக்கையாளர்கள் இதை கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த வாடிக்கையாளரும் முடிவு தெரியாமல் எழுந்திருக்கப் போவதில்லை என்பதி பிடிவாதமாக் இருந்தார். யாராவது ஒரு மேலதிகாரியை உடனடியாக தான் சந்திக வேண்டும் என கூறி அமர்ந்துவிட்டார் அவர்.

அவர் கேட்ட ஒரு நச் கேள்வி அந்த பெண்ணை குழப்பி அசைத்தும் பார்த்தது. எனது வைப்பு நிதியில் ஒரு வருடம் முடிவில் இத்தனை ரூபாய் வட்டி வரும் என்பதை கணக்கிட்டு நீங்கள் வருமான வரியாக எனது வட்டியில் எடுத்தும் கொண்டீர்கள். சரி. நான் இந்த நிமிடம் எனது வைப்பு நிதியை கேன்சல் செய்கிறேன் என்றால் எனக்கு வருமானமாக வந்த வட்டியானது வருமான வரிக்கு உட்படாது. அப்படியானால் எனது முழு வட்டியையும் எந்த பிடித்தமும் இல்லாமல் நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று சொன்னார் பாருங்கள் அந்த பெண்ணுக்கு ஏதோ புரிந்த்து. வைப்பு நிதியை கென்சல் செய்கிறேன் என்றவுடன் உடனடியாக அதற்குரிய பார்மை வீம்பில் எடுத்து அவரிடம் நீட்டிவிட்டாள் அந்த பெண். அதன் பிறகு இந்த விளக்கத்தை அந்த வாடிக்கையாளர் கேட்டார். தனது மொபைலை எடுத்துக்கொண்டு அடுத்த cubicle க்கு போய் யாரோடோ ஒரு 10 நிமிடம் பேசிவிட்டு வந்து சொன்ன வார்த்தைதான் “As a Special case we will do it for you sir”.  அதற்குள் நான் வந்த வேலை முடிந்த்தால் அந்த வாடிக்கையாளர் ஏதோ கடிதம் எழுத ஆரம்பிப்பதை பார்த்துக் கொண்டே நான் வெளியேறினேன்.

என்னுள் எழுந்த கேள்விகள் வருமானத் வரித் துறைக்கு அந்த வாடிக்கையாலர் சார்பாக செலுத்தப்பட்ட்தாக சொல்லப்பட அந்த பணம் எப்படி வங்கியால் திருமப் பெற முடியும். அப்படியானால் அவர்கள் அந்த பணத்தை பிடித்தம் செய்த்தோடு இருக்கிறது. வருமான வரித் துறைக்கு கட்டியிருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் மற்றவர்களிடம் பிடித்தம் செய்யப்படும் காலாண்டு TDS பணமானது வங்கியிடமேதான் இருக்குமா. அந்த பணத்தை அவர்கள் என்னவேண்டுமானால் செய்யலாம். நமது உரிமைகளை எத்தனை பேர் இத்தனை உறுதியாக கேட்டு பெறுகிறோம். வாடிக்கையாளர்களாகிய நம்மை எப்படி இவர்கள் இத்தனை எளிதாக ஏமாற்ற முடிகிறது.

யாராவது HDFC , அல்லது மற்றைய வங்கியை சேர்ந்தவர்கள் என்ன தவறு நடந்திருக்கும் என் ஊகிக் முடிந்தால் பின்னூட்டத்தில் கூறவும்.

Saturday, 18 February 2012

கம்பீர அழகு

அழகு அது எங்கிருந்தாலும் ரசிப்பவன் நான். அதுவும் அது ஒரு பெண்ணிடமென்றால் இயற்கை நியதிப்படி ஒரு ஆணாக அதை அதிகமாகவே ரசிப்பவன். எதை அழகு என்று கொள்கிறேன். வளைவுகளையா, வண்ணங்களையா, குணத்தையா என்று பலமுறை என்னை நானே கேட்டு குழப்பிக்கொண்டிருக்கிறேன்.

வடபழனி முருகனுடன் ஒரு சின்ன சண்டையை முடித்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருக்கையில் அந்த பெண்னை பார்த்தேன். ஒரு 30-35 வயது இருக்கும். கோவிலுக்கு போகிறார் என்று நினைக்கிறேன். புடவை கட்டியிருந்த அவரது கழுத்து முழுதும் தீப்புண் வடுக்கள். அதையும் தாண்டி அவரை ரசிக்க வைத்துவிட்டு போனார் அந்த நடுத்தர வயது பெண். அவர் வெளிப்படுத்திய கம்பீரம் அவரை மிகவும் அழகாக காண்பித்தது மட்டும் இல்லாமல் என் நினைவுகளில் தங்கிவிட்ட சில பெண்களை பற்றி நினைவு படுத்திவிட்டுப் போனது.

என் தோழி அறிமுகப்படுத்திய ஒரு பெண் என்னிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதிகம். நான் அறிந்த வெகு சில அழகிகளில் அவளும் ஒருத்தி. ஒரு தீ விபத்தில் அவளது உடல் முழுதும் வெந்திருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன். ஒரு பக்கத்து முகத்தில் ஆரம்பித்து அவளது சுடிதாருக்கு மேல் தெரிந்த கழுத்து பகுதி முழுதும் அந்த தீக் காயம். அதை பற்றியெல்லாம் கவலையேபடாமல் சிரித்த முகம் மாறாமல் அவள் பேசிய விதம். அவளது வாழ்க்கையில் அவளது துன்பங்களை தள்ளி வைத்துவிட்டு கிடைத்த வாழ்க்கையை ஆரத்தழுவிக்கொண்டு அழகாக சிரிக்கத் தெரிந்த அவள் எனக்கு அத்தனை அழகாகத் தெரிந்தாள். என்னுள் அந்த ஒரு சில நிமிட சந்திப்பில் நிலைத்து நின்றுவிட்டாள். நான் என்னுள் அழகு என்பதற்கு வகுத்த இலக்கனத்திற்கு அவள் எல்லையாகிப் போனாள்.

இப்படி நிறைய பெண்கள் தோற்றத்தால் அல்லாமல் பிற விஷயங்களால் எனக்கு அழகாகத் தோன்றுகிறார்கள். அதுதான் உண்மையான அழகாகவும் எனக்கு தோன்றுகிறது. அப்படி இல்லையேல் நேற்று ஐஸ்வர்யா ராயும் இன்று அமலா பாலும் அழகு என்று போய் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Tuesday, 7 February 2012

ஒரு தமிழனின் இட்லி ஏக்கம்



இட்லி... ஒவ்வொரு தமிழனின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. எந்த மதமாக/சாதியாக இருந்தாலும், சைவமோ, அசைவமோ, தமிழகத்தின் எந்த பகுதியை சார்ந்தவராக் இருந்தாலும் இட்லி என்பது அனைத்து தமிழனின் அன்றாட உணவில் அங்கம் வகிக்கிறது.

ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஒரு குழந்தைக்கு முதலில் ஊட்டப்படும் உணவு இட்லியாகத்தான் இருக்கும். உடல்நிலை சரியில்லையா இட்லியும், இடியாப்பமும்தான் முதல் உணவு. பிள்ளை பெற்றவுடன் தாய்க்கு முதல் உணவு இட்லிதான். இப்படி நீக்கமற நிறைந்து இருக்கிறது இட்லி தமிழனின் வாழ்வில். சிறு வயதில் தினமும் காலை இட்லிதான் உணவு என்பதால் வெறுத்து போய் பின்னர் இட்லியை கண்டாலே சாப்பிட மறுக்கும் நிலைக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர்.

இட்லி என்பது - ஊற வைக்கப்பட்ட அரிசி, உளுந்து, வெந்தையம் இவற்றை அரைத்து, சேர்த்து சிறிது நேரம் புளித்த பின் இட்லி தட்டில் ஊற்றி ஆவியில்(பேய் இல்லை) நீராவியில் வேக வைத்து தயாரிப்பது. இதற்கு பல வகையான சட்னி தொட்டுக்கலாம். தேங்காய் சட்னி, வேர்கடலை சட்னி, வெங்காய சட்னி, தக்காளி சட்னி, பொதினா சட்னி, சாம்பார், குருமா, இட்லி பொடி, பொட்டுக்கடலை தூள், சக்கரை, நெய் + சக்கரை, தயிர் + சக்கரை என் பல வகையான தொட்டுக்கைகள் இருக்கின்றன. இது சைவ பிரியர்களுக்கு. அசைவ பிரியர்களுக்கு ஆட்டுக்கறி குழம்பு, கோழிக்கறி குருமா, மீன் குழம்ப்பு, கருவாட்டு குழம்பு என பல தொட்டுக்கைகள் உண்டு.

இப்போதைக்கு விஷயத்துக்கு வருவோம். இப்படி தமிழனின் வாழ்வில் நீக்கமற நிறைந்துவிட்ட இட்லியின் தற்போதைய விலைப்பட்டியல் என்ன என்று ஆராய்ந்து பார்த்ததில் வந்த பதிவே இது.

காலையில் அவசரமாய் அலுவலகம் போகனும்னா அந்த ஹோட்டலில் போய் ரெண்டு இட்லி சாப்டு போயிடலாம் என்றுதான் நினைக்கத் தோன்றும். சாய்ங்காலம் அலுவலகம் விட்டு வருகின்ற வழியில் அசதியாய் இருந்தா அந்த கபேயில் போய் ஒரு ப்ளேட் இட்லி சாப்டு போகலாம் என்ற நிலை இருந்தது. இதெல்லாம் இப்போ நிறையவே மாறிவிட்டது.

இரண்டு இட்லியின் விலை தறுமாறாக ஏறிக் கிடக்கிறது. சிறிய ஹோட்டல் முதல் பெரிய ஹோட்டல் வரை இதே நிலைதான். என்னதான் கணக்கு போட்டாலும் ஒரு சுவையான இட்லி 3 வகை சட்னியோடு 1ரூபாய்க்குள்தான் விலை வரும். இந்த இட்லி ஒவ்வொரு ஹோட்டலிலும் என்னவெல்லாம் விலைக்கு விற்கப் படுகிறது. ஒரு கையேந்தி பவனில் 2இட்லியின் விலை 5ரூபாயில் ஆரம்பிக்கிறது இந்த விலைப்பட்டியல். இதில் இருந்து ஏறுமுகமாக ஹோட்டலின் நிலைக்கும் பாப்புலாரிட்டிக்கும் ஏற்ப மாறுபடுகிறது. 1 இட்லி 3ரூபாய், 5 ரூபாய், 7 ரூபாய், 10ரூபாய், 13ரூபாய், 15ரூபாய் என் வேறுபடுகிறது.

என்ன ஹோட்டலின் வசதிகள்தான் மாறுகின்றன. 2இட்லிக்கு 4 வகை சட்னி, சாம்பார், இதுதான் வித்யாசம். ஆனால் விலை மட்டும் வீட்டில் ஆகும் அடக்க விலைக்கு சுமார் 15 மடங்கு வரை அதிகம். இதில் இட்லிக்கு என்று கடை நடத்தும் சில இடங்களில் இட்லி தூளுக்கு தனியாக காசு வாங்குகிறார்கள்.

இதையெல்லாம்விட கொடுமையானது ஒன்று உண்டு. இட்லி என்றாலே மல்லிகப் பூ போன்று லேசாக இருக்கும். சில கடைகளின் இட்லியானது அத்தனை கல் போன்று இருக்கிறது. அதன் விலையையும் தன்மையையும் பார்த்து எரிச்சலில் சில நேரம் நேராக எடுத்து சென்று கல்லாவில் இருப்பவரை அதாலேயே அடித்து காயப் படுத்த வேண்டும் என்று தோன்றும்.

இதற்கு என்னதான் வழி என்று தெரியவில்லை. எல்லோரின் உணவான இட்லியின் விலையை எல்லா இடத்திலும் ஒன்றாக இல்லாவிட்டாலும் ஏற்றுகொள்ளும் அளவிலாவது வைத்திருக்க என்னதான் வழி. இது அவசரத்திற்கு இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டு ஓடும் சராசரி தமிழனின் ஏக்கம்...

பி. கு: இட்லியில் வழக்காமாக கிடைக்கும் இட்லி மட்டும் இல்லாமல், மதுரை மல்லி இட்லி ( இதுதான் இப்போது குஷ்பு இட்லி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), மினி இட்லி, சாம்பார் இட்லி, ரவா இட்லி என இட்லியிலும் பல வகை வந்து நமது பர்சை காலி செய்கின்றன.