Saturday 31 March 2012

மூன்று குடிமகன்கள்

எனது பயணங்களிலின்போதும் வெளியே எங்கு செல்லும்போதும் மழலைக்ளுக்கு அடுத்த படியாக நான் அதிகம் ரசிப்பது, கவனிப்பது குடிகாரர்களைதான். அவர்களின் சேஷ்டைகள், புலம்பலாக வரும் உண்மைகள், போதையை மீறி அவர்கள் தெளிவாக நடந்துகொள்ளும் திறமை என பல விஷயங்களை கவனித்து ரசித்திருக்கிறேன்.

கடந்த வார பயணங்களில் ரசித்த குடிமகன்களின் அட்டகாசங்கள். புதுவை டு விழுப்புரம். புதுவையில் இருந்த எந்த ஊருக்கு பேருந்து ஏறினாலும் நிறைய காட்சிகள் விரியும் கண்முன்னே. மதகடிப்பட்டில் அவர்கள் மூவரும் ஏறினார்கள். அவரில் ஒருவரால் நிற்கவே முடியவில்லை, இருந்தும் படிக்கட்டு பயணம் என அடம் பிடித்தார். அப்படி என்னதான் அவசரமோ அவருக்கு போவதில். நடத்துனர் மற்றும் அனைவரும் சொல்லிய பின்னர் மெதுவாக் உள்ளே வந்தார். அப்போதுதான் அனைவரும் பீல் செய்தோம். ஏண்டா அவரை உள்ளே அழைத்தோம் என்றாகிவிட்ட்து. அவரால் நிலையாய் நிற்ககூட முடியவில்லை கம்பியை பிடித்துகொண்டு அவரது இடுப்பு ஏதோ கிரண்டர் சுத்துவது போல சுத்தி சுத்தி வந்த அழகை மீதி பயணம் முழுதும் ரசித்திருந்திப்பேன். ஆனால் அருகில் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பெண் மீது அவரது குழற்சி இடித்ததால் பெண் இன பாதுகாவலன் வேஷம் அழைத்த்து. அண்ணே கொஞ்சம் தள்ளி நில்லுங்க என சொல்ல அவருடன் வந்த மற்ற இருவரும் சமாதானம் சொல்ல ஆரம்பித்தார்கள். கொஞ்சம் பொறுத்துக்கோங்க என்றார்கள். வழக்கமான குடிமகன்களிடமிருந்து வரும் எகத்தாளமான பதில் மிஸ்ஸிங். ஆட்களை பார்த்தால் எனக்கும் சந்தேகம். அவரும் ஆடி ஆடி. கம்பியில் சாய்ந்து, பின்னர் வழிந்து, ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெண்ணின் மீது அமரும் நிலைக்கே போய்விட்டார். ச்ற்று சத்தம் போட்டபின் அவருடன் வந்தவர்கள் சொன்னார்கள் அவர் CBCID இன்ஸ்பெக்டராம். மற்ற இருவரும் போலீஸ்காரகள் போல. உள்ளுக்குள் பயம் கவ்வினாலும். பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தேன். அந்த பெண்ணும் வழியில் இறங்கிவிட. அங்கே அவர் உட்கார்ந்துகொண்டார். உட்கார்ந்ததும் உறங்கியும் போனார். மாதா கோவில் ஸ்டாப். அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் போலும். அவரை எழுப்பி இறங்க வைக்க முயன்றார்கள் அவர் எங்கே எழுவது. இருவரும் ஒரு 2 நிமிடம் முயன்றுவிட்டு. அவரை தனியே விட்டுவிட்டு போய்விட்டனர். நான் பேருந்து நிலையத்தில் இவரை இறக்க நடத்துனர் படப் போகும் பாட்டை எண்ணி வருந்தினேன். அடுத்த ஸ்டாப்பில் நானும் இறங்கிவிட்ட்தால் அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

அடுத்தது இரண்டும் அன்றே விழுப்புரம் டூ சென்னை பேருந்தில் நடந்த சுவாரஸ்யங்கள். வெள்ளி விடுமுறையாதலால் வழக்கத்தை விட சென்னைக்கு செல்லும் கூட்டம் அதிகம் அன்று. ஓடிப்போய் பேருந்து ஏறி வசதியாய் ஒரு இடம் பிடித்து உட்கார்ந்தேன். ஒரு அம்மா வந்து பக்கத்தில் உள்ள 2 இடமும் காலியா என கேட்டு அவரது மகனுடன் அமர்ந்தார். அமர்ந்த பின் அந்த மகனை அனுப்பி “அவனைபோய் கூட்டிகிட்டு வாடா என்றார். அவரது மூத்த பிள்ளையாக இருக்கும் என பார்த்தால், அவரது கணவர் போல அது. நல்ல போதையிலிருந்த அவரை வேறு ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு இவர்கள் அமர்ந்தார்கள். அவரோ தன்னிலையில் இல்லை. பேருந்து புறப்பட்ட சிறுது நேரத்துலெயே சாய்ந்து விழ ஆரம்பித்தார். அந்த அம்மாவுக்கோ பயங்கர கோவம் வந்தது. இவனுக்கு வேற வேலையே இல்லை என திட்ட ஆரம்பித்துவிட்டார். இரண்டாவது முறை சாய்ந்து கீழே விழுந்தார் அந்த அப்பா குடிகாரர். அவர் இரண்டு பேர் அமரும் இருக்கையில் அமர்ந்திருந்ததால் எளிதில் சாய ஆரம்பித்தார். இதற்குமேலும் அமைதி சரிவராதென்று நான் அவர் இட்த்திற்கு போகிறேன் என்று அந்த மகனிடம் கூறினேன். அவனும் அவரை மிகவும் கஷ்டப்பட்டு எழுப்பிப் பார்த்தான். பரிதாபப்பட்ட நடத்துனர் வந்து அந்த குடிகார அப்பாவை மிரட்டி எழுப்ப எழுந்து எனது இருக்கைக்கு வந்தான். பக்கத்தில் அமரப் போன அவனை அவரது மனவி – அதான் அந்த அம்மா நகர்ந்து ஓரமா உட்காருய்யா என்று கூறி மகனை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். அங்க உட்கார்ந்து ஏதாவது கீழ விழுந்து செத்து தொலைக்க போறான்னுதான் பார்த்தேன். இங்கே விழுந்தா அடிதான் படும்னு சொல்லிட்டு தூங்கிட்டாங்க.

மூன்றாவது நபர் அதே பயணத்தின்போது திண்டிவனத்தில் ஏறினார் தனது நண்பருடன். அவரும் இரண்டு ஆளாய்த்தான் இருந்தார். மொத்தம் அவர்கள் நான்கு பேர். படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தவரை மிரட்டி துரத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கே அவர்கள் உட்கார்ந்தார்கள். பாவம் கடைசி இருக்கையில் 3 வடநாட்டவர்கள். இவர்கள் செய்வதை எதிர்த்து கேட்க முடியாமலோ அல்லது மொழி தெரியாமலோ இவர்களை சகித்துக்கொண்டு கண்டிப்பாக திட்டிக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்கள். அந்த இருவரில் ஒருவர் அதிகமான மப்பு போல உட்காரக்கூட முடியவில்லை. பேருந்து படிகட்டு அருகிலேயே படுத்துக் கொண்டார். நமக்குத்தான் திக்திக்கென்று இருந்தது. அவர் நிம்மதியாய் போதையின் மயக்கத்தில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். பல்லாவரம் வந்து அவரை பேருந்தில் இருந்து இறக்க அவரது நண்பர் படாதபாடு பட்டார் அந்த இரவு நேரத்தில்.

இப்படி நிறைய கதைகள் குடிகாரர்களின் சேஷ்டைகள். சென்ற வாரம் திரு. செந்தில் குமாருடன் தி.நகரில் டீ குடிக்கச் செல்கையில் ஒரு குடிமகள் ரோட்டை க்ராஸ் செய்ய பேருந்துக்கு நடுவே தைரியமாக இறங்கி ஓட்டுந்ரையும் அவளது கணவரையும் திட்டிவிட்டு போனதை வேடிக்கை பார்க்க நேர்ந்தது. நடக்க முடியாமல் இருக்கும் தந்தையையும் அவரது டி.வி.எஸ்50 யையும் தள்ள முடியாமல் தள்ளிக் கொண்டு போன ஒரு சிறுவனை பார்த்து பரிதாபப்படத்தான் முடிந்தது.

இப்படியாக எனக்கும் குடிகாரர்களுக்குமான் உறவு தொடர்கிறது. நான் நிறைய அவர்களிடம் ரசிக்கின்றேன். நிறைய கற்றுக்கொள்கிறேன். அவர்கள் செய்யும் அலம்பல்களால் சில நேரங்களில் சங்கடங்கள் இருந்தாலும் நிறைய நேரங்கள் அவற்றை ரசிக்கவே செய்கிறேன். அவர்களுக்கு மட்டும் என்ன ஆசையா. அவர்களுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கும் குடிக்கவும் குடித்துவிட்டு அட்டகாசம் செய்யவும். யாரையும் குடிக்க வேண்டாம் என அட்வைஸ் எல்லாம் செய்யவில்லை. குடித்தால் நீங்களும் இப்படி ஏதாவது சேஷ்டைகள் செய்வீர்கள். அதை என்னைபோல யாராவது ரசித்துக் கொண்டிருப்பர்கள் என்பதை சொல்லவே இந்த பதிவு.

Thursday 22 March 2012

முகங்கள்

மாமா நான் அப்படி செய்வேங்களா. அதுவும் உங்களுக்கு செய்யாம வேற யாருக்கு மாமா செய்யப் போறேன். நீங்க எனக்காக எவ்வலவு செய்திருக்கீங்க. நான் இது கூட செய்ய மாட்டேனா மாமா. இந்த பத்திரிக்கை வைக்கறதுல வேலையா இருந்துட்டேன் மாமா. தினமும் ராவுக்குதான் வீட்டுக்கு வரேன். காலங்காத்தால எழுந்து போயிடறேனா அதான் அவனை பார்க்க முடிய்லை மாமா. நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத மாமா. இன்னைக்கு கண்டிப்பா போய் அவனை பார்த்து உழவு ஓட்டிட்ட்டானான்னு கேட்டு உனக்கு சொல்லறேன் மாமா. இல்லை மாமா அன்னைகே ஓட்டறேன்னுதான் சொன்னான் மாமா. கண்டிப்பா இன்னைக்கு ராவுக்கா கேட்டுட்டு உன்கிட்ட சொல்லறேன் மாமா.

டேய் மாப்ளே. அந்த பெருசு போன் செஞ்சுதுடா. உழவு ஓட்டினியாடா. செஞ்சிருக்க மாட்டியே மாப்ளே நீ. தெரியும்டா எனக்கு. அப்படி இல்லைடா. என்னவோ அவன் வீட்டு வேலைக்காரன் மாதிரியே வேலை வைக்குதுடா அது. என்ன செய்யட்டும். நமக்கு எதுக்கும் பிர்யோஜனம் இல்லாட்டியும் இத மாதிரி இம்ச பண்றதுல ஒன்னும் குறைச்சல் இல்ல. இருக்கிர இடத்துல இருந்துகிட்டே எல்லா வேலையையும் முடிக்கனும்னு பார்க்கறாரு. உனக்கும் வேலை இருக்கு. சரிடா மாப்ளே ஒரு இரண்டு நாள்ல ஓட்டிடுவன்னு சொல்லிடறேன். நேரம் கிடைக்கும் போது ஓட்டிடுடா. கூலிய ஆத்தாகிட்ட குடுத்துட்டு வந்த முந்தாட்நேத்து கொடுத்துதா. பெருசு திரும்ப போன் செஞ்சா நான் சொல்லிடறேன். உனக்கு போன் செஞ்சாலும் சொல்லிடுடா மாப்ளே. ஏதாவது குழப்பிடாத. போனை வச்சிடட்டுமாடா. சனிக்கிழமை கச்சேரி வச்சுக்குவோம் மாப்ளே. பஸ் சவுண்டல ஏதும் கேட்கலைடா. சரிடா மாப்ளே.

Thursday 8 March 2012

என் வழுக்கையின் கதை

இது அடிக்கடி நடப்பதுதான். இருந்தாலும் இன்று ட்விட்டரில் நண்பர் ஒருவர் எனது ஹேர் ஸ்டைலை பற்றி கேட்டபின் இதை பற்றி ஏன் ஒரு பதிவாக எழுதக் கூடாது என் நினைத்து ஆரம்பிக்கின்றேன்.

ஆரம்பிக்கும் போதே தலையில் இருக்கும் சொச்ச முடியையும் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு குழப்பம். சொட்டை - வழுக்கை இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா. சரி என எப்போதும் போல் தமிழ் அகராதி எடுத்து தேடினால் அங்கேயும் குழப்பம்தான். எனது அறிவுக்கு எட்டிய வரை இதுதான் நான் புரிந்து கொண்டது .

சொட்டை - தலையில் திட்டு திட்டாய் முடி உதிர்ந்து வெறுமையாய் இருப்பது

வழுக்கை - தலையில் முடி உதிர்ந்து வளரவே முடியாது என்ற நிலையில்  தேங்காய் வழுக்கை போல் காட்சி அளிப்பது.

சொட்டை பின் மண்டையில் ஏற்படுவது எனவும், வழுக்கை தலை முழுதும் ஏற்படுவது எனவும் பலதரப்பட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் நானாக விளக்கம் அளித்துக்கொண்டு மிச்சமிருக்கும் முடியை காத்துக் கொள்கிறேன்.

சரி என் வழுக்கை பிரச்சனைக்கு வருகிறேன். எனக்கு எல்லோரையும் போல சிறு வயதில் நிறைய முடி இருக்கும்(நம்பித்தான் ஆகனும்). இன்னமும் சொல்லப் போனால் குழந்தையாக இருக்கும் போது பாகவதர் போல நீட்டு முடி வைத்திருப்பது போல ஒரு புகைப்படமே என்னிடம் இருக்கிறது. என்னுடைய இன்றைய வழுக்கைத் தலை என்னை உறுத்தும் போதெல்லாம் அந்த படம்தான் எனக்கு ஒரே ஆறுதல். பள்ளிப் பருவத்தில் அடிக்கடி சிகை அலங்கார நிளையத்துக்கு செல்ல சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும் எனது தந்தையின் அறிவுரைக்கு பயந்தும் விண்டரில் கூட சம்மர் கட் தான் செய்து கொள்வேன். சம்மர் கட் செய்தும் 3 வாரத்திற்கு ஒரு முறை சிகை அலங்கார நிலையம் செல்லும் அளவிற்கு வேகமாக முடி வளர்ந்துவிடும் எனக்கு. நான் எந்த நடிகனின் தீவிர ரசிகனாகவும் இல்லாததால் எனது முடியை பற்றி எனக்கு அப்போது எந்த கர்வமும் இருக்கவில்லை. ஆனால் என் நண்பர்களாக எனது சம்மர் கட்டிற்கு அவர்களாக அப்போதைய சினிமா ஸ்டைலின் பெயர் ஏதாவதை வைத்துக் கொள்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த வரை கமலின் சத்யா ஸ்டைல் அது என வெகு நாட்கள் அழைத்ததாய் எனக்கு நியாபகம்.



இப்படியாக இருந்த எனது முடியின் வரலாறு. எப்போது மாறியது என சரியாக தெரியவில்லை. ஆனால் எனக்கும் முடி உதிர்கிறது என்பதை எனது கல்லூரி வாழ்க்கையில் நான் உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பித்தது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தினமும் தலைக்கும் சேர்த்து குளிப்பது.(நிஜமாக தினமும் ஒரு முறையாவது குளிப்பேன் நம்புங்கள்). பிறகு உடம்புக்கு போடும் சோப்பையே தினமும் தலைக்கும் பயன் படுத்தியது. நான் தங்க்யிருந்த கல்லூரி விடுதியில் இருந்த தண்ணீரின் தன்மை எனகூட சொல்லலாம். ஏனென்றால் என்னையும் சேர்த்து என நண்பர்கள் சிலருக்கும் அதே நேரத்தில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டது. தலைக்கு தேங்காய் எண்ணை வைப்பதை சோம்பலின் காரணமாக் சுத்தமாக நிறுத்திக்கொண்டது. இப்படி பல காரணங்கள் சொல்லலாம் என் முடி உதிர்வுக்கு. எது எப்படியோ இவை என் நண்பர்களை பாதித்த அளவிற்கு என்னை பாதிக்கவில்லை. வழக்கம் போல take it easy பாலிசியால் அதை பற்றி கவலை படுவதை நிறுத்திவிட்டு அதனால் இருக்கக்கூடிய பாசிடிவ்களை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தலை சீவ வேண்டியதில்லை, அடிக்கடி சிகை அலங்காரத்துக்கு செலவு செய்யவேண்டியதில்லை என அந்த பட்டியல் நீளும். இப்படி கவலை இல்லாமல் சுற்றியதாலோ என்னவோ எனக்கு பிறகு முடி உதிர ஆரம்பித்தவர்களுக்கு எல்லாம் வெகு விரைவாக முழு வழுக்கையாகிவிட்டது தலை. சில நண்பர்கள் ஆதங்கப்பட்டு என்னிடம் அடிக்கடி நான் ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுக்கிறேனா என கேட்பார்கள். முடி உதிர்ந்தாலும் எனது சொட்டை/வழுக்கை தெரிந்தாலும் கவலை படாமல் நான் அப்போதும் சம்மர் கட் செய்ததும் எனக்கு முழு வழுக்கை ஏற்படாததற்கு காரணம். இப்போதும் சிகை அலங்கார நிலையத்தில் நான் சம்மர் கட் என்றால் என்னை மேலும் கீழும் பார்க்கிறார் என சிகை அலங்கார நியுனர். என் தலை முடியை வெட்டுவதை காட்டிலும் என் மீசை முடியை சரி செய்வதற்குத்தான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் அவர். தலையில் இருக்கும் முடியைவிட உடம்பில் அதிகமாக முடி இருக்கிறது என என் நண்பர்கள் கேலி பேசுவது அடிக்கடி நடக்கும்.

ஒரு முறை பேருந்தில் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த எனது நண்பர்கள் நான் இறங்கி விட்டதாய் நினைத்து என்னை விட்டுவிட்டே போய்விட்டார்கள். அந்த அளவுக்கு வித்யாசம் இருக்கும் என்னை முன்னே பார்ப்பதற்கும், பின்னாடி இருந்து பார்ப்பதற்கும் மொபைல் இல்லாத காலம் அது. ஆதலால மீண்டும் தங்கியிருந்த அறைக்கே வந்து விழுந்து விழுந்து சிரித்தது தனிக் கதை.

வேலைக்கு சென்ற போதும் சரி, நான் தேர்ந்தெடுத்த ட்ரெயினர் உத்தியோகத்திற்கும் இந்த வழுக்கை தந்த ஒரு மெச்சூர்ட் லுக் நல்லதாகவே அமைந்தது. இதயெல்லாம் கடந்து திருமணம் என வரும்போது இது எனக்கு கெடுதலாக முடிந்தது.

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல என்னை பெற்றவர்க்கு என் குறை தெரியவில்லை. நாமும் எப்போ நம் முதுகை பார்த்திருக்கிறோம். அடுத்தவர்கள் என்னை என் வழுக்கைக்காக வேண்டாம் என்ற போதெல்லாம் கோவம் வந்ததே தவிற வேறெதுவும் தோன்றவில்லை. மாப்பிள்ளைக்கு உண்மையாக 1975இல்தான் பிறந்தாரா என இப்படி நிறைய கேள்விகள். அதற்காகவெல்லாம் கவலை படவில்லை. ஏனென்றால் முடிதான் இல்லையே தவிர நம்பிக்கை நிறையவே இருந்தது.

பிறகு என்னையும் பிடித்திருப்பதாய் சொல்லி என் மனைவி தன் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்துக் கொண்டாள். பிறகு என் வழுக்கையின் முழு பரிணாமத்தையும் பார்த்து வேதனைப்பட்டதும், சரியாக நிமிர்ந்து பார்க்காமல் ஏமாந்து விட்டதாகவும் புலம்பியதெல்லாம் இங்கே விரிவாக சொல்வதற்கில்லை. இன்று என் மகளும் இதை பற்றி சந்தேகம் கேட்கையில் பொறுமையாக விளக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இங்கே சமூக வளைதளங்களில் என் வழுக்கையான தலையை பார்த்துவிட்டு எனக்கு 36 வயதுதான் ஆகிறது என் நம்ப மறுப்பவர் அதிகம். என் வழுக்கை சிரிப்பு பொருளாவது நிறைய நடக்கிறது. சமீபத்தில் டிவிட்டரில் சில பிரபலங்களே சுத்தி போட்டு அடிச்சாங்க என்னுடைய வழுக்கையை. இதெல்லாம் எந்த வருத்தத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. அவர்களையும் சிரிக்க வைக்க முடிந்ததே என்ற மகிழ்ச்சி நிச்சயம் உண்டு.இன்றுகூட இந்த பதிவு எழுத வைத்த எனது டிவிட்டர் நண்பர் எனது ஹேர் ஸ்டைலை பாடகர் ஹரிஹரனுடன் ஒப்பிட்டு பல்பு கொடுத்தார். மனமுவந்து அந்த அங்கீகாரத்தை வாங்கிக்கொண்டேன். இதெல்லாம் என்ன நான் அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்கூசுவதாய் சொல்லி மின் விளக்கை அணைக்கும் நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கிறது. சுபகாரியங்களுக்கு சென்றால் வீடியோ எடுப்பர் அருகில் வந்தால் என் தலையில் கர்சீப் போடுவார்கள் என் ஆருயிர் நட்புகள். Glare அடிப்பதை தவிர்க்கவாம் அப்படி.



இப்படியாக எனது வழுக்கையின் வரலாறு போகிறது. என் மனைவி சொல்வது போல் நானும் என் குடும்பமும் வெளியே ஒன்றாக போகையில், என் மகளிடம் யாராவது உன் தாத்தாவா இது என்று என்னை குறிப்பிட்டு கேட்டாலும் கேட்கலாம். அதற்காக நாம் என்ன வருத்தப்படவா முடியும்.

இப்படியாக எனது வழுக்கையின் வரலாறு நீண்டுகொண்டிருக்கிறது. இன்னமும் பல சுவாரஸ்யங்களில் அதை ஒட்டி நடக்கும் என்பதில் எனக்கு எந்த ஐய்யமுமில்லை.

எனது வழுக்கையை பற்றி பேச வைத்த ட்வீட்...
உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு என் தலைமுடி ஒன்வொன்றாய் பிய்த்துப் போட்டுக்கொண்டிருக்கிறது உன் நினைவுகள்... https://twitter.com/#!/senthilchn/status/175677285809139713

சரி இந்த இடுகையை இது வரை படித்தவர்கள், வழுக்கையை பற்றி கவலை இருந்தால் அதை பற்றி தெரிந்து கொள்ள நமது கூகுளானந்தாவை கேட்டு சில லிங்ஸை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். படித்து பயன் பெறவும். 
(Disclaimer: கீழே குறிப்பிட்டிருக்கும் இணையதளங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. எப்படியெல்லாம் ஜாக்கிரதையா யோசிக்க வேண்டியதாக உள்ளதுப்பா)







 

மகளிர்தின வாழ்த்தும் கிடைத்த ஞானமும்

இன்று மார்ச் 08ஆம் தேதி. சர்வதேச மகளிர் தினம் இன்று. சரி எப்போதும் போல் இதுவும் ஒரு விழா நாள். ஹோலிப் பண்டிகையைகூட மறந்து எனக்கு தெரிந்த அனைத்து மகளிர்க்கும் வாழ்த்து சொல்லிவிட வேண்டும் என்ற வேகத்தில் காலையிலேயே ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த பெண்கள் என்றால் என் குடும்பத்தாரை தவிர்த்து மற்றைய எல்லோரும் இணையத்தில் பழக்கமானவர்கள்தான். அதில் எத்தனை போலியாக பெண் அடையாளத்தில் இருக்கிறார்களோ. நிஜத்தில் பசங்களே நம்மை மதிப்பதில்லை பெண்கள் எங்கே அப்புறம்.

சரி வழக்கம் போல் நான் குடியிருக்கும் ட்விட்டரில் ஆரம்பித்தேன். என் DP யை மகளிர் தினத்தை குறிக்கும் விதத்தில் மாற்றினேன். பிறகு காலையில் முதல் வேளையாக அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் என கூறினேன். வழக்கம் போல் ட்விட்டரில் பெண்கள் அனைவரும் மொக்கையில் பிஸியாக இருந்ததால் என் வாழ்த்து கொஞ்சம் பேரையே திரும்பி பார்க்க வைத்தது. அதில் சற்று ஏமாற்றமே. அப்புறம் பேஸ்புக் பக்கம் போய் அழகான ஒரு சிறுமியின் படத்தை போட்டு நாலு வரியில் பெண்களை வாழ்த்தி எழுதி மகளிர் தின வாழ்த்தையும் எனது சுவற்றில் தெரிவித்தேன். குடியிருக்கும் ட்விட்டரை விட அவ்வப்போது எட்டிப் பார்க்கும் பேஸ்புக்கில் ரெஸ்பான்ஸ் நன்றாய் இருந்தது.

இதில் கிடைத்த அற்ப சந்தோஷத்திலும், ஏன் ஒரு போன் போட்டு வாழ்த்தகூடாதா என் வரும் திட்டுக்கு பயந்தும் என்னிடம் மொபைல் நம்பர் இருந்த ஒவ்வொரு பெண் நண்பர்களாக அழைத்தேன். அங்கே கிடத்தது ஒரு பெரிய பல்பு. அதன் மூலம் பிறந்தது ஒரு ஞானோதயம். 

முதல் இரண்டு தோழிகளும் வாழ்த்து சொன்னதும் மகிழ்ந்து நன்றி சொன்னார்கள். மூன்றாமவருக்கு நான் வாழ்த்து சொன்னதுதான் தாமதம். என்னடா மாட்டுப் பொங்கல் மாதிரி மகளிர் தின வாழ்த்தா என்றாரே பார்க்கலாம். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் முழிப்பதை போனாக இருந்தாலும் சரியாக ஊகித்து கொண்ட அந்த தோழி, சொன்ன விளக்கம் என்னை அசிங்க பட வைத்தது. வருடம் முழுதும் அந்த மாட்டை கஷ்டப்படுத்தி வருத்தி வேலை வாங்குவீங்க. அதுக்கு உடம்புக்கு என்ன சப்பிட்டதா எங்காவது வலிக்குதா, பொதியை சுமக்க முடியுமா என்றெல்லாம் பார்க்காமல் அதை துன்புறுத்திவிட்டு, மாட்டுப் பொங்கலன்று மட்டும் அதை குளிப்பாட்டி, அகங்காரம் செய்து, படையல் போட்டு வேண்டியதை உண்ண கொடுத்து சீராட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றாரே பார்க்கலாம். அவர் சொல்லாமலேயே பெண்களை மற்ற நாட்களில் எவ்வாறு நடத்துகிறோம். இந்த மகளிர் தின நாளில் மட்டும் உயர்த்திப் பிடிக்கிறோம் என்ற குற்றச்சாட்டு புரிந்தது. எல்லா வித சிறப்பு நாட்களுக்கும் இது பொருந்தும் என்று அவரது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார் அந்த தோழி.

சமாதானம் ஏதும் சொல்லத் தோன்றாமல் நானும் மொபைலை துண்டித்துவிட்டேன். வைக்கும்போது ஒரு முடிவும் தெளிவுக்கும் வந்தேன். எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் இனிமேல் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் எத்தனை முக்கியமானவள், ஸ்பெஷலானவள் என்பது அவள் உணரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என மனதுக்குள் உறுதியெடுத்துக் கொண்டேன். 

உழவில் மாட்டை பயன்படுத்தும் சூழலோ, வீட்டில் பாலுக்கு பசு மாடு வளர்க்கும் சூழலோ வந்தால் கண்டிப்பாக அந்த மாட்டிற்கு தினமும் திருவிழாவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது என முடிவு செய்தது தனி கதை.

Wednesday 7 March 2012

விளக்கு மட்டுமா சிவப்பு ? - வாசிப்பு

கண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா? அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு?”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.

கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது. வந்த இடத்தில் வஞ்சிக்கப் பட்டு ஒரு உயிரை இழக்கிறது. அதையும் மீறி வாழ எத்தனிக்கையில் அடி மேல் அடி. பணக்காரர் ஒருத்தரின் சூழ்ச்சியால் வசந்தமாய் வரும் காதல் அழிக்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரமான ஜெயா தவறாக விபச்சாரியென குற்றம்சாட்டப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறாள். பின்னர் அதையே தெழிலாக ஏற்றுக்கொண்டு அவள் வாழ்கிறாள். அப்போதும் விதி துரத்தி அவளையும் அவளை சேர்ந்தவர்களையும் அலைக்கழிக்கிறது.

இந்த நாவலில் கதை சொல்லிகளாக இருவர் வருகிறார்கள். ஒன்று வேதநாயகம் என்ற வக்கீல். அவரது கதாபாத்திரமே கண்ணதாசன் தன்னையே மனதில் வைத்து உருவாக்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அத்தனை நல்லவராகவும், புரட்சிகர எண்ணம் கொண்டவராகவும், சமுதாய சீர்கேட்டை எதிர்ப்பவராகவும் இந்த பாத்திரம் எனக்கு கண்ணதாசனாகவே தெரிகிறது கதை முழுதும்.

அடுத்ததாக ஜெயா. கதையின் நாயகி. கிராமத்து பெண்ணாகவும், சென்னைக்கு வந்தபின் அதன் போக்கிற்கு மாறி, காதல் வயப்படும்போது அதற்கே உரிய மனநிலைகளை வெளிப்படுத்தி, பின்னர் வஞ்சிக்கப்படும் போது வருந்தி, உழன்று, மீண்டு தைரியத்தோடு தவறே ஆனாலும் குடும்பத்திற்காக விபச்சாரம் செய்வதும் அருமையான பாத்திர படைப்பு. இதில் அவளுடைய மன சஞ்சலங்களையும் ஊசலாட்டத்தையும் அழகாக சொல்லியிருப்பது கண்ணதாசனின் தனித்திறமை. அங்கே அந்த பெண்ணைதான் பார்க்க முடிகிறது. கண்ணதாசனையோ அவரது கருத்துக்களையோ அல்ல என்பதே அந்த பாத்திரப் படைப்பின் வெற்றி.

அந்த கால கட்டத்தில் சென்னை மேட்டுக்குடியில் நடந்த விஷயங்கள், அதன் தவறுகள், அவர்களில் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள், வஞ்சகங்கள், அவர்களில் நல்லவர்களும் இருந்தனர் என்பனவற்றையெல்லாம் கோர்வையாக அழகாக சொல்லியிருக்கிறார்.

மாணிக்கம்(ஜெயாவின் காதல் கணவர்), ஜெயச்சந்திரன் (ஜெயாவின் அத்தான்), சுலோச்சனா, திருப்பதி, கண்ணன், வேதநாயகத்தின் மனைவி, அவரின் குமாஸ்தா ஆகிய பாத்திரப் படப்புகள் அருமை. அன்றைய வாழ்க்கை முறை, சட்டம் மற்றும் நீதித் துறையில் நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சமுதாய நாவல் படித்த திருப்தி. அகல் விளக்கு மெல்ல நகரத் துவங்கியிருக்கிறது.

Thursday 1 March 2012

சாமி சாமி...


வழக்கம் போல அன்று காலை எழுந்து குளித்துவிட்டு, என் மகளை குளிப்பாட்டிவிட்டு அவளுக்கு சட்டை போட்டுவிட்டு நான் கிளம்ப அறைக்கு சென்றிவிட்டேன். என் மகளும் சாமி கும்பிட ஆரம்பித்தாள். நான் சிறு வயது முதல் கடைபிடித்து வந்த ஒரு பழக்கமான சாமி கும்பிடுவதாய் சொல்லி தினமும் காலையில் சாமியிடம் பேசுவதை அவளுக்கும் சொல்லிக் கொடுத்திருந்தேன். பேசுகிறேன் என்று சொல்லி என் கோரிக்கைகள், வீட்டில் அம்மாவில் ஆரம்பித்து அனைவரும் நல்லா இருக்க வேண்டும், பரீட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கவேண்டும், வேலை கிடைக்க வேண்டும் போன்ற வேண்டுதல்களை சாமியிடன் வைப்பது என் வழக்கம். அவளும் அதை மிகுந்த சிரத்தையுடன் தினமும் செய்வதில் எனக்கு மகிழ்ச்சி.  நான் செய்வது போலவே அவளது சின்ன சின்ன கோரிக்கைகளையும் சாமியிடம் சொல்லுவாள். அதில் எங்களால் முடிந்ததை நானும் என் மனைவியும் நிறைவேற்றிவந்தோம். இன்றும் அவள் சாமியிடம் என்ன பேசுகிறாள் என்று காது கொடுத்துக் கொண்டே நான் அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தேன்.

சாமி சாமி அம்மா, அப்பா, தாத்தா, ஆயா, அத்தை, ஹரிஷ், மாமா, பெரிய ஆயா, ரோஸி மிஸ், தேஜு, தெருவில் இருக்கும் குட்டி நாய், பெரிய டெட்டி பியர் எல்லாம் நல்லா இருக்கனும். அப்புறம் சாமி அம்மாவும் அப்பாவும் இப்போவெல்லாம் அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க. அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம பர்த்துக்கோ சாமி. அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். நேத்து அம்மா என்னை திட்டனாங்கன்னு அப்பா அம்மாவை அடிச்சுட்டார். பாவம் சாமி அம்மா. அவங்க மட்டும் என்ன செய்வாங்க. நான் கண் பார்வை இல்லாததை மறந்து சுவற்றில் மோதிக்கொண்ட்துக்கு அவங்க என்ன செய்வாங்க. ஏதாவது கோவத்தில் என்னை ஏதாவது சொல்லிவிட்டால் அப்பாவிற்கு ரொம்பவே கோவம் வந்துவிடும். அடிக்கடி என்னை வைத்துதான் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கறாங்க சாமி. கோவத்தில் அம்மா உன்னாலதாண்டி நான் திட்டுவாங்கறேன் என் சொல்லும்போதெல்லாம் எனக்கு அழுகையா வருது சாமி. சாமி நான் உன்கிட்ட வந்திடறேன். நீதான் என்னை படைச்சியாமே, அப்பா சொல்லியிருக்கார். அப்போ உனக்கு என்னை பிடிக்கும் இல்லையா. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் விளையாட என்னை மாதிரி குறையெல்லாம் இல்லாம ஒரு அழகான குட்டி தம்பி பாப்பா கொடுத்துடு சாமி. நான் உன்கிட்டையே வந்திடறேன்.

இப்படி அவள் சாமிகிட்ட பேசிகிட்டிருக்கும் போது நான் துணுக்குற்றேன். என் மனைவிக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அடுப்படியில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவசரமாய் வந்து அறையில் என்னை எட்டிப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த அந்த குழப்பமும் இயலாமையும் என்னை ஏதோ செய்தது. ஏதாவது கேட்டால் அழுதே விடுவாள் போல். மெல்ல அவளை அணைத்து முத்தமிட்டு சாமி அறைக்கு சென்று என் மகளை அனைத்துக்கொண்டேன்.

என் ஸ்பரிசம் பட்டவுடன் என் பக்கம் திரும்பி, அப்பா நான் சாமிகிட்ட சொல்லியிருக்கேன் என்னை அவர்கிட்ட கூட்டிகிட்டு ஒரு அழகான தம்பி பாப்பாவை உனக்கும் அம்மாவுக்கும் கொடுக்க சொல்லியிருக்கேன்.