Wednesday, 7 March 2012

விளக்கு மட்டுமா சிவப்பு ? - வாசிப்பு

கண்ணதாசனை ஏன் எதற்கு என்று தெரியாமல் எனக்கு பிடித்திருந்தது. என் மகளுக்கு ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று கடைக்கு போய் அவளுக்கு வாங்கிவிட்டு சும்மா சுற்றி வரும்போது கண்ணதாசன் என் கண்ணில் பட வேண்டுமா? அப்போது என் கண்ணில் பளிச்சென இந்த நாவல் “விளக்கு மட்டுமா சிவப்பு?”. ஓரளவு கதை எதை பற்றி என தலைப்பை வைத்தே ஊகிக்க முடிந்தது. அதை கவனித்த என் மனைவியோ என்னை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டது போல் பார்த்தாள். “வேற எதுவும் கிடைக்கலியா உங்களுக்கு வாங்க” என அர்ச்சனை வேறு. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.

கதை கரு மிகவும் சிறியதுதான். கிராமத்தில் நன்றாய் வாழ்ந்த ஒரு குடும்பம் தாய் தந்தையை இழந்து பொருளாதார சிக்கலினால் பிழைக்க சென்னைக்கு வருகிறது. வந்த இடத்தில் வஞ்சிக்கப் பட்டு ஒரு உயிரை இழக்கிறது. அதையும் மீறி வாழ எத்தனிக்கையில் அடி மேல் அடி. பணக்காரர் ஒருத்தரின் சூழ்ச்சியால் வசந்தமாய் வரும் காதல் அழிக்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரமான ஜெயா தவறாக விபச்சாரியென குற்றம்சாட்டப்பட்டு சட்டத்தால் தண்டிக்கப்படுகிறாள். பின்னர் அதையே தெழிலாக ஏற்றுக்கொண்டு அவள் வாழ்கிறாள். அப்போதும் விதி துரத்தி அவளையும் அவளை சேர்ந்தவர்களையும் அலைக்கழிக்கிறது.

இந்த நாவலில் கதை சொல்லிகளாக இருவர் வருகிறார்கள். ஒன்று வேதநாயகம் என்ற வக்கீல். அவரது கதாபாத்திரமே கண்ணதாசன் தன்னையே மனதில் வைத்து உருவாக்கியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அத்தனை நல்லவராகவும், புரட்சிகர எண்ணம் கொண்டவராகவும், சமுதாய சீர்கேட்டை எதிர்ப்பவராகவும் இந்த பாத்திரம் எனக்கு கண்ணதாசனாகவே தெரிகிறது கதை முழுதும்.

அடுத்ததாக ஜெயா. கதையின் நாயகி. கிராமத்து பெண்ணாகவும், சென்னைக்கு வந்தபின் அதன் போக்கிற்கு மாறி, காதல் வயப்படும்போது அதற்கே உரிய மனநிலைகளை வெளிப்படுத்தி, பின்னர் வஞ்சிக்கப்படும் போது வருந்தி, உழன்று, மீண்டு தைரியத்தோடு தவறே ஆனாலும் குடும்பத்திற்காக விபச்சாரம் செய்வதும் அருமையான பாத்திர படைப்பு. இதில் அவளுடைய மன சஞ்சலங்களையும் ஊசலாட்டத்தையும் அழகாக சொல்லியிருப்பது கண்ணதாசனின் தனித்திறமை. அங்கே அந்த பெண்ணைதான் பார்க்க முடிகிறது. கண்ணதாசனையோ அவரது கருத்துக்களையோ அல்ல என்பதே அந்த பாத்திரப் படைப்பின் வெற்றி.

அந்த கால கட்டத்தில் சென்னை மேட்டுக்குடியில் நடந்த விஷயங்கள், அதன் தவறுகள், அவர்களில் ஆணும் பெண்ணும் செய்யும் தவறுகள், வஞ்சகங்கள், அவர்களில் நல்லவர்களும் இருந்தனர் என்பனவற்றையெல்லாம் கோர்வையாக அழகாக சொல்லியிருக்கிறார்.

மாணிக்கம்(ஜெயாவின் காதல் கணவர்), ஜெயச்சந்திரன் (ஜெயாவின் அத்தான்), சுலோச்சனா, திருப்பதி, கண்ணன், வேதநாயகத்தின் மனைவி, அவரின் குமாஸ்தா ஆகிய பாத்திரப் படப்புகள் அருமை. அன்றைய வாழ்க்கை முறை, சட்டம் மற்றும் நீதித் துறையில் நிலைகளை அறிந்து கொள்ள முடிகிறது.

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சமுதாய நாவல் படித்த திருப்தி. அகல் விளக்கு மெல்ல நகரத் துவங்கியிருக்கிறது.

2 comments:

 1. குடும்பத்தோடு புத்தகங்கள் வாங்க சென்றிருக்கின்றீர்கள்...உங்கள் மகள் மிகவும் கொடுத்து வைத்தவள் தான்..

  உங்களுக்கு பிடித்தமான கண்ணதாசனின் வனவாசம் பற்றியும் எழுதினாலென்ன?

  அகல் விளக்கு சுடர் விடட்டும் விரைவில்..

  ReplyDelete
 2. இதெயெல்லாம் மீறி வாங்கி வந்த இந்த நாவலை படித்து முடிக்க 2 மாதம் ஆனது எனக்கு.
  //

  எழுத்துக்கூட்டி படிச்சீங்களா தல?...

  :-))

  ReplyDelete