Thursday, 8 March 2012

என் வழுக்கையின் கதை

இது அடிக்கடி நடப்பதுதான். இருந்தாலும் இன்று ட்விட்டரில் நண்பர் ஒருவர் எனது ஹேர் ஸ்டைலை பற்றி கேட்டபின் இதை பற்றி ஏன் ஒரு பதிவாக எழுதக் கூடாது என் நினைத்து ஆரம்பிக்கின்றேன்.

ஆரம்பிக்கும் போதே தலையில் இருக்கும் சொச்ச முடியையும் பிய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு குழப்பம். சொட்டை - வழுக்கை இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா. சரி என எப்போதும் போல் தமிழ் அகராதி எடுத்து தேடினால் அங்கேயும் குழப்பம்தான். எனது அறிவுக்கு எட்டிய வரை இதுதான் நான் புரிந்து கொண்டது .

சொட்டை - தலையில் திட்டு திட்டாய் முடி உதிர்ந்து வெறுமையாய் இருப்பது

வழுக்கை - தலையில் முடி உதிர்ந்து வளரவே முடியாது என்ற நிலையில்  தேங்காய் வழுக்கை போல் காட்சி அளிப்பது.

சொட்டை பின் மண்டையில் ஏற்படுவது எனவும், வழுக்கை தலை முழுதும் ஏற்படுவது எனவும் பலதரப்பட்ட ஆராய்ச்சிக்கு பின்னர் நானாக விளக்கம் அளித்துக்கொண்டு மிச்சமிருக்கும் முடியை காத்துக் கொள்கிறேன்.

சரி என் வழுக்கை பிரச்சனைக்கு வருகிறேன். எனக்கு எல்லோரையும் போல சிறு வயதில் நிறைய முடி இருக்கும்(நம்பித்தான் ஆகனும்). இன்னமும் சொல்லப் போனால் குழந்தையாக இருக்கும் போது பாகவதர் போல நீட்டு முடி வைத்திருப்பது போல ஒரு புகைப்படமே என்னிடம் இருக்கிறது. என்னுடைய இன்றைய வழுக்கைத் தலை என்னை உறுத்தும் போதெல்லாம் அந்த படம்தான் எனக்கு ஒரே ஆறுதல். பள்ளிப் பருவத்தில் அடிக்கடி சிகை அலங்கார நிளையத்துக்கு செல்ல சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டும் எனது தந்தையின் அறிவுரைக்கு பயந்தும் விண்டரில் கூட சம்மர் கட் தான் செய்து கொள்வேன். சம்மர் கட் செய்தும் 3 வாரத்திற்கு ஒரு முறை சிகை அலங்கார நிலையம் செல்லும் அளவிற்கு வேகமாக முடி வளர்ந்துவிடும் எனக்கு. நான் எந்த நடிகனின் தீவிர ரசிகனாகவும் இல்லாததால் எனது முடியை பற்றி எனக்கு அப்போது எந்த கர்வமும் இருக்கவில்லை. ஆனால் என் நண்பர்களாக எனது சம்மர் கட்டிற்கு அவர்களாக அப்போதைய சினிமா ஸ்டைலின் பெயர் ஏதாவதை வைத்துக் கொள்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த வரை கமலின் சத்யா ஸ்டைல் அது என வெகு நாட்கள் அழைத்ததாய் எனக்கு நியாபகம்.இப்படியாக இருந்த எனது முடியின் வரலாறு. எப்போது மாறியது என சரியாக தெரியவில்லை. ஆனால் எனக்கும் முடி உதிர்கிறது என்பதை எனது கல்லூரி வாழ்க்கையில் நான் உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பித்தது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். தினமும் தலைக்கும் சேர்த்து குளிப்பது.(நிஜமாக தினமும் ஒரு முறையாவது குளிப்பேன் நம்புங்கள்). பிறகு உடம்புக்கு போடும் சோப்பையே தினமும் தலைக்கும் பயன் படுத்தியது. நான் தங்க்யிருந்த கல்லூரி விடுதியில் இருந்த தண்ணீரின் தன்மை எனகூட சொல்லலாம். ஏனென்றால் என்னையும் சேர்த்து என நண்பர்கள் சிலருக்கும் அதே நேரத்தில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டது. தலைக்கு தேங்காய் எண்ணை வைப்பதை சோம்பலின் காரணமாக் சுத்தமாக நிறுத்திக்கொண்டது. இப்படி பல காரணங்கள் சொல்லலாம் என் முடி உதிர்வுக்கு. எது எப்படியோ இவை என் நண்பர்களை பாதித்த அளவிற்கு என்னை பாதிக்கவில்லை. வழக்கம் போல take it easy பாலிசியால் அதை பற்றி கவலை படுவதை நிறுத்திவிட்டு அதனால் இருக்கக்கூடிய பாசிடிவ்களை பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தலை சீவ வேண்டியதில்லை, அடிக்கடி சிகை அலங்காரத்துக்கு செலவு செய்யவேண்டியதில்லை என அந்த பட்டியல் நீளும். இப்படி கவலை இல்லாமல் சுற்றியதாலோ என்னவோ எனக்கு பிறகு முடி உதிர ஆரம்பித்தவர்களுக்கு எல்லாம் வெகு விரைவாக முழு வழுக்கையாகிவிட்டது தலை. சில நண்பர்கள் ஆதங்கப்பட்டு என்னிடம் அடிக்கடி நான் ஏதாவது ட்ரீட்மெண்ட் எடுக்கிறேனா என கேட்பார்கள். முடி உதிர்ந்தாலும் எனது சொட்டை/வழுக்கை தெரிந்தாலும் கவலை படாமல் நான் அப்போதும் சம்மர் கட் செய்ததும் எனக்கு முழு வழுக்கை ஏற்படாததற்கு காரணம். இப்போதும் சிகை அலங்கார நிலையத்தில் நான் சம்மர் கட் என்றால் என்னை மேலும் கீழும் பார்க்கிறார் என சிகை அலங்கார நியுனர். என் தலை முடியை வெட்டுவதை காட்டிலும் என் மீசை முடியை சரி செய்வதற்குத்தான் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார் அவர். தலையில் இருக்கும் முடியைவிட உடம்பில் அதிகமாக முடி இருக்கிறது என என் நண்பர்கள் கேலி பேசுவது அடிக்கடி நடக்கும்.

ஒரு முறை பேருந்தில் பின் சீட்டில் உட்கார்ந்து இருந்த எனது நண்பர்கள் நான் இறங்கி விட்டதாய் நினைத்து என்னை விட்டுவிட்டே போய்விட்டார்கள். அந்த அளவுக்கு வித்யாசம் இருக்கும் என்னை முன்னே பார்ப்பதற்கும், பின்னாடி இருந்து பார்ப்பதற்கும் மொபைல் இல்லாத காலம் அது. ஆதலால மீண்டும் தங்கியிருந்த அறைக்கே வந்து விழுந்து விழுந்து சிரித்தது தனிக் கதை.

வேலைக்கு சென்ற போதும் சரி, நான் தேர்ந்தெடுத்த ட்ரெயினர் உத்தியோகத்திற்கும் இந்த வழுக்கை தந்த ஒரு மெச்சூர்ட் லுக் நல்லதாகவே அமைந்தது. இதயெல்லாம் கடந்து திருமணம் என வரும்போது இது எனக்கு கெடுதலாக முடிந்தது.

காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல என்னை பெற்றவர்க்கு என் குறை தெரியவில்லை. நாமும் எப்போ நம் முதுகை பார்த்திருக்கிறோம். அடுத்தவர்கள் என்னை என் வழுக்கைக்காக வேண்டாம் என்ற போதெல்லாம் கோவம் வந்ததே தவிற வேறெதுவும் தோன்றவில்லை. மாப்பிள்ளைக்கு உண்மையாக 1975இல்தான் பிறந்தாரா என இப்படி நிறைய கேள்விகள். அதற்காகவெல்லாம் கவலை படவில்லை. ஏனென்றால் முடிதான் இல்லையே தவிர நம்பிக்கை நிறையவே இருந்தது.

பிறகு என்னையும் பிடித்திருப்பதாய் சொல்லி என் மனைவி தன் வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்துக் கொண்டாள். பிறகு என் வழுக்கையின் முழு பரிணாமத்தையும் பார்த்து வேதனைப்பட்டதும், சரியாக நிமிர்ந்து பார்க்காமல் ஏமாந்து விட்டதாகவும் புலம்பியதெல்லாம் இங்கே விரிவாக சொல்வதற்கில்லை. இன்று என் மகளும் இதை பற்றி சந்தேகம் கேட்கையில் பொறுமையாக விளக்கிக் கொண்டுதான் இருக்கிறேன்.

இங்கே சமூக வளைதளங்களில் என் வழுக்கையான தலையை பார்த்துவிட்டு எனக்கு 36 வயதுதான் ஆகிறது என் நம்ப மறுப்பவர் அதிகம். என் வழுக்கை சிரிப்பு பொருளாவது நிறைய நடக்கிறது. சமீபத்தில் டிவிட்டரில் சில பிரபலங்களே சுத்தி போட்டு அடிச்சாங்க என்னுடைய வழுக்கையை. இதெல்லாம் எந்த வருத்தத்தையும் எனக்கு கொடுக்கவில்லை. அவர்களையும் சிரிக்க வைக்க முடிந்ததே என்ற மகிழ்ச்சி நிச்சயம் உண்டு.இன்றுகூட இந்த பதிவு எழுத வைத்த எனது டிவிட்டர் நண்பர் எனது ஹேர் ஸ்டைலை பாடகர் ஹரிஹரனுடன் ஒப்பிட்டு பல்பு கொடுத்தார். மனமுவந்து அந்த அங்கீகாரத்தை வாங்கிக்கொண்டேன். இதெல்லாம் என்ன நான் அலுவலகத்திற்குள் நுழையும் போதே கண்கூசுவதாய் சொல்லி மின் விளக்கை அணைக்கும் நிகழ்ச்சிகள் பல நடந்திருக்கிறது. சுபகாரியங்களுக்கு சென்றால் வீடியோ எடுப்பர் அருகில் வந்தால் என் தலையில் கர்சீப் போடுவார்கள் என் ஆருயிர் நட்புகள். Glare அடிப்பதை தவிர்க்கவாம் அப்படி.இப்படியாக எனது வழுக்கையின் வரலாறு போகிறது. என் மனைவி சொல்வது போல் நானும் என் குடும்பமும் வெளியே ஒன்றாக போகையில், என் மகளிடம் யாராவது உன் தாத்தாவா இது என்று என்னை குறிப்பிட்டு கேட்டாலும் கேட்கலாம். அதற்காக நாம் என்ன வருத்தப்படவா முடியும்.

இப்படியாக எனது வழுக்கையின் வரலாறு நீண்டுகொண்டிருக்கிறது. இன்னமும் பல சுவாரஸ்யங்களில் அதை ஒட்டி நடக்கும் என்பதில் எனக்கு எந்த ஐய்யமுமில்லை.

எனது வழுக்கையை பற்றி பேச வைத்த ட்வீட்...
உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு என் தலைமுடி ஒன்வொன்றாய் பிய்த்துப் போட்டுக்கொண்டிருக்கிறது உன் நினைவுகள்... https://twitter.com/#!/senthilchn/status/175677285809139713

சரி இந்த இடுகையை இது வரை படித்தவர்கள், வழுக்கையை பற்றி கவலை இருந்தால் அதை பற்றி தெரிந்து கொள்ள நமது கூகுளானந்தாவை கேட்டு சில லிங்ஸை இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். படித்து பயன் பெறவும். 
(Disclaimer: கீழே குறிப்பிட்டிருக்கும் இணையதளங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல. எப்படியெல்லாம் ஜாக்கிரதையா யோசிக்க வேண்டியதாக உள்ளதுப்பா) 

4 comments:

 1. அய்யய்யோ அண்ணே நாந்தான் தப்பா கருதிவிட்டேன் போல ஒரு படம் ஒன்றூ அண்மையில் அர்ஜூன் போட்டிருந்தான் உங்களுண்ட டிவிட் அப் ஒரு ரெஸ்ரொரண்டில் உணவு உண்ட பின் எடுத்தது, அதில் இருந்தவர் ஹரிஹரன் போல வெள்ளை முடியுடன் குடுமி வளர்த்து கட்டியிருந்தார் ,நாந்தான் அது நீங்கள் என்றூ இன்று வரை மனதில் ஓவியம் வரைந்து வைத்துவிட்டேன்,அப்போ அது நீங்கள் இல்லைய, உங்களின் மனதை புண்படுத்தியதற்காய் மன்னித்துவிடுங்கள், சே இதுவரை நான் உங்களுக்கு தலை முடி கொட்டியது தெரியாது அண்ணே.. தம்பியை மன்னிப்பீர்களா ?

  ReplyDelete
 2. @மன்மதகுஞ்சு,

  இதற்கு ஏன் இப்படி ஒரு பதட்டம்.... மன்னிப்பு எல்லாம் எதுக்கு. அருமையான டாபிக் ஐடியா கொடுத்ததுக்காக மகிழ்ச்சி :)

  ReplyDelete
 3. wow nice one .. en kanavarukkum ithupol vazhukkai thalaithaan but young romba dark n hairy type avar .. avarukku padiththu kaddanum sure enjoy pannuvar :))

  ReplyDelete
 4. நெகிழ வைக்கும் பதிவு.. ஆனாலும்.. 36 தான்னு சொல்றது கொஞ்சம் ஓவர்.. :))

  ReplyDelete