சாம்ராஜ் – இவரை எனக்கு எப்படி தெரியும். இவரை ஒரு மனிதராக அவரது திறமைகளை
பற்றி வியந்து ப்ரியா என்ற எனது நண்பர் ஒருவர் கூறியிருக்கிறார். இப்படிதான் இவர்
எனக்கு அறிமுகம். இவரது எழுத்துக்களை ப்ற்றி ப்ரகாஷ் என்ற மற்றுமொரு நண்பர்
அடிக்கடி பேசி வந்தார். ஒரு பெண் மற்றொரு ஆணின் திறமைகளை பற்றி நம்மிடம் அதிகம்
புகழும் போது அவனை எப்படி மட்டம் தட்டுவது என ஒரு சராசரி ஆணுள் எழும்
காழ்ப்புணர்ச்சியும், அவர் மேல் ஏற்பட்டிருந்த ஒரு இனம் புரியாத ஈடுபாடும் ஏற்படுத்திய
ஆர்வத்தில் சாம்ராஜின் கவிதை தொகுப்பை வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தேன்.
“என்றுதானே சொன்னார்கள்” கவிதைத்
தொகுப்பின் தலைப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு கவிதையின் தலைப்பும் வித்யாசமாய்
இருக்கிறது. கவிதைகளுக்கும் மற்ற வரி வடிவ கலைக்கும் ஒரு மிகப் பெரிய வித்யாசம்
உண்டு. கவிதைகள் எல்லா இட்த்திலும் நம்மை சிந்திக்க வைத்து ஒரு சபாஷ் போட
வைக்கவேண்டும். தலைப்புகளே யோசிக்க வைக்கின்றன. பாடப்படும் பொருள் ஒவ்வொரு
கவிதையிலும் ஆச்சர்யப்படுத்துகிறது.
கவிதையின் கரு – நாயகன் – மைய்யம் இதுவரை யாரும் தொடாத விஷயங்கள். இதெல்லாம்
எப்படி இவர் கண்ணில் பட்டன என்பதும், அவற்றை அவர் பார்க்கின்ற விதமும் என்னை
மிகவும் வியக்க வைக்கின்றன. உதாரணத்திற்கு “ஒரு கால்பந்தின் முழுமை” என்ற கவிதையில் ஒரு
பாழாகிப் போய் குப்பையில் கிடக்கும் ஒரு கால்பந்தை கருவாக வைத்து
எழுதியிருக்கிறார். அதில்
கைவிடப்பட்ட ஷூக்களோடு
காமமுண்டு
வயதான குஷ்டரோகிக்குப் பிச்சையிடுவதாய்
காற்று எப்பொழுதேனும்
அதை உருட்டி விளையாடுவதுமுண்டு
என்ற இந்த இரண்டு வரிகள் பாழாகிப் போய் குப்பையில் கிடக்கும் அந்த கால்பந்தின்
மனநிலையை சாம்ராஜ் எப்படி பார்க்கிறார் என்பதை புரியவைக்கும்.
அவரது சமூக கோவங்கள் உள்ளது உள்ளபடி கூறும் பாங்கு அனைத்தும் எனக்கு அவரது
கவிதைகளின் மீதான காதலை கூட்டியது. ஒரே மூச்சில் அவரது 40 சொச்ச கவிதைகளையும்
படித்து முடித்தேன். இதோ இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரை ஒவ்வொரு கவிதைகளையும்
குறைந்தது 2 முறையாவது படித்துவிட்டேன். கவிதைகள் என்றாலே அலங்கார வார்த்தைகள்
என்ற ஒரு விதி சில காலமாக உடைக்கப்பட்டு வருகிறது. அலங்கார பொய் ஜோடனைகளுக்கு
பதிலாக நிர்வாண உண்மைகளால் கவிதைகள் இயற்றப்படுகின்றன. தேவையில்லாத வார்த்தைகள்
இல்லை. இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விஷயத்தை விளக்குகின்றன. சாம்ராஜின்
கவிதைகள் அனைத்தும் இந்த ரகம். “கறை நல்லது” என்ற ஒரு கவிதையில்
கூடுதலாக
நூறு ரூபாய் கேட்டதற்கு
பளிங்குத் தரையில் ரத்தம் சிந்தினாள்
இந்த வரிகள் எனக்கு வலி, சமுதாய நிலமை, வன்முறை என பல விஷயங்களை சொல்கிறது.
வேறு சிலருக்கு வேறு விதமாக புரியும் இதுவும் ஒரு கவிஞனின் வெற்றி. படிப்பவரின்
மனநிலைக்கும் சூழலுக்கும் ஏற்ப அவனது வரிகளின் கருத்து மாறி தோற்றமளிக்க வேண்டும்.
அதை சாம்ராஜின் கவிதைகளில் நான் பார்க்கிறேன்.
”கோமாளிகளே
கூட வருகிறார்கள்” என்ற
ஒரு கவிதையில் சீட்டு கட்டு விளையாட்டை பற்றி அவர் பாணியில் எழுதியிருக்கிறார்.
அதில் அவர் வேறு ஏதாவது சேதி சொல்லியிருக்கிறாரா என இதுவரை 5 முறை
படித்துவிட்டேன்.
கவிழ்ந்து கிடக்கையில் பேதங்கள் இல்லை
சீட்டுகளிடையே.
இந்த கடைசி வரி பல விஷயம் சொல்கிறது.
என்னை பல இடங்களில் இழுத்து நிறுத்தி பாராட்டை பெற்ற பின்னரே அடுத்ததுக்கு போக
விடுகிறார் சாம்ராஜ். ஒரே ஒரு உதாரணம் அந்த வகையில் “Canon Fm 10 கேமராக்கள் கிடைப்பதில்லை” என்ற கவிதையில்
நான் மாத்திரமே
மற்றொன்றையும் அறிவேன்
நல்ல பகலில் எடுக்கப்பட்ட
புகைப்படங்களே அவை.
என்ற வரிகள் என்னை wow! சொல்ல வைத்த பல வரிகளில்
ஒன்று. இந்த கவிதையில் தலைப்பே என்னை யோசிக்க வைத்தது.
சிந்திக்க வைத்தவர் “அவள் நைட்டி அணிந்ததில்லை” என்ற கவிதையில் என்னை கண்கலங்க வைத்துவிட்டார். மிகச்
சிறந்த கவிதையாக “நாத்தள்ளத் தொங்கும் புளியமரங்கள்” என்று எனக்கு படுகிறது. மீண்டும்
மீண்டும் அதை படித்துக்கொண்டிருக்கிறேன் கட்டபொம்மனை நினைத்துக்கொண்டே. இப்படி
சொல்லிகொண்டு போனால தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளை பற்றியும் சொல்லலாம். ஆகவே
இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.
சில குறைகள். அவற்றை குறைகள் என்று சொல்வதைவிட என் அறிவிற்கு எட்டாதவை
எனத்தான் கூறவேண்டும். கவிதைகளில் பல இடங்களில் வட்டார விஷயங்கள், வழக்குகள் சில
எனக்கு புரியவில்லை. சாம்ராஜ் சிறந்த படைப்பாளி மட்டுமல்ல சிறந்த படிப்பாளியுமென
கேள்விபட்டிருக்கிறேன். அதை இங்கு காணவும் முடிந்த்து. அவர் படித்தவைகளில் இருந்து
சம்பவங்கள் பாத்திரங்கள்(Characters) சில அவரது கவிதைகளில்
வருகின்றன. அவற்றை பற்றி அறியாததால் சில இடங்களில் என் புரிதல்கள் தடைபட்டன.
கவிதை படிக்கும் ஆசையை தூண்டும் ஒரு கவிதை தொகுப்பு இது. படித்து
முடித்துவிட்டு வேறு யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்
வாங்கிய்துதான், ஆனால் படித்து முடித்தவுடன் என் கலெக்ஷனில் இருக்க வேண்டிய ஒரு
கவிதை தொகுப்பு என்ற முடிவிற்கு வந்திருக்கிறேன். சாம்ராஜின்மீது எனக்கிருந்து
காரணமறியா உறுத்தல் மாறி மதிப்பு கூடியது என்ற உண்மையையும் என்னால் மறுக்க
முடியவில்லை.
சாம்ராஜ் மதுரைக்காராம். தற்போது கேரள வாசம் என கேள்விப்பட்டேன்.
தொகுப்பின் பெயர் : என்றுதானே சொன்னார்கள்
கவிஞர் : சாம்ராஜ்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம், சென்னை
விலை : ரூ. 40