Saturday, 26 April 2014

அழகு முத்தைய்யனார் கோவில் - வேண்டுதல் சிலைகள்




தமிழ்நாடு கடலூர் மாவட்டம் ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் இருக்கிறது அழகு முத்தைய்யனார் ஆலயம். எல்லா ஐய்யனார் கோவில் போலவும் ஊரை விட்டு வெளியே பசுமையான வயல்களுக்கு நடுவே பெரிய மரங்கள் இருக்கும் தோப்பிற்குள் ஐய்யனார் பொற்கிலை அம்பாள் பூரணி அம்பாள் என தன் இரு தேவியருடன் வீரமாக அமர்ந்திருக்கிறார். பெரிய பெரிய குதிரைகளும் 270 வது வருடாமாக கால் வலியை பொறுத்துக் கொண்டு நின்றுகொண்டே இருக்கின்றன. இது வரை எல்லா ஐய்யனார் கோவில்களிலும் பார்க்கும் காட்சிதான் இங்கு. 

ஆனால் தோப்பிற்குள் நுழையும் போதே என்னை ஆச்சர்யப்படுத்திய விஷயம் கோவிலை சுற்றியும் அங்கும் இங்குமாக ஆயிரக் கணக்கில் வைக்கப்பட்டிருந்த சிலைகள். சிறியதும் பெரியதுமாக வரிசை வரிசையாக வித விதமாய் வெவ்வேறு நிறங்களில் பல பல ஆடை அலங்காரங்களில் அத்தனை சிலைகள். ஆச்சர்யம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. இப்படி ஒன்றை நான் இதுவரை நேரில் பார்த்ததில்லை. என்னவென்று விசாரித்தால். ஐய்யனாருக்கு பின்பக்கம் அழகு சித்தர் எனற ஒரு சித்தரின் சந்நிதி இருக்கிறது. இவர் இங்கு இருந்த ஒரு கிணற்றில் ஜல சமாதி அடைந்துவிட்டதாக பூசாரி கூறினார். அந்த கிணறுதான் சந்நிதியாக பூஜிக்கப்படுகிறது. எல்லா சித்தர் கோவிலிலும் இருப்பது போல ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இந்த முன்று கோவில்களையும் சுற்றி வகை வகையான வேண்டுதல் சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. 

இந்த கோவிலின் ஆச்சர்யம் வேண்டுதல் நிறைவேறிய பின்னரே சிலைகள் வைக்கப்படுகின்றனவாம். குழந்தை வேண்டுவோர், திருமணம் நடக்க வேண்டும் என வேண்டுவோர், வீடு கட்ட வேண்டும் என வேண்டுவோர், பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும் என வேண்டுவோர், கை அல்லது கால் சரியாக வேண்டும் என வேண்டுவோர் என பல வகையான வேண்டுதல்கள் நிறைவேறியதற்கு ஆதாரமாக வகை வகையான சிலைகள் அழகாக காட்சி அளிக்கின்றன. ஐய்யனாரின் கம்பீரமும், சிலைகளின் அழகும், சித்தரின் அருளும் கண்டிப்பாக எவரையும் கவரும் . சித்திரை முதல் தேதி வருடாந்திர திருவிழா இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுமாம். திங்கட்கிழமை பக்தர்கள் கூட்டம் நிறைய இருக்குமாம். சிலைகள் அங்கேயே செய்து அங்கேயே வேண்டுதல் நிறைவேற்றபடுவதற்கு ஆதாரமாக பாதி முடிக்கப்பட்ட சிலைகள் அங்கென்றும் இங்கென்றுமாய் கண்ணில் தென்படுகின்றன. சிலைகளில் யாருக்காக அந்த சிலைகள் வைப்பட்டிருக்கிறது என்பதும் ஊர் பெயருடன் எழுதப்பட்டிருக்கிறது. 

நம் பாரம்பரியம் இத்தகைய வழிபாட்டுத் தளங்களின் வழியேதான் அறிய முடிகிறது என்பதால் இந்த கோவில் அதிக ஈடுபாட்டை தருகிறது. இத்தகைய மற்ற கோவில்களையும் தேடிப் பிடித்து விஷயங்களை அறிய வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது.

No comments:

Post a Comment