தமிழகத்தின் தாய் உணவு இட்லி என்றால் தந்தை உணவு தோசை எனலாம்.
அந்த அளவு தமிழகத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு தோசை எனலாம். இட்லி போர் அடிக்குது
என்பவர்கள் அடுத்தது தோசையைதான் தேடுவார்கள். பிள்ளைகள் சரியாக சாப்பிடவில்லையா தோசை
ஊற்றி கொடுத்து உண்ண வைக்கும் வழக்கம் பல வீடுகளில் உண்டு. தோசையில்தான் எத்தனை எத்தனை
வகை. அதற்கு உடன் எத்தனை எத்தனை விதமான சட்னிக்கள், சாம்பார்கள், குருமாக்கள், தூள்(பொடி)
என தோசை பல ருசிகளில் பல ரசனைகளை கொடுக்கும். இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே நெய்
தோசையின் வாசனை மூக்கையும் மசால் தோசையின் சுவை நாக்கையும் தனி தனியாக இழுத்துச் செல்கின்றன.
இப்படியாக தோசையை பற்றி நினைத்துக் கொண்டே தோசையை பற்றி எழுதுகிறேன்.
சின்ன வயதில் சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்த என்னை சாப்பிட வைக்க அம்மா சுட்டு கொடுத்த பூனை பொம்மை
தோசையில் இருந்து என் தோசை நினைவுகள் இன்றும் தொடர்கின்றன. கோதுமை கொள்முதலை அதிகரிக்க
சப்பாத்தியை பற்றி என்ன என்னவோ சொல்லி இந்த அரசாங்கங்கள் ப்ரொமோட் செய்யும் வரை கிட்டத்தட்ட
தமிழகத்தில் எல்லாருக்கும் தோசைதான் ஸ்பெஷலாக இருந்திருக்கும்.
ஹோட்டல்களுக்கு போய் சாப்பிட ஆரம்பிக்கும் முன் எனக்கு தெரிந்ததெல்லாம்
ஒரே ஒரு தோசைதான். அது அம்மா சுடும் தோசை. அதுவும் சில நாள் மெலிதாக இருக்கும், சில
நாள் மொத்தமாக இருக்கும், சில நாள் கருகி இருக்கும். சில நாள் கல்லில் ஊற்றும் போதே
திரட்டிக் கொள்ளும். எப்போதாவது பூனை பொம்மை தோசை வளர்ந்த பிறகும் கிடைத்தது.
சப்பாத்தி சுட்ட பின்னோ அல்லது உருளைக்கிழங்கு பத்தை போட்டு
வறுத்த பின்னோ தோசை ஊற்றினால் தோசை மெலிதாக வராது. தோசை கல்லை கழுவுகிறேன் என நன்றாக
தேய்த்து கழுவிய பின்னர் 2 அல்லது 3 தோசைகள் திரட்டிக் கொண்டுதான் வரும். ப்ரிட்ஜில்
இருந்து தோசை மாவை எடுத்து வைத்து சில்னஸ் போகும் முன்னே அவசர அவசரமாய் தோசை ஊற்றினால்
அது தோசையாக இருக்காது. இப்படி தோசை பல விஷயங்களை சூட்சுமங்களை சொல்லி கொடுத்திருக்கிறது.
எப்போதும் செய்யப்படும் தேங்காய் சட்னி மட்டுமல்ல, தக்காளி
சட்னி(தொக்கு), வெங்காய சட்னி, பொதினா சட்னி, மல்லாட்ட(கடலை) சட்னி என அனைத்து சட்னிகளும்
தோசைக்கு செட் ஆகும். இட்லி சாம்பார், கத்திரிக்காய் சாம்பார், உருளை கேரட் மசித்து
போட்ட சாம்பார், சாதத்திற்கு போட்டுக் கொள்ளும் சாம்பார் என அனைத்து சாம்பாரும் தோசைக்கு
சுவை கூட்டும். துவையல் வகையறாக்களில் தேங்காய் துவையல், பொதினா துவையல், இஞ்சி துவையல்
ஆகியவை தேசைக்கு அருமையான காம்பினேஷன் ஆகும். தூள்(பொடி) வகைகளில் இட்லி தூள், பொட்டுக்கடலை
தூள், மிளகாய் பூண்டு இன்ஸ்டண்ட் பொடி, சென்னாவரத்(மீன் வகை) தூள் என இந்த லிஸ்ட் அதிகம்.
தூளுக்கு ரிபண்ட் ஆயில்னாலும் சரி, நல்லெண்ணெய்னாலும் சரி. நெய்யும் சூப்பராக இருக்கும்.
சிக்கன் குருமா, மட்டன் குருமா, வெஜ் குருமாக்களும் தோசையை புரட்டி சாப்பிட சுவையாக
இருக்கும். மீன் கொழம்பு, இரால் குழம்பு, கருவாட்டுக் கொழம்பு, வத்தக் கொழம்பு ஆகியவையும்
தோசைக்கு என்றால் அதிகமாய் சுவைக்கும்.
அம்மாவின் தோசைக்கு அடுத்தபடியாக நான் அதிகம் ருசித்து சாப்பிட்டது
எங்க தேங்காய்திட்டு ஆயாவின் தோசைதான். அப்போதே அவங்க வீட்டில் பெரிய தோசைக் கல் இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு விடுமுறைக்கு போகும் போதெல்லாம் ஹோட்டல் தோசைகளை போல பெரிய மொறு
மொறு தோசைகள் கிடைக்கும். காம்பினேஷன் மீன் கொழம்பு அல்லது இரால் குழம்பு இருக்கும்
கண்டிப்பாக. அந்த தோசைக்காகவே விடுமுறைக்கு அவர்கள் வீட்டிற்கு போவதுண்டு. அவர்களை
பார்த்து அம்மாவும் அந்த தோசை கல்லை வாங்கி எங்களுக்கு பெரிய மொறு மொறு தோசை ஊற்றி
கொடுக்க ஆரம்பித்தது தனி கதை.
10 வது படிக்கும் போது என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு
அம்மா ஏதோ ஊருக்கும் போயிருந்த போதுதான் நான் நானாக தோசை!!! சுட வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் சுட்ட தோசை எல்லாமே தோசை கல்லின்மீது பாசம் கொண்டு வர மாட்டேன் என சுருட்டிக்
கொண்டு தோசை திருப்பியால நாலு போடு போட்ட பின்தான் வந்தன. பசியின் கொடுமையால் அந்த
புது வகையான தோசையை சாப்பிட்டேன். அன்று முதல் அம்மா சுட்டு கொடுக்கும் தோசை அமிர்தமாக
தெரிந்தது வாழ்க்கை பாடம்!!!
என் நினைவில் இருக்கும் முதல் ஹோட்டல் தோசை விளம்பரம் பார்த்து
விஜிபி இல் அன்று மிகவும் பிரபலமான பேமிலி தோசைதான். அவ்வளவு பெரிய தோசை வேறு எங்கும்
பார்த்தேயில்லை. அதற்கு பிறகு அடிக்கடி வெளியே போக ஆரம்பித்ததால் ஹோட்டல்களில் தோசைதான்
பர்ஸ்ட் ஆர்டர் எப்போதும். கொஞ்சம் கொஞ்சமாக வேறு வேறு விதமான தோசைகளை டேஸ்ட் செய்ய
ஆரம்பித்தேன். எத்தனை விதவிதமான தோசைகள். ரோஸ்ட், நெய் தோசை, நெய் ரோஸ்ட், மசால் தோசை,
பட்டாணி மசால் தோசை என் போய்கொண்டிருந்த வகைகளில் திடீரென்று ரவா தோசை என ஒன்று புதிதாய்
வந்தது. கொஞ்ச நாளைக்கு எங்கு போனாலும் பலருக்கு ரவா இட்லியும் ரவா தோசையும் முதல்
ஆர்டராக இருந்தது. அப்புறம் ஊத்தாப்பம், ஆனியன் தோசை, ஆனியன் ஊத்தாப்பம் என வீட்டில்
மொத்தமாக இருந்தால் வேண்டாம் என சொன்னதை வெளியே ஸ்பெஷலாம் ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தேன்.
இதில் ஊத்தாப்பத்தின் ஸ்பெஷாலிட்டி தனி. அதற்கு மட்டும் அவியல் அல்லது வரை கறி தொட்டுக்க
தருவார்கள். அந்த காம்பினேஷன் தனி சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்து ஊத்தாப்பம்
போல இப்போதெல்லாம் கிடைப்பதில்லை. அப்போதெல்லாம் ஹோட்டல்களிலேயே இட்லிக்கு தனி மாவு
தோசைக்கு தனி மாவு ஊத்தாப்பத்திற்கு தனி மாவு என இருக்கும். புது மாவு இட்லிக்கும்
லேசாக புளித்த மாவு தோசைக்கும் கொஞ்சம் அதிகம் புளித்த மாவு ஊத்தாப்பம் வகையறாவுக்கும்
என வைத்திருப்பார்கள். இட்லி ஊற்றிய பின் கொஞ்சம் மாவை அடுத்த வேளை தோசை மற்றும் ஊத்தாப்பத்திற்கு
என எடுத்து வைத்துவிடுவார்கள். இப்போதெல்லாம் ஷேப்தான் மாறுகிறதே தவிர சுவை ஒன்றாய்தான்
இருக்கிறது. ஏனென்றால் ஒரே மாவில்தான் இட்லி, தோசை, ஊத்தாப்பம்.
ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்தாலும் அவ்வளவு பெரிய தோசைகள்
எப்படி ஊற்றுகிறார்கள் என்பதெல்லாம் பார்த்தில்லை. முதல் முறை பெங்களூருக்கு போன போதுதான்
இதை அறிந்தேன். செல்ப் சர்வீஸ் எனப்படும் உயர்ரக கையேந்தி பவன்களில்தான் கண் எதிரிலேயே
நாம் கேட்டவுடன் தோசை ஊற்றி கொடுப்பதை பார்த்தேன். அட தோசை கல்லை துடப்பக் கட்டையால்
கழுவுகிறாரே என சுத்தம் பற்றிய அக்கரை வந்தது. எல்லா துடப்பக் கட்டைகளும் அசுத்தமானவை
அல்ல என்ற லாஜிக்கும் கிட்டத்தட்ட எல்லா ஹோட்டல்களிலும் அப்படித்தான் தோசைக் கல்லை
கழுவுவார்கள் என்பதும் அப்போதுதான் எனக்கு தெரிந்தது. அதன் பிறகுதான் தோசை ஊற்றும்
போது வரும் இசையை ரசிக்க ஆரம்பித்தேன். அதுவரை தோசையை திருப்பி போடும் போது வரும் சைங்ங்ங்ங்
என்ற ஓசைதான் தெரியும். ஹோட்டல்களில் தோசை சுடும் முன் சூடான கல்லில் தண்ணீர் ஊற்றி
கழுவும் போது உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என கேட்கும் அந்த எக்ஸ்ட்ரா சத்தம் தோசையின் வட்ட வடிமான
அழகு வாசம் சுவையுடன் கூட சேர்ந்து காதுக்கும் இனிமை சேர்க்க ஆரம்பித்தது. காப்பி டபராவுக்கும்
தோசைக்கும் உண்டான தொடர்பும் இக்குதான் தெரிந்தது.
இந்த தோசை தேடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. பெங்களூருவில்
மத்திக்கரே பஸ் ஸ்டாண்ட் அருகில் தினமும் மாலையில் நடமாடும் தோசைக் கடை ஒன்று போடுவார்கள்.
அங்கு தோசைக்காகவே 3 கீ.மீ நடந்து வந்து சாப்பிட ஆரம்பித்தேன் என்றால் என் தோசை மோகம்
புரியும். அது வரை வெள்ளை நிறத்தில் மட்டும் தோசையை பார்த்திருந்த நான் பச்சை சிவப்பு
மஞ்சள் நிறம் என கலர் கலரான தோசைகளை சாப்பிட்டு ருசிக்க ஆரம்பித்தேன். முடக்கத்தான்
கீரை தோசை, கேரட் தோசை, வெந்தய தோசைகள் தான் நினைவில் இருக்கின்றன. அங்குதான் முதன்முதலில்
கொண்டை கடலை மசால் தோசை, பன்னீர் மசால் தோசை சாப்பிட்டேன் அவை இரண்டிற்கும் இன்றும்
நான் அடிமை.
சென்னை வந்த பின் அறிந்து கொண்ட புதுவித தோசை ரோட்டுக் கடையில்
முதலில் சாப்பிட்ட முட்டை தோசை. ஆகா என்ன ஒரு டேஸ்ட். முதல் முறை ருசித்த பின் அடிக்கடி
விரும்பி ருசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் செய்து கொடுக்க சொல்லி சாப்பிட ஆரம்பித்தேன்.
அதுவும் மீன் கொழபிற்கு முட்டை தோசை ஈடு இணையே இல்லை. இதை எழுதும்போது மீன் கொழம்புவின்
வாசமும் முட்டை தோசையின் பெப்பர் சுவையும் கலந்து நாக்கில் உரைக்குது.
மதுரை ஸ்பெஷல் கறி தோசை. ஆகா கிட்டத்தட்ட இதை பற்றி அறிந்த பின் இரண்டு வருட காத்திருத்தலுக்கு பின்னரே மதுரை போக வாய்ப்பு கிடைத்தது. கறி தோசை சாப்பிட்டேன் ஆக வேண்டும் என மழையையையும் ஊருக்கு நேரமாவதையும் பொருட்படுத்தாமல் ருசித்து ரசித்து சாப்பிட்டதை என்றுமே என் தோசை வரலாறு சொல்லும்.
மதுரை ஸ்பெஷல் கறி தோசை. ஆகா கிட்டத்தட்ட இதை பற்றி அறிந்த பின் இரண்டு வருட காத்திருத்தலுக்கு பின்னரே மதுரை போக வாய்ப்பு கிடைத்தது. கறி தோசை சாப்பிட்டேன் ஆக வேண்டும் என மழையையையும் ஊருக்கு நேரமாவதையும் பொருட்படுத்தாமல் ருசித்து ரசித்து சாப்பிட்டதை என்றுமே என் தோசை வரலாறு சொல்லும்.
இவை மட்டுமல்லாமல் வடபழனியில் கிடைக்கும் எண்ணெய் தோசையின்
சுவை அவ்வப்போது வடபழனி திருசெல்வேலி சைவாள் ஹோட்டல் வரை இழுத்து போகும். கோதுமை தோசை,
கேழ்வரகு தோசை, வெஜிடபிள் தோசை என்பதெல்லாம் கோடம்பாக்கம் பிருந்தாவன் ஹோட்டல் காட்டிக்
கொடுத்த தோசை சுவைகள்.
இப்படியெல்லாம் வகை வகையாக தோசையை தேடி தேடி சாப்பிட்டுக்
கொண்டிருந்த நான் கடந்த மூன்று மாதமாக கூண்டிலடைக்கப் பட்ட குருவி போல பக்கத்தில் இருக்கும்
மெஸ்ஸில் கிடைக்கும் சுட்டு வைத்து ஆறிப் போன வரண்ட தோசையை சாப்பிட்டு நொந்து போயிருக்கிறேன்.
இப்படியெல்லாம் அருமை பெருமை வாய்ந்த தோசை என்ற மாபெரும்
உணவை ஒரு சிலர் ரைஸ் பீட்சா என புதிதாக பெயர் சூட்டியிருக்கிறார்கள் என கேள்விபட்டதால்தான்
இந்த காவியம். வேண்டுமென்றால் மைதா ஊத்தாப்பம் என பீட்சாவுக்கு பெயர் மாற்றம் செய்து
பெருமை பட்டுக் கொள்ளட்டும் அவர்கள். தோசைசைசைசைசைங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்…
பல்வேறு நினைவுகளை (ஊத்தப்பம் போல ) புரட்டிப் போட்ட இனிய பதிவு ...
ReplyDeletegramiyum cold pressed oil is my favorite,” says Sara Haas, RD, LDN, a chef in Chicago and spokeswoman for the American Academy of Nutrition and Dietetics. ...Good ennai chekku in chennai has a strong smell when it is opened. The color should be bright brown or gold.Peanuts, peanut butter, and groundnut oil price are filled with heart-healthy monounsaturated and polyunsaturated fats.
ReplyDeletenallennai in english is also known as gingelly oil. It is highly nourishing, healing and lubricating. Other than being used as a flavor enhancing cooking oil.Organic ennai are produced in remarkable diversity by plants, animals, and other organisms through natural metabolic processes. Lipid is the scientific term for the fatty acids, steroids and similar chemicals.All of the fats and cold press coconut oil that we eat are composed of molecules called fatty acids. Biochemically, fatty acids are composed of a chain of carbon atoms connected to one another by chemical bonds..
ReplyDelete