Thursday, 26 January 2012

இது ஏனோ மகிழ்வான குடியரசு தினமாக இல்லை

குடியரசு தினம் என்பது எதற்கு என்ற அளவில்தான் எனது இந்திய அரசியல் அமைப்பின் ஞானம் இருக்கிறது. ஆனால் வருடாவருடம் குடியரசுதினம் சந்தோஷமான நாள். பள்ளியில் மிட்டாய் குடுப்பதில் ஆரம்பித்த சந்தோஷம்அது. ஒரு நாள் விடுமறையில் கிடைக்கும் சந்தோஷம். டி.வியில் வண்ணமயமான வண்டிகள் வரிசையாக போவதை பார்த்து ரசித்த காலங்கள். சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்திற்கும் இந்த வண்ணமயமான வண்டிகளும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகளும் பெரிய வித்யாசம். அணிவகுத்து வரும் டாங்கிகளையும் முப்படையின் அணிவகுப்பு ஆகியவற்றை பார்த்து பெருமை கொண்டதெல்லாம் இன்று அர்த்தமற்றதாக தோன்றுகின்றன.

ஒரு சில வருடங்களாகவே இந்த சம்பிரதாயங்களின் மேல் இருந்த மாயை மறைந்துகொண்டே வருகிறது. அரசியல்வாதிகள் போலியான செய்கைகள், இந்திய அரசியலைப்பின் போலித்தனம் மற்றும் நியாயமற்ற நடவடிக்கைகளால் என பல காரணங்களால் குடியரசின் மேல் இருந்த நம்பிக்கையை வெகுவாக குலைத்துவிட்டது. ஊழல், பணம் இருப்பவன், வல்லவன் வகுத்ததே சட்டம் என உருமாறிவிட்டது இந்த நாடு.

இதையெல்லாம் விட மத்திய அரசின் மௌனம் பல விஷயங்களில் இந்திய அரசின் கட்டமைப்பின் மீதிருந்த கடைசித் துளி நம்பிக்கையையும் தகர்த்துவிட்டதால் இந்த குடியரசு தினம் மகிழ்ச்சியைவிட துக்கமாகவே தெரிகிறது. 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த தவறியது மட்டுமில்லாமல், அதற்கு துணை போனதில் ஆரம்பித்தது ஒரு வெறுப்பு.

பேரறிவாளனை தூக்கில் போட காட்டிய அவசரமும் அக்கறையிலும் இந்த வெறுப்பு கூடியது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைப்பதில் அந்த பகுதி மக்களின் விருப்பத்தையும் மீறி காட்டப்படும் ஆர்வம் பல விஷயங்களை உணர்த்துகிறது. மத்திய அரசாங்கம் பல அயல்நாடுகளின் தொழில் நலத்தை இந்தியாவில் நிலைநிறுத்த உதவும் ஒரு ஏஜெண்ட் போலத்தான் செயல்படுகிறது. தமிழகம் என்று வரும்போது இங்கு வாழும் மக்களின் விருப்பங்களை பற்றி ஏதும் கவலை படாமல் ஒரு ஆதிக்க மனப்பான்மையுடந்தான் மத்திய அரசாங்கம் நடந்துகொள்கிறது. முல்லைபெரியாறு அணை பிரச்சனையில் காலந்தாழ்த்தும் தந்திரத்தின் மூலம் இரு மாநிலத்தவரும் அடித்துக் கொண்டாலும் பரவாயில்லையென்று மௌனம் சாதித்து தப்பித்துகொள்கிறது. காங்கிரஸ் ஆளும் கேரளத்திற்கு பாதிப்பு ஏற்பக்கூடாது என்பதனால் தமிழகத்திற்கு பாதகமான பல விஷயங்களை இந்த விஷயத்தில் செய்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

இதையெல்லாம் விட மிகவும் மனதை உறுத்தும் விஷயம். மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதையும், கொல்வதையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் மத்திய அரசின் செயலை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதை போன்ற பல சம்பவங்களால் இந்திய கட்டமைப்பின் மீது இருந்த நம்பிக்கை போய் வெறுப்புதான் வருகிறது. பிறகு ஏன் இந்த குடியரசு தின கொண்டாட்ட சம்பிரதாயங்கள். அதற்கும் நமது வரிப் பணத்தை செலவு செய்வார்கள். அந்த செலவிலும் ஊழல் செய்வார்கள்.

Tuesday, 24 January 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் வாசிப்பு

நான் நாவல்களையும், புத்தகங்களையும் படிப்பதை நிறுத்தி வெகு நாட்களாகிவிட்டது. மீண்டும் எழுத ஆரம்பித்து சுமார் ஒரு வருடம் கழித்து, பலருடைய அறிவுரையை ஏற்றும் என் மனதின் உந்துதலாலேயும் மீண்டும் படிக்க முடிவு  செய்தேன். அதற்கு வகை செய்ய எனது தந்தையின் அலமாரியில் அடுக்கி வைத்திருந்த சில புத்தகங்களை வெளியே எடுத்து வைத்திருந்தேன். புத்தக கண்காட்சியும் வந்தது. வழக்கமாக புத்தக கண்காட்சியில் வாங்குவது போல நிறைய புத்தகங்களை வாங்கினேன். நானும் ப்ரவீணும்(எனது நண்பர்) சேர்ந்து சுமார் 5000ரூ புத்த்கம் வாங்கியிருக்கிறோம். இவை இல்லாமல் என் மகளுக்கு தனியாக் வாங்கினேன். 

சரி புத்தகங்களை வாங்கி வந்து அடுக்கியாச்சு. படிக்க வேண்டுமே. படிப்பதில் ஆர்வம் பிறக்கும் வரை நாவல்கள் படிக்க முடியாது. ஆகையால் சிறு கதைகளில் ஆரம்பித்தேன். 

ஒரு நாள் முடிவு செய்து ஜெயகாந்தனின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் ஆரம்பிக்கிறேன் எனது படிக்கும் பழக்கத்தை. பழைய கதைதான். அந்த காலத்துக் கதைதான். தெளிவாக தொய்வில்லாமல் போகிறது. நான் ஜெயகாந்தனை இதுவரை படித்ததில்லை. கங்கா என்ற நாயகியின்(நாயகனும் அவளே : முக்கிய பாத்திரம் - எனது ஆணாதிக்க புத்தி) பிராமண பெண்ணின் பார்வையில் கதை பயனப்படுகிறது. கிட்டத்தட்ட 6-7 பகுதி வரை கங்காவைப் பற்றியே கதை. வேறு பாத்திரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் எந்த தொய்வும் இல்லாமல். நான் இலைக்கியவாதியில்லை. ஆகவே கதையோடு பயனப்படும்போது நான் அனுபவித்ததை மட்டும்தான் இங்கே குறித்து வைக்கிறேன். எதையும் ஆராயவில்லை. அவள் யார். அவளின் தற்போதைய இந்த நிலைக்கு காரணமான சம்பவம். அதை தாண்டி அவள் இன்று இந்த நிலைக்கு எப்படி வளர்ந்தாள். இதனூடே அவளது தாய் கனகா, அண்ணன், மாமா, மற்றும் அந்த எழுத்தாளர் ஆர்.கே.வி அறிமுகங்கள். கடந்தகாலத்தை நிகழ்காலத்தில் தேடி நிகழ்காலத்தில் கங்கா பிரபுவை கண்டுபிடிக்கும் வரை அவள்மட்டும்தான் கதையில். 

அதன் பின்னரும் அவள் மட்டும்தான் கதை முழுதும். படம் பார்க்கும் பழக்கத்தில் காட்சிகளை ஓட விட்டே நாவலை படிக்கிறேன். எந்த ப்ரேம் எடுத்தாலும் அதில் அவள் இருக்கிறாள். தன் வாழ்க்கையினை சிதைத்தவனை சந்திக்கும் தைரியம் அதன் பின் பிரபுவோடு பழகுவது, அவனது வீட்டுக்கு சென்று பிரபுவின் மனைவி பத்மா மற்றும் மகள் மஞ்சுவுடன் பழகுதல் ஆகியவை அழகாக இருக்கிறது. மஞ்சுவுடன் நெருங்கி பழகுதல் இனிமை. பிரபுவுக்கும் கங்காவுக்குமிடையே ஏற்படும் இந்த நட்பு அல்லது உறவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. அன்றைய காலக் கட்டத்தில் அது எல்லை கடந்த உறவாக பொருந்தா உறவாக இருந்தாலும் அதில் எந்த பிசகலும் இல்லாமல் அத்தகைய ஒரு பெண்ணின் நட்பு எனக்கு கிடைக்காதா என ஏங்க வைக்கிறாள் கங்கா. அந்த ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது பிரபுவின் தவறுகளையும் புலம்பல்களையும் அவள் அனுகும் முறை. கதைதான் என்றாலும் பிரபுவின் மீது பொறாமை ஏற்படுகிறது.

இப்படியாக் இனிதாக போன கதை ஏனோ இறுதியில் திருப்பங்களோடு ஒரு சோகத்தில் கங்கா பிரபுவின் பிரிவில் முடிகிறது. ஆசிரியர் ஏதோ அடுத்த நாவலை துவங்க வேண்டும் என்ற அவசரத்தில் இறுதி பாகங்களை எழுதியது போல நான் உணர்கிறேன். கங்காவை பிரபுவிடமிருந்து பிரித்து அவளை குடிகாரியாகவும் கெட்டவளாகவும் மாற்றி கதையை முடித்திருக்கிறார்.

அந்த காலத்து சென்னை நகரம், பழக்க வழக்கங்கள், பிராமணர்களின் வழக்கங்கள்(பிராமனர்களை தாண்டி எழுத்தாளர் போகாததால் மற்ற ஏதும் தெரியவில்லை), அன்றைய பெண்களின் மனநிலை இப்படி பல விஷயங்கள்  நன்கு அறிந்து கொள்ள முடியுகிறது.

பிரபுவும், கங்காவின் குடும்பமும், இந்த சமூகமும் அவளுக்கு இழைத்த கொடுமையை எண்ணி வருந்துகிறது என் மனம். அப்படி ஒருத்தி என் வாழ்வில் கிடைக்க மாட்டாளா என்ற எண்ணத்தை என்னுள் ஆழமாக ஏற்படுத்துகிறாள் இந்த கங்கா.

நிறைய படிக்க வேண்டும் என்ற எனது ஆவலை சரியாக தூண்டிவிட்டிருக்கிறது இந்த நாவல். இந்த நாவலை ஆரம்பித்து முடிப்பதற்குள் கண்ணதாசனின் வனவாசத்தை ஒரே மூச்சில் ஒரு இரவில் படித்து முடித்தவிட்டு அதற்காக நானே என்னை பார்த்து வியந்து கொண்டேன். அடுத்தது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமா அல்லது மு.வ வின் அகல் விளக்கா என்ற போட்டி மனதிற்குள்... எதை படிக்கப் போகிறேனோ??

Friday, 20 January 2012

மீண்டும் கிடைத்த நட்பு

அது உறவாக இருந்தாலும் நட்பாக இருந்தாலும் ஒரு சிலர் காரண்மே இல்லாமல் மனதுக்கு நெருங்கியவர் ஆகிவிடுகின்றனர். அப்படி நெருங்கியவர்களின் செயல்கள், வருத்தங்கள், கோவங்கள், வார்த்தைகள் என் எல்லாமே நம்மிலும் நமது செயலிலும் ஒரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்துகின்றன.

இப்படி ஒரு நட்பு திரு.முத்துபிரகாஷுடன் ஏற்பட்டது.மிகுந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கொடுத்த நட்பு அது. சில காரணங்களால் பிரிந்தோம்.

அவர் மீண்டும் நேற்று என்னை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. அவருடைய அலைபேசி அவரது மனம் வரம் கொடுத்தால் மட்டுமே உயிர்பெற்று நம்மை அழைக்கும். அலைபேசியில் இல்லாவிட்டாலும்கூட gmail chat இல் அவருடன் நேற்று இந்த 3 மாதகால ஏக்கம் தீர பேசியதில் மிக்க மகிழ்ச்சி. இது தொடரும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை தினமும் நகர்த்தி செல்கின்றது.



Thursday, 12 January 2012

என்ன எழுதப் போகின்றேன்

புதிதாய் ஒரு ப்ளாக்.

என்ன எழுதப் போகின்றேன் இதில். தினமும் என்னை சுற்றி பல விஷயங்கள் நடக்கின்றன. நான் பார்க்கும் மனிதர்கள், நிகழ்வுகள், கேள்விப்படும் சம்பவங்கள், படிப்பவை என பல சுவரஸ்யமான விஷயங்கள் என்னை சுற்றி நடக்கின்றன. அவற்றை இங்கே பதிவு செய்ய முனைகின்றேன்.

எனது எழுத்து திறமையை வளைத்துக்கொள்ள, சீரமைக்க முடியுமா என பார்க்கிறேன்.ஒவ்வொரு வருடமும் டைரி எழுத ஆரம்பித்து சனவரி மாதத்தை தாண்டி எதையும் எழுதியதில்லை. என் அம்மாவிற்கு அடுத்த வருடத்தில் வீட்டுச் செலவு கணக்கு எழுதத்தான் என் டைரிகள் பயன்பட்டன. இதுவும் அதுபோல முடியாமல் தொடர வேண்டும் என் விரும்புகிறேன். பார்ப்போம் இது எதுவரை செல்கிறது என்று.

இதை சிறு காலம் என்னால் சரிவர எழுத முடிந்தால் முக்கியமாக மற்றவர்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்குமானால் எழுத முடிவு செய்திருக்கும் மற்ற விஷயங்கலை தொடரலாம்.